இது உங்கள் இடம்!
பயிற்சி வகுப்பிற்கு ஆர்வம் காட்டலாம்!நண்பர் ஒருவர், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மகனுடன், அரசுடமை வங்கி முன் நின்று கொண்டிருந்தார். 'மகனுக்கு சேமிப்பு கணக்கு துவங்க வந்தீர்களா...' என்று கேட்டேன்.'சேமிப்பு கணக்கை சில ஆண்டுக்கு முன்பே துவங்கியதுடன், 'பான் கார்டும்' வாங்கி விட்டேன்...' என்றார், நண்பர்.தொடர்ந்து பேசிய நண்பர், 'வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில், பல்வேறு தலைப்புகளில் அவ்வப்போது, இலவசமாக பயிற்சிகளை நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம், ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சியை நடத்த உள்ளனர். அப்பயிற்சியில், என் மகன் கலந்துகொள்ள, விண்ணப்பம் கொடுக்க வந்தேன்... 'மேலும், காளான், கோழி, தேனீ, பால் மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட சில பயிற்சிகளை, இந்த வங்கியின் வாயிலாக ஏற்கனவே முடித்துள்ளான்... படிப்பின் இடையே, 'கம்ப்யூட்டர், கேட்டரிங்' என, கற்றுக்கொண்டால், முடித்துள்ள பயிற்சியை காட்டி, வங்கி கடன் பெற்று, சுய தொழிலும் துவங்கலாமே...' என்றும் கூறினார்.படிப்பை தாண்டி, துணை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும், என் நண்பரையும், ஆர்வமுடன் பல்வேறு பயிற்சிகளுக்கு சென்று வரும், அவரது மகனையும் பாராட்டினேன்.கல்லுாரியில் படிக்கும் மாணவர்களே... படிக்கும் காலத்தில், மொபைல் போன், சினிமா, கிரிக்கெட் என, நேரத்தை செலவிடாமல், இதுபோன்ற இலவச பயிற்சிக்கு சென்று, சான்றிதழை பெறலாமே; படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், சுயதொழில் செய்து சம்பாதிக்கலாம்!— சோ.ராமு, திண்டுக்கல்.மாற்றத்தை நோக்கி...என் அண்ணன் பெண்ணுக்கு, கடந்த நவம்பரில், தலை தீபாவளி. உறவினர் அனைவரும், உற்சாகமாக பங்கேற்றோம். தலை தீபாவளிக்கு பட்சணங்கள், புது ஆடைகளுடன் மாப்பிள்ளை - பெண்ணை வரவேற்றோம். பெண்ணும், மாப்பிள்ளையும் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும், தீபாவளி பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்ததை அறிந்து, வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஆண்கள் அனைவருக்கும், அவரவர் அளவிற்கேற்ப ஒரே நிறத்தில் குர்தா. ஒவ்வொரு குடும்பத்திற்கும், இரண்டு செம்பு டம்ளர், செம்பு தண்ணீர் பாட்டில். பணிப்பெண்ணுக்கு, சல்வார், பட்டாசு மற்றும் இனிப்பு என, அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் தந்தனர்.'பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு, நாங்கள் தான் சீர் செய்ய வேண்டும். அது தான் பாரம்பரியம்...' என்றார், மூத்த உறவினர் ஒருவர். அதை, சம்பந்தி மறுத்தார்...'உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாட வேண்டிய நல்ல நாள் தீபாவளி. ஆனால், பல சந்தர்ப்பங்களில் பாரம்பரியம், சம்பிரதாயங்களை பின்பற்றுகிறோம் என, பெண்ணை பெற்றவர்களை, பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துவது போல ஆகி விடுகிறது. உங்கள், அன்பையும், வாழ்த்துக்களையும் மட்டுமே, என் பிள்ளை எதிர்பார்க்கிறான்...' என்று கூறி, வியக்க வைத்தார், சம்பந்தி. 'இன்று, எங்களுக்கு தலை தீபாவளி. இந்த மகிழ்ச்சியை, என் செலவில் தான் கொண்டாட வேண்டும்...' என்று கூறி, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், மாப்பிள்ளை. அதன்படி, எங்கள் அனைவருக்கும் நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து, மாலையில், சர்கார் திரைப் படம் என, அசத்தினார். மகன் செய்ததை, அவர்கள் பெற்றோரும் ஆமோதித்து வரவேற்றது, எங்களை திக்கு முக்காட வைத்தது. அன்றைய அனுபவம், இளைஞர்களை பற்றிய என் சிந்தனையை அடியோடு மாற்றியது. இக்கால இளைஞர்கள், வெறும் ஆட்டம், பாட்டம் என, கொண்டாடி தீர்ப்பவர்கள் அல்ல; சம்பிரதாயம் குறித்து ஆழமான பார்வை உடையவர்கள்... நல்லவர்கள்... பெருந்தன்மையானவர்கள்... மாற்றத்தை நோக்கி முன்னேறும் இத்தலைமுறையைப் பார்த்து, நாம் தான் மாறிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.— ஆர்.ஜே.சிவப்பிரசாத், சென்னை.பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க...கடந்த பல ஆண்டுகளாகவே, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி, இப்போது பயன்பாடு அதிகமாகி விட்டது. மண்ணும், நீரும் மாசடைந்து போனதால், அரசே இதற்கு, அடுத்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. தடைக்கு பின்னரும் இது, திருட்டுத்தனமாக, 'குட்கா' வியாபாரம் போல் நடக்காது என்பது என்ன நிச்சயம்!பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், கப்பல் மூலம் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அரிசி வடிவில் இருக்கும், அந்த பிளாஸ்டிக் குறுணைகளில் தான், இவை தயாரிக்கப்படுகிறது.பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க, அரசு நினைப்பது, மிகவும் வரவேற்க கூடியது. அதே நேரம், பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கும், தடை விதிக்க வேண்டும். மூலப் பொருள் இருந்தால் தானே, பைகள் தயாரிக்க முடியும்.எனவே, அரசு, இந்த பிளாஸ்டிக் மூலப் பொருள் இறக்குமதியை தடை செய்தால், பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாடாக மாறி விடும்; செய்வரா!டி.ஜெய்சிங், கோயம்புத்துார்.