இது உங்கள் இடம்!
அரசியல்வாதியின் புதிய பாதை!சமீபத்தில், திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டேன். விழாவிற்கு வருகை தந்திருந்த அரசியல்வாதி ஒருவர், மணமக்களை வாழ்த்தியதோடு, திருமணத்திற்கு வந்திருந்த நபர்களை, தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ளுமாறு அழைத்தார்.இதை கேட்டு, வாய் பிளந்த நம் மக்கள், போட்டி போட்டு, அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் வேதனையான விஷயம் என்னவெனில், மாற்று கட்சியை சேர்ந்த நபர் ஒருவரும், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்.பின், அந்த அரசியல்வாதி பேசும்போது, 'எப்போதும் உங்களோடு நான் இருப்பேன்; உங்களில் ஒருவராக என்னை நினைத்து, உங்கள் வீட்டு விசேஷத்திற்கும் என்னை அழையுங்கள்... நான் கண்டிப்பாக வருவேன்...' என்றார்.அரசியல் ஆதாயத்திற்காக நன்றாகவே நடிக்கிறார் என்பது புரிந்தது. இப்போதெல்லாம், கட்சி கூட்டத்திற்கு பொது மக்கள் அதிகம் செல்வதில்லை. ஆகையால், இது போன்று கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, ஓட்டு பிச்சை கேட்கும் முறையை, அரசியல்வாதிகள் கையாண்டு வருகின்றனர். நண்பர்களே... வெளுத்ததெல்லாம் பால் என நம்பி, விஷத்தை குடிக்க வேண்டாம்; ஜாக்கிரதை!மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.தானத்தில் சிறந்தது துணி பை தானம்!பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றிற்கு சென்றிருந்தேன். கோவில் முகப்பில், ஒருவர், மூட்டை நிறைய துணி பைகளை தைத்து வைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக வழங்கிக் கொண்டிருந்தார். துணிப் பையை வாங்கிய அனைவரும், மடித்து வைத்து, சாமி தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது, அந்த துணி பையிலேயே, பிரசாதம் முதல், அங்கு விற்கும் பொருட்களையும் வாங்கினர்.தானம் செய்து கொண்டிருந்தவரிடம் காரணம் கேட்டதற்கு, 'நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைப்பதற்காக, இந்த பையின் இரு பக்கமும், உணவு மற்றும் தங்கும் விடுதியின் விளம்பரம் அச்சிட்டிருப்பதால், கோவிலுக்கு வருவோர், எங்கள் விடுதியில் தங்க முற்படுவர். விளம்பரமும் ஆச்சு... இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் நெகிழிப் பைகளை குறைத்த மாதிரியும் ஆச்சு...' என்றார். இப்போதைய இயற்கை சூழலை பாதுகாக்க, 'தானத்தில் சிறந்த தானம் துணி பை தானம்...' தான், என்று பாராட்டி, புறப்பட்டேன்.— கா.கவிப்ரியா, கஞ்சனுார்.மொபைல் போனை இரவல் தருகிறீர்களா?பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, 'டிப்-டாப்' ஆசாமி ஒருவர், என்னிடம், 'சார்... என் மொபைலில், 'சார்ஜ்' இல்லை. 'அர்ஜென்டா' ஒரு போன் செய்யணும். உங்கள் மொபைல் போனை கொஞ்சம் தாருங்கள்...' என்றார். மொபைல் போனை கொடுத்தேன். சற்று தள்ளி நின்று, ரகசிய குரலில் பேசி, மொபைல் போனை திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டு போய் விட்டார்.மறுநாள், என் மொபைலில் ஓர் அழைப்பு வந்தது. 'வாங்கிய கடனை ஒழுங்காக கொடுத்துடு... என்னை ஏமாற்றாதே... நான் பொல்லாதவனாக மாறி விடுவேன்... ஒழுங்காக, என் வங்கி கணக்கில் பணத்தை கட்டி விடு...' என்று கூறி, நான் யார் என்பதை கூற விடாமல், பலவாறாக திட்டினார், பேசியவர்.பின், மொபைல் போனை ஆராய்ந்ததில், முதல் நாள் போனை கொடுத்து, உதவி செய்ததற்கு, கிடைத்த பலன் தான் அது என, புரிந்தது. தான் தப்பித்துக் கொள்ள, இரவல் போன் வாங்கி பேசும் சிலர், இப்படி பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். ஆதலால், அறிமுகம் இல்லாதோருக்கு, மொபைல் போனை கொடுத்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்.ம.நா.ச.கிருஷ்ணன், புதுச்சேரி.