இது உங்கள் இடம்!
பெண்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்!என் உறவினர் ஒருவர், வார இறுதியில், தன் நண்பர்களுடன் உற்சாக பானம் சாப்பிட்டு, சந்தோஷமாக பொழுதை கழிப்பது வழக்கம்.ஒருநாள், அவ்வாறு நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்த நேரத்தில், அவர்களில் ஒருவன், 'ஒரு பெண், சேலை கட்டும் முறையை வைத்தே அவள் எப்படிப்பட்டவள் என்பதை கண்டுபிடித்து விடலாம்...' என, உளறியுள்ளான்.உறவினரும், 'எப்படி...' என, ஆர்வமுடன் கேட்க. 'தொப்புள் தெரிய சேலை கட்டினால், அவளுக்கு கணவனை தவிர, வேறு ஆண்களுடனும் தொடர்பு இருக்கும்...' என்று, சொல்லியுள்ளான்.வீட்டுக்கு வந்து, தன் மனைவியை பார்த்த உறவினருக்கு, அதிர்ச்சி. ஏனெனில், நண்பன் சொன்ன ஸ்டைலிலேயே சேலை கட்டியிருந்துள்ளார். அப்படியானால், தன் மனைவிக்கு, வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்குமோ என நினைத்து, மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டிருக்கிறார். விஷயம் அறிந்த அவர் மனைவி, கொதித்து போய், பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார்.குடிமகன்களே... 'ஓசி'யில் சரக்கு கிடைத்தால், வயிறுமுட்ட குடித்து, பேசாமல் வரவேண்டியது தானே... அதை விட்டு, ஜோசியம் சொல்கிறேன் என்று வாய்க்கு வந்ததை சொல்லி, குடும்ப பெண்கள் மீது வீண் பழி போடலாமா... தங்களின் உடல்வாகு மற்றும் வசதிக்கேற்ற மாதிரி சேலை கட்டுகின்றனர், பெண்கள். அதில், இப்படியும் குற்றம் கண்டுபிடிப்பது என்ன நியாயம்!— எஸ்.கே.ராமசாமி, சென்னை.ஆதாயம் இல்லாமல்...'நுாறு ரூபாய் விலை உள்ள ஒரு பொருள், 20 ரூபாய்க்கு கிடைக்கிறதென்றால், ஒன்று பொருளில் கோளாறு இருக்க வேண்டும் அல்லது அதை விற்பவரிடம் கோளாறு இருக்க வேண்டும்...' இது, என் தகப்பனார் அடிக்கடி உபதேசிக்கும் ஒரு வார்த்தை. கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு விளம்பரம், என் தகப்பனாரின் உபதேசத்தை தான் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.அறுபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பட்டுச் சேலையை, 25 ஆயிரம் ரூபாய்க்கு தருகின்றனராம். அந்த, 25 ஆயிரம் ரூபாய்க்கும் கடனுக்கு ஏற்பாடு செய்து தருவராம்.பிரம்மிப்பாக இருக்கிறதல்லவா? கொஞ்சம் யோசியுங்கள், இன்றைக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக சொல்லும் அந்த பட்டுச் சேலையை, இதுவரை, 65 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்பனை செய்திருக்கின்றனர் அல்லவா? அதாவது, ஒரே ஒரு சேலையில், 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்து விற்றுள்ளனர்.இன்னும் சற்று ஆழமாக சிந்தியுங்கள். எந்த வியாபாரியும், லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க முயல மாட்டார். ஆக, அந்த, 25 ஆயிரம் ரூபாயிலும் குறைந்தபட்சம், 5,000 ரூபாய் நிச்சயம் லாபம் இருக்கும். ஆக, அந்த, 65 ஆயிரம் ரூபாய் விலை சீட்டு போட்டு விற்று வந்த பட்டுச் சேலையின் உண்மையான மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே.'ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார்...' என்றொரு பழமொழி உண்டு. பட்டுச் சேலைகளின் மீதும், தங்க நகைகளின் மீதும் ஆசைப்படும் அம்மணிகளே... கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, கைக்காசை இழந்து, ஏமாந்து போகாதீர்கள். கவனமாக, எச்சரிக்கையாக இருந்து, உங்கள் சேமிப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.