உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

மொபைல் போனை பயன்படுத்தும் போது...மொபைல் போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்பதற்கு, உலக அளவில் உதாரணமாக இருப்பவர்களில் முதல் இடம் இந்தியர்களுக்கு; இரண்டாவது இடம் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கு என, ஒரு சர்வே சொல்கிறது.ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள், அங்குள்ள உள்ளூர் இளைஞர்களால் தாக்கப் படுகின்றனர்; படுகொலை செய்யப்படுகின்றனர் என்று அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருவதுண்டு. அதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், போலீசாரால் கைது செய்யப்பட்ட உள்ளூர் இளைஞர்கள் சிலர், போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் என்ன தெரியுமா?'இந்தியர்கள் நான்கு பேர் சேர்ந்து விட்டால், அது, பஸ், ரயில் அல்லது பொது இடம் என்று எதுவாக இருந்தாலும் சரி... அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல், காட்டுத்தனமாக கத்தி, கத்தி பேசுகின்றனர். அது, எங்களுக்கு எரிச்சலாக இருந்தது. சொல்லிப் பார்த்தோம்; கேட்கவில்லை. அதனால்தான் தாக்கினோம்...' - இதுதான் அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.தற்போது சென்னையில், பஸ், ரயில் என, எங்கு பார்த்தாலும், இந்தி பேசுபவர்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. வட மாநில கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்கள், மட்டமான ஒரு கொரிய அல்லது சீன தயாரிப்பு மொபைல் போனில், சப்தமாக ஏதாவது ஒரு இந்திப் பாட்டை வைத்துக் கொள்வது, பஸ்சோ, ரயிலோ, படிக்கட்டை விட்டு நகராமல் நின்று, கத்தி, கத்தி பேசுவதை, பலரும் கவனித்திருக்கலாம்.'இந்த நாடே எங்களுக்குத்தான் சொந்தம், எங்களை யார் கேட்பது?' என்பது போல் அவர்கள் நடந்து கொள்வதை கண் கூடாக காண முடிகிறது.தற்போது பெரும்பாலானோரிடம், கேமரா, எப்.எம்., வைத்த மொபைல் போன் உள்ளது. பாட்டுக் கேட்பவர்கள், தங்களது ஹெட்செட்-ஐ வைத்து கேட்டால், யாருக்கும், எந்த தொந்தரவும் இருக்காது.அருகில் பயணிப்பவன் என்ன மனநிலையில் இருக்கிறான், என்ன பிரச்னையை மனதில் தேக்கிக் கொண்டு பயணிக்கிறான் என்ற எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை. இதில், உள்ளூர் ஆட்கள் சிலரும் உண்டு.ஒருவர் அனுமதி இல்லாமல், அவரை, புகைப்படம் எடுப்பது எப்படி சட்டப்படி குற்றமோ, அதுபோல், பொது இடங்களில் மொபைல் போனில் சப்தமாக பேசவோ, பாட்டோ கேட்க கூடாது என்ற சட்டமும் கொண்டு வர வேண்டும்.— க.கமலா, காட்டாங்குளத்தூர்.திருநங்கைகளுக்கு வேலை கொடுங்கள்!பேன்சி ஸ்டோர் வைத்திருக்கும் தோழியை காண சென்றிருந்தேன். தோழியின் கடையில் எப்போதுமே அவள் மட்டும் தான் வியாபாரம் செய்வாள். அன்று, அவளோடு சேர்ந்து திருநங்கை ஒருவரும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எனக்கு, அந்த திருநங்கை வியாபாரம் செய்யும் முறை, பெண்களிடம் பேசி கவர் பண்ணும் விதம் எல்லாம் வியப்பாக இருந்தது. தோழியை தனியே அழைத்து வினவினேன்.ஆரம்பத்தில், அவர், தினமும் கடை கடையாக பிச்சையெடுத்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடம், 'ஏன் இப்படி பிச்சையெடுத்து, உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர். ஏதாவது வேலை செய்யக் கூடாதா?' என்று கேட்டிருக்கிறாள்.அதற்கு அவர், 'எங்களுக்கு யார் வேலை கொடுக்கின்றனர். அப்படியே ஒரு சிலர் வேலை கொடுத்தாலும், அவர்கள் எண்ணம் சரியில்லை...' என்று கூறி, வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே தோழி, 'என் கடையில் வேலை செய்ய சம்மதமா?' என்று கேட்டிருக்கிறாள்; அவரும், 'சரி...' என்று கூறி, வேலை செய்கிறார். முன்பு இருந்ததை விட, இப்போது வியாபாரம் அமோகமாம்.திருநங்கைகள் என்றாலே ஏதோ கேலி பொருளை பார்ப்பது போல் பார்ப்போருக்கு மத்தியில், அவர்களையும் மனிதர்களாக மதித்து, அவர்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுத்தால், நாமும் வாழலாம், அவர்களும் வாழ்வர் என்பதை தோழி மூலம் புரிந்து கொண்டேன். — எஸ்.மலர்விழி, அன்சாரி நகர்.நன்றி சொல்வோம்!நான், டெய்லர் கடையில், சட்டைக்கு அளவு கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது பைக்கில் ஒருவர், கடை வாசல் முன் வந்து நின்றார்.புது பேன்ட், ஷர்ட் அணிந்திருந்த அவர், டெய்லரிடம், 'அண்ணாச்சி... நீங்கள் தைத்து தந்த இந்த பேன்ட்டும், ஷர்ட்டும், கன கச்சிதமா எனக்கு பொருந்தியிருக்கு; ரொம்ப நன்றி!' என சொல்லி, சென்றார். டெய்லரின் முகத்தில், ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.டெய்லர், துணி தைத்து தரும் போது, அளவு சரி இல்லை என்றால், திரும்பி வந்து, குறையை காட்டி, நிவர்த்தி செய்கிறோம். அதேபோல, நிறைவு இருந்தாலும், நேரில் வந்து நன்றிசொல்வதால்,இம்மாதிரியான தொழிலாளர் பணி, மேலும் ஊக்கமுடன் சிறக்கும் அல்லவா!இதை, நாமும் கவனத்தில் கொள்வோமே! — கு.அருணாசலம், தென்காசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !