இது உங்கள் இடம்!
இளைஞனின் புதுமையான அணுகுமுறை!தீபாவளிக்கு மறுநாள், வாசலில், ஒரு இளைஞன், வெடித்த பட்டாசு குழாய்களை எடுத்துச் செல்வதை கவனித்தேன். வானத்தில் சென்று, பூச்சிதறலாக வெடித்து சிதறும் நீளமான அட்டை குழாய்கள் அவை. இதுபற்றி, அவனிடம் வினவினேன்.'பட்டாசுகளின் அட்டைக் குழாய்களை, சாணக் கரைசலில் நனைத்து, அதில் மண்ணை நிரப்பி, விதைகளை ஊன்றி நாற்றுகளாக மாற்றி, விற்பனை செய்வேன்.'நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து, இதுபோன்று மக்கும் அட்டைகளில் செய்வதால், எவ்வித மாசும் ஏற்படாது; பூமியில் அப்படியே நடலாம்...' என்றான்.புதுமையான அணுகுமுறையையும், வித்தியாசமான சிந்தனையும் வியப்பில் ஆழ்த்த, மனதார பாராட்டினேன். புதுமைகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்க வேண்டும் என்று, மகாகவி சொன்னது தான் நினைவுக்கு வந்தது.— சசி பிரபு, சென்னை.பயத்தை விட்டுத்தள்ளுங்கள்!நண்பரின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இந்நிலையில், அவளை ஏற்கனவே காதலித்தவன், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அவள் மொபைல் போனுக்கு அனுப்பி, பணம் கேட்டு, மிரட்ட ஆரம்பித்தான்.அப்பாவிடம் அவள் விஷயத்தை சொல்ல, அந்த புகைப்படத்தோடு மணமகன் வீட்டிற்கு சென்றார், அவர். புகைப்படத்தைக் காட்டி, 'ஒன்றும் அறியாத வயதில், அந்த பையனை என் மகள் காதலித்தது உண்மை தான். அவன் நல்லவன் இல்லை என்று, மகளுக்கு புத்திமதி சொல்லி அவனிடமிருந்து விலக வைத்து விட்டோம். 'மற்றபடி, அவர்களுக்குள் வேறு எந்தத் தவறும் நடக்கவில்லை. நம்பிக்கை இருந்தால், நல்ல முடிவெடுங்கள். இல்லையென்றால், இந்த திருமணம் வேண்டாம்...' என்று, மிக தெளிவாக கூறி விட்டார்.நண்பரின் வெளிப்படையான பேச்சு, மணமகன் வீட்டாருக்கு பிடித்து விட, 'திட்டமிட்டபடி திருமணம் நடக்கும்...' என, சொல்லி விட்டனர்.மிரட்டல் காதலன், அத்தோடு, 'எஸ்கேப்' ஆனான்.சில பெண்கள், இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு பயந்து, யாரிடமும் கலந்தாலோசிக்காமல், தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். எனவே, இப்படியான நிலை ஏற்படும்போது, என் நண்பரைப் போன்று, துணிச்சலான அதிரடி முடிவுக்கு வருவதில் தவறில்லை.நல்லது கெட்டதை புரிந்துகொள்ளும் மாப்பிள்ளை ஒருவன், கிடைக்காமலா போய் விடுவான்.எம்.பி.ராமகிருஷ்ணன், அறந்தாங்கி.புத்தகங்களை படித்த பின்...புத்தகப் பிரியரான நண்பர் ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன்.தான் படித்து முடித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு மற்றும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய சுய முன்னேற்றம் பற்றிய கட்டுரை புத்தகங்களை, அவர் வசிக்கும் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கொடுத்ததுடன், சிறிய பீரோவையும் நன்கொடையாக