இது உங்கள் இடம்
நவீன கொள்ளையர்கள்!என் நண்பரின் பெண்ணுக்கு, மணமகன் வேண்டி, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். அவர்கள் நீட்டிய நிபந்தனை தாளைப் படித்த போது, எங்களுக்கு தலை சுற்றி விட்டது. பத்து முதல், நூறு பவுன் வரை வரதட்சணையாக படிந்தால், 7,000 ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரையும், அதுவே, இரண்டாம் திருமணம் என்றால், 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரையும், கமிஷனாகத் தர வேண்டுமாம்! கல்யாணம் என்பது கள்ளச்சந்தை வியாபாரமா அல்லது காசு கொடுத்து விற்கும் கடைச் சரக்கா பெண்? வரதட்சணை பெறுவதும், தருவதும் சட்டப்படி குற்றமாக்கப்பட்ட இந்நாளில், மாப்பிள்ளை வீட்டாருக்கு காசு ஆசையை ஊட்டிவிடும் இதுபோன்ற மையங்களில், எலும்பு துண்டுக்கு அலையும், நாய்கள் கிடைக்கலாம்; ஆனால், நன்னடத்தையுள்ள மாப்பிள்ளை கிடைப்பரா? இந்த லட்சணத்தில், இம்மையத்தின் உரிமையாளர், மனித உரிமை மையத்தின் உறுப்பினர் வேறு! மனம் வெறுத்து வெளியேறி விட்டோம்; ஆனால், ஏற்கனவே மாட்டிக் கொண்ட பெண் வீட்டாரின் நிலை கேள்விக் குறிதான்!— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.பிஞ்சுகளுக்கு நஞ்சைப் புகட்டாதீர்!சமீபத்தில், நான் சென்ற பஸ்சில், கூட்டம் நிரம்பி வழிந்தது. 'உட்கார ஒரு இடம் கிடைத்து விடாதா?' என்ற தேடலுடன், அலை பாய்ந்து கொண்டிருந்தன பயணிகளின் கண்கள். முன் பக்க வரிசையில் ஒரு பெண் மட்டும், தன் குழந்தையை, (அதிக பட்சம் அதற்கு, மூன்று வயது இருக்கும்!) அருகில் அமர்த்தி, சவுகரியமாக உட்கார்ந்திருந்தாள்.பயணிகள், 'அந்த குழந்தையை உங்கள் மடியில் வைத்துக் கொண்டால், நாங்கள் உட்கார முடியுமே...' என்று கேட்டாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அப்பெண். அதோடு, ஒவ்வொரு நிறுத்தத்தி<லும் பஸ் நிற்கும் போது, ஏறி வரும் பயணிகள் யாரும் அந்த இருக்கையில் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக, குழந்தையின் அருகில் ஒரு பையையும் வைத்து, மூன்று பேர் அமரக் கூடிய அந்த முழு இருக்கையையும் ஆக்கிரமித்தாள். பஸ் கிளம்பியதும், பையை மடியில் வைத்து, கால்களை மடித்து, சுகமாக அமர்ந்து கொண்டாள். இதை, கவனித்துக் கொண்டே வந்தேன் நான்.ஒரு நிறுத்தத்தில், அவள் கண் அயர, 'அம்மா... பஸ் நிக்குது... சீக்கிரம் பையை பக்கத்துல வை. யாராச்சும் இடம் கேட்க போறாங்க...' என, அவளை பரபரப்புடன் எழுப்பியது அக்குழந்தை. அக்குழந்தையின் கற்பூர புத்தியைப் பாராட்டுவதா அல்லது அதற்குப் புகட்டப்படும் நஞ்சுப் போதனையை பார்த்து நோவதா?பண்பைப் புகட்டுவதற்காகவே, புராணங்கள் எழுதிய பாரதத்தில் பிறந்த நாம், பண்புகளைப் புதைக் குழியில் போட்டு விட்டு, எங்கே போகிறோம் என்பது தான் தெரியவில்லை!— ஹம்சா, கீழக்கரை.தாயை விரட்டிய தனயன்!பத்து நாட்கள் விடுமுறையில், என் குடும்பத்துடன், மதுரையிலுள்ள என் உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன். ஒருநாள், பக்கத்து வீட்டிலிருந்து, 'இன்னும் ஒரு மாசம் ஆகவில்லையே... அதுக்குள்ள ஏண்டா என்னை போகச் சொல்றே...' என்று, ஒரு வயதான தாயின் அழுகுரல் கேட்டது. சிறிது நேரத்தில், 'ஒரு மாசம் முடிஞ்சிருச்சு; கிளம்பு உன் பெரிய மகன் வீட்டுக்கு...' என, ஒரு ஆண் குரலும் கேட்டது.விசாரித்ததில், அந்த தாய்க்கு, இரண்டு மகன்கள் என்றும், அவ்விருவரும் நல்ல உத்தியோகத்தில் உள்ளதாகவும், மாதம் ஒரு மகன் வீட்டில் தங்க வேண்டும் என்பது, அந்த தாய்க்கு இடப்பட்ட கட்டளை என்பதும் தெரிய வந்தது. அன்று, மூத்த மகன் வீட்டுக்கு போகுமாறு, தன் தாயை, இளைய மகன் வற்புறுத்தியுள்ளான். அது, பிப்ரவரி மாதம் என்பதால், மொத்தம், 28 நாட்கள் தான் என்பது அந்த வெகுளித் தாய்க்கு தெரியவில்லை. அதனால்தான், நாட்களை எண்ணி, இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே என பேதலித்திருக்கிறது அந்த பெத்த மனம்.பெற்ற தாய், தன் மகன் வீட்டில் இரண்டு நாட்கள் கூடுதலாகத் தங்குவது பெரிய பாரமா? நேரில் நின்று பேசும் தெய்வமான தாயை, வெறும் சோற்றுக்காக, மாதம் ஒரு வீட்டில் தங்க வேண்டும் என நிபந்தனை போடுவதே தவறு; இதில், 'நாள் முடிந்து விட்டது...' என, மகனே விரட்டுவது, கொடுமையிலும் கொடுமை!நடமாடும் தெய்வமான தாய்க்குக் தொண்டு செய்தால், அது, கடவுளுக்கு செய்த தொண்டாக அமையும். பிள்ளைகளே... பெற்ற தாயின் மனம் நோகாமல், அவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள்... உங்கள் வாழ்வு சிறக்கும்; வளம் பெருகும்.— அ.மாரிமுத்து,சென்னை.