— வசந்தா லட்சுமி நாராயணன், கருணாநிதி நகர்.உடல் நலனை கெடுக்கும், 'ஆன்லைன்' உணவு!தற்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில், வீடு அல்லது பணிபுரியும் இடத்தில் இருந்தபடியே, மொபைல் போன் செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து, இருக்கும் இடத்திற்கு வரவழைத்து உண்பது, சர்வ சாதாரணமாக நடக்கிறது. டெலிவரி செய்யும் இப்பணியை பகுதி நேரமாக செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர், பல இளைஞர்கள். நான் குடியிருக்கும் பகுதியில், சில தினங்களுக்கு முன் நான் கண்ட நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பிரபல, 'ஆன்லைன்' செயலியில் டெலிவரி செய்யும் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய உணவு பொட்டலத்தை பிரித்து, அவரது நண்பருடன் சிறிது எடுத்து சாப்பிட்டு, மீதியை கவரில் போட்டு, ரப்பர் பேண்ட் கட்டி, 'பேக்' செய்து கொண்டு சென்றார். இது பற்றி அந்த பிரபல கம்பெனியில், 'டெலிவரி' செய்யும் பணியில் இருக்கும் என் நண்பரின் தம்பியை கேட்டபோது, அவர் சொன்ன தகவல் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்பாலும், கல்லுாரி மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்யும் இந்த கம்பெனியில், இது போன்ற நிகழ்வுகள் மிக சாதாரணமாக நடக்கும் என்றும், இன்னும் சில ஓட்டல்களில் பழைய, தரமற்ற மற்றும் மீந்து போகும் உணவுகளை சூடு செய்து, 'ஆபர்' என்ற பெயரில் தள்ளி விடுவர் என்றும் கூறினார். நம்பி உண்ணும் மக்களை ஏமாற்றி, அவர்கள் ஆரோக்கியத்தில் விளையாடும் சில சுயநலம் கொண்ட உணவகங்கள் மற்றும் டெலிவரி செய்யும் நபர்களிடமிருந்து தப்பிக்க கீழ்கண்ட வழிகள் உள்ளன.*உணவகங்களிடம், உணவுகளை, 'சீல்' செய்து அனுப்பும்படி வற்புறுத்த வேண்டும் *மிகவும் நம்பகமான உணவகங்களிடம் இருந்து மட்டுமே, ஆர்டர் செய்ய வேண்டும். முடிந்தால், ஒருமுறை நேரில் சென்று, உண்மை நிலவரத்தை தெரிந்து வரலாம்* இதை எல்லாம் விட மேலான வழி என்னவென்றால், சிரமம் பார்க்காமல், மார்க்கெட்டுக்கு சென்று, தேவையான காய்கறிகளை வாங்கி வந்து, அம்மாவிடமோ, மனைவியிடமோ கொடுத்து, கூடமாட சமையலில் ஒத்தாசை செய்து, வீட்டிலேயே சமைத்து உண்பது நல்லது!— பா.மு.சுரேஷ், சென்னை.பிளாஸ்டிக் பை இனி வேண்டாம்!தனியார் கம்பெனியில் பணிபுரியும் நண்பர் ஒருவரை காணச் சென்றிருந்தேன்; திரும்பும்போது, சாக்கு மற்றும் துணி பை என, இரண்டு பைகள் தந்தனர். பிளாஸ்டிக் பை உபயோகத்தை தவிர்ப்பதற்காக, அந்நிறுவனம், ஊழியர்களுக்கு, தலா இரண்டு சாக்கு பை மற்றும் துணி பை தந்ததாகவும்; மேலும், கம்பெனிக்கு வருவோருக்கும் இதுபோல் இரண்டு பைகள் கொடுத்து, 'இனி, இப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...' என, அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர் என, கூறினார் நண்பர். சமூக நலனில், அந்நிறுவனம் கொண்டுள்ள அக்கறையை எண்ணி வியந்து, பாராட்டினேன்.இதேபோல் மற்ற கம்பெனி நிர்வாகங்களும், ஊழியர்களுக்கு, தம் செலவில், துணி மற்றும் சாக்கு பை வழங்கி, பிளாஸ்டிக், 'கேரி பேக்' உபயோகத்தை தடுக்க உதவலாமே... செய்வரா?— உ.குணசீலன் திருப்பூர்.