உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!என் மகன் படிக்கும் பள்ளியில், ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும், பெற்றோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வர். ஒவ்வொரு ஆண்டும், பள்ளி நிர்வாகம் ஒரு தீர்மானம் எடுக்கும். இம்முறை, மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களால் ஆன டிபன் பாக்ஸ் மற்றும் வாட்டர் பாட்டிலை தவிர்த்து, ஸ்டீலால் ஆன பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை உபயோகிக்க வலியுறுத்தி, அதை, பெற்றோரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தாலும், நடைமுறையில் அதை செயல்படுத்த முடிவதில்லை. இந்த வழியிலாவது பின்பற்றலாமே என்று, பள்ளியின் இம்முடிவை, அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.நல் ஒழுக்கம், நற் சிந்தனை இவற்றுடன் சுற்றுசூழலை பாதிக்காத வகையில் பொருட்களை பயன்படுத்தவும், மாணவப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.இதனால், கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் குறையும்; மற்ற பள்ளிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தால், நன்மை பயக்குமே!— சங்கீதா பிரபு, திருச்சூர். சொல்லித் தர வேண்டும்!என் மகனின் பள்ளியில், குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. அதற்கு செல்ல விரும்பிய என் மகன், அதற்கான கட்டண தொகையைக் கேட்டான்.கட்டணத்தை செலுத்த ஒரு மாதம் அவகாசம் இருந்தது. எனவே, அவனிடம், 'உன் பாக்கெட் மணியுடன் தினமும், 20 ரூபாய் சேர்த்து தருகிறேன்; அதை, வேற எந்த செலவும் செய்யாமல் சேர்த்து வெச்சு, ஒரு மாதத்துக்கு பின் ஸ்கூல்ல கட்டிடு...' என்றேன்.அவனும் சம்மதித்து, கண்ணும் கருத்துமாக பணத்தை சேர்த்தான். 30வது நாள், அவன் கையில் கணிசமான பணம் சேர்ந்திருந்தது. அதை, சுற்றுலா கட்டணமாக செலுத்தியதோடு, மீதி தொகையுடன், சந்தோஷமாக சுற்றுலா சென்று வந்தான்.சிறு வயது முதலே, குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை சொல்லித் தரவேண்டும்; அது, பிற்காலத்தில் வீண் செலவுகள் செய்வதை தவிர்க்க உதவும்!— எஸ்.சந்திரசேகரன், செஞ்சி.பேச்சு துணைக்காக முதியோர் இல்லம்!சில வாரங்களுக்கு முன், முதியோர் இல்லம் சென்றிருந்த போது, முதியவர் ஒருவரை சந்தித்தேன். ஓரளவு வசதியுடன் வாழ்ந்த அவருக்கு, ஒரு ஆண், இரு பெண் என, மூன்று பிள்ளைகள்; அனைவருக்கும், திருமணம் ஆகி விட்டது.தொழில் நஷ்டம் மற்றும் மனைவியின் திடீர் மரணம் என, அடுத்தடுத்து துன்பங்கள் தாக்க, நிலைகுலைந்து போனவர், மாறுதலுக்காக, மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற மகன், மொட்டை மாடியில் உள்ள தனி அறையில், சகல வசதிகளும் செய்து கொடுத்து, இவரை தங்க வைத்துள்ளார்.மூன்று வேளை உணவு, டீ மற்றும் காபி என, அனைத்தும் பணிப்பெண் மூலம், அவர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மகன், மருமகள், பேரன், பேத்திகள் என, அனைவரும் அவரவர் உலகத்தில், பிசியாகவே இருந்துள்ளனர்; எப்போதாவது, இவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு செல்வாராம்.எல்லாம் இருந்தும், மனம் விட்டு பேச, ஒருவரும் இல்லை; தனித் தீவில், தனிமையில் சிக்கி கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.அதனால், மகனிடம் சொல்லி, வீட்டை விட்டு வெளியேறியவர், கையிருப்பு பணத்தை, வங்கியில் போட்டு, முதியோர் இல்லம் வந்திருக்கிறார்.இப்போது இங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனராம். அவர்களுடன் மனம் விட்டு பேச, கருத்துகளை பரிமாறி கொள்ள என, பொழுது மகிழ்ச்சியாக செல்வதாக தெரிவித்தார்.முதியோர் இல்லத்திற்கு வரும் முதியோருக்கு, வறுமை, பிள்ளைகளின் புறக்கணிப்பு என, பல காரணங்கள் இருக்கிற சூழலில், மனம் விட்டு பேச, ஆள் இல்லை என்ற இந்த விஷயமும், புதிதாக அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.— பா.ஜெயசித்ரா பாண்டிச்செல்வம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !