உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

தெருவில் டான்ஸ் ஆடிய மணமக்கள்!சென்னையின் பிரதான சாலை ஒன்றில், நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, மேள, தாளத்துடன், ஒரு திருமணம் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அகலம் குறைவான அந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடையில் வான வேடிக்கை வேறு. மேலே, 'ஜிவ்'வென்று கிளம்பிய வெடிகள், கீழே தீப்பொறிகளாக விழுந்தன. இதனால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்றே நகர ஆரம்பித்தனர்.அப்போதுதான், காரில் ஊர்வலம் வந்து கொண்டிருந்த மணமக்களை சுற்றி, அவர்களையும் எதற்கோ வற்புறுத்தியது ஒரு கூட்டம். சில நிமிடங்களில், மணமக்கள் இருவரும், ஊர்வலம் வந்து கொண்டிருந்த காரின் மீது ஏறி, ஜோடியாக ஆட ஆரம்பித்தனர்; அதற்கு, நண்பர்களின் கைதட்டல் வேறு. அப்போது, சாலையில் பல பஸ்கள் சென்றன. பஸ்சில் பயணித்த சில இளைஞர்கள் விசிலடித்து, மோசமான, 'கமென்ட்' அடித்தபடி சென்றனர். எங்கே போகிறோம் நாம்?திருமணம் என்றால் வெட்கத்துடனும், சங்கோஜத்துடனும் இருக்கும் மணமக்களை, தமாசாக கிண்டலடிப்பதுதான் நண்பர்களின் பொழுது போக்கு! அதற்காகவே, நண்பர்களின் திருமணத்திற்கு செல்வதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே, 'பிளான்' போடுவோம். ஆனால், அதெல்லாம் மண்டபத்துக்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ தான் நடக்கும்; இப்படி நடுத்தெருவில் அல்ல.தயவு செய்து நம் கலாசாரத்தை, குழிதோண்டி புதைக்காதீர்கள்!— வனிதா ஞானசவுந்தரன், சென்னை.அடக் கொடுமையே!நகரின் பிரபலமான மருத்துவமனை ஒன்றுக்கு, 'அக நோயாளி'யாக சிகிச்சை பெறச் சென்றிருந்தேன். 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்... ரூம் காலியானதும், 'அட்மிஷன்' போட்டுடறேன்...' என்றார் ரிசப்ஷனிஸ்ட்; காத்திருந்தேன்.அத்தருணத்தில், என் நண்பனும், அவனுடன் ஒரு பெண் மணியும், வார்டிலிருந்து வெளியே வந்தனர். இருவரும், நேருக்கு நேர் சந்தித்து அதிர்ந்தோம். என் அதிர்ச்சிக்குக் காரணம், நண்பனுடன் இருந்தது அவன் மனைவி அல்ல; அவன் அதிர்ச்சிக்குக் காரணம், அவன் இங்கே என்னை எதிர்பார்க்கவில்லை.முகம் வெளிறி, மென்று முழுங்கி, பேய் முழி முழித்தவனை நெருங்கி, 'யாருடா இது?' என்றேன். 'என் கலீக் மாமூ... செட் ஆயிருச்சி; ஆனா, லாட்ஜிக்கெல்லாம் வர மாட்டேன்னுட்டா... அதான், இப்படியொரு அரேஞ்ச்மென்ட். என்ன... ரூம் வாடகைதான் கொஞ்சம் அதிகம்...' என்றான் சர்வ சாதாரணமாக. என் காலடியில், பூமியே பிளந்து விடுவது போல இருந்தது. கால கொடுமை, கால கொடுமை என்கின்றனரே... அது இது தானோ!— ஆர்.சுரேஷ் குமார், மயிலாப்பூர்.'வாழ்க, வளர்க!'எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், புது வீடு கட்டியிருந்தார். வீடு மிகவும் அழகாக, எல்லா வசதிகளுடனும் இருந்தது. ஆனால், வீட்டிற்கு தன் பெயரையோ, குடும்பத்தினர் பெயரையோ வைக்கவில்லை. அதற்கு பதிலாக, 'வாழ்க, வளர்க' என மட்டுமே எழுதி யிருந்தது. அதற்கான காரணத்தை நண்பரிடம் விசாரித்தேன்.'பிறர், எங்கள் வீட்டை அடையாளம் சொல்லும் போது, 'வாழ்க, வளர்க' என சொல்லிக் குறிப்பிடுவர். அப்படிச் சொல்லும் போது, அவர்களை அறியாமலேயே, எங்களை ஆசீர்வாதம் செய்வதைப் போல இருக்கும்; இதனால், எங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும்.'அதோடு, நமக்கு தெரியாமலேயே பிறர் நம்மை வாழ்த்தும் போது உண்டாகும் அதிர்வலைகளால், நன்மை உண்டாகும்...' என, நண்பர் விளக்கியதைக் கேட்டு, வியந்து போனேன்.— ஹம்சா, கீழக்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !