இது உங்கள் இடம்!
எத்தனை விதமாக ஏமாற்றுவரோ!வீட்டு உபயோக பொருட்கள் விற்கும், 'ஏஜன்சி'யை நடத்தி வரும் நண்பரை சந்திக்க போனேன். அன்று, முகூர்த்த நாள் என்பதால், 'டிப்-டாப்' ஆசாமி ஒருவர், கடைக்கு வந்தார். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, 'ஆர்டர்' செய்து, 'நானே வேனை அழைத்து, ஏற்றிக் கொள்ளட்டுமா...' என, கேட்டார்.'முதலில் பணத்தை கட்டுங்கள்...' என்றார், நண்பர்.பணத்தை தேடுவது போல் பாவனை செய்து, 'பணப் பையை மாற்றி எடுத்து வந்து விட்டேன். மணப்பெண்ணின் அப்பா, திருமண மண்டபத்தில் இருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் நீங்கள், என்னுடன் வந்தால், பணத்தை பெற்றுக் கொள்ளலாம்...' என்று கூறினார்.அந்த ஆசாமியிடம், 'மண்டபத்தின் பெயரை சொல்லுங்கள்...' என்றார், நண்பர்.உடனே, அந்த ஆசாமி, போனில் அழைப்பு வருவது போல் பாவனை செய்து, பேசியபடியே அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி பறந்தார்.நண்பரிடம், 'அவர், ஏன் இப்படி ஓடுகிறார்?' என, கேட்டேன்.'இன்று, முகூர்த்த நாள். எல்லா மண்டபத்திலும், திருமணம் நடக்கும். அந்த ஆசாமியுடன் நாம் செல்லும்போது, ஏதோ ஒரு மண்டபத்தை கண்பித்து, 'இந்த மண்டபம் தான்... உள்ளே செல்லுங்கள்... வண்டியை, 'பார்க்' செய்துட்டு வரேன்...' என்று சொல்லி, நம்மை கழற்றி விட்டு, அவன் பொருட்களோடு, 'எஸ்கேப்' ஆகிவிடுவான்... 'இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகள் பற்றி, காவல்துறை நண்பர் மூலம் அறிந்து கொண்டேன். அதனால் தான், அவருடன் செல்லவில்லை...' என்றார், நண்பர்.வியாபாரிகளே... வாடிக்கையாளர் போல் வரும், ஏமாற்றுப் பேர்வழிகளிடம், ஏமாறாமல், கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருங்கள்.- தி.உத்தண்டராமன், சிவகாசி.பழமையை காப்போம்!நண்பரின் மகனுக்கு, பெண் பார்க்க சென்றிருந்தோம். பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடித்துப் போக, நிச்சயதார்த்தம் முடிவானது.இந்நிலையில், 'பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கித் தரவா...' என நண்பர் கேட்க, மகன், 'வேண்டாம்...' என்றான்.'ஏன்?' என்று கேட்டதற்கு, 'கல்யாணத்திற்கு முன்பே, போன் மூலம் பேசி, நீண்ட நாள் பழகியவர்கள் போல் ஆகி விட்டால், முதன் முதலாக பேசும்போது ஏற்படும், சுவாரஸ்யம், தயக்கம், 'த்ரில்' மற்றும் நாணம் என, எதுவுமே இல்லாமல் போய் விடும்... 'அதை, முதன் முதலாக நாம் அணுகும்போது, அதில் ஏற்படும் மகிழ்ச்சியை, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. போனில் பேசும்போது, சில சண்டை சச்சரவுகளும் வரும்... அப்போது, மனதில் ஒருவித விரிசல் விழுந்து, 'ச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது...' என்றான்.உண்மையிலேயே அவன் செயல் பாராட்டத்தக்கது.போன் இல்லாமல் இருந்த காலத்தில், ஆணுக்கும் - பெண்ணுக்கும் இருந்த நாணம் இல்லாமல், இன்று, மண மேடையிலேயே கட்டிப்பிடிக்கும் அவல நிலை வந்து விட்டது. 'மாடர்ன்' கலாசாரத்தை ஓரங்கட்டி, பழமையை போற்றி, இனியாவது, நம் பண்பாட்டை காப்போம்.— ஜி.செல்லத்துரை, மதுரை.பழைய நாளிதழை எடைக்கு போடுபவரா நீங்கள்?அரசு பணியில் உள்ள, என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர் வந்தனர். அவர்களிடம், நாளிதழ் கட்டு ஒன்றை கொடுத்தார், உறவினர்.'பழைய நாளிதழ்களை, எடைக்கு போட கொடுத்து விடுகிறீர்களா...' என்றேன்.'இல்லை... இல்லை... சென்ற மாத, ஒரு தமிழ் நாளிதழின் கட்டு அது. பள்ளி மாணவர்கள், 'ஆல்பம்' தயாரிக்க தேவையான படங்களை அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்வர். 'அதுமட்டுமின்றி, கட்டுரை, பொது அறிவு தகவல்கள், படிப்பு உதவித் தொகை சார்ந்த செய்திகள், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் மன்றம் சார்ந்த விழிப்புணர்வு செய்திகளை தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்வர். 'அரசு பள்ளியில் படிக்கும் இம்மாணவர்கள் அனைவரின் வீடுகளிலும், நாளிதழ் வாங்குவதில்லை. ஒரு மாத பழைய நாளிதழை, அதிகபட்சம், 50 ரூபாய்க்கு தான் விற்க முடியும். இது, நமக்கு பெரிய தொகை அல்ல.'மாணவர்களுக்கு இதை வழங்குவதன் மூலம், நிறைய தகவல்களை சேகரிக்கின்றனர். மற்றவர்களுடன், இதை பகிர்ந்து மகிழ்கின்றனர்...' என்றார்.வாங்கும் நாளிதழ்களை, பழைய பேப்பர் கடைக்கு போடுவதை விட, பள்ளி மாணவர்களுக்கு வழங்கினால், சிறப்பாக இருக்கும். தங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் அல்லது பள்ளிக்கு கூட இதை வழங்கலாமே!- வி.எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்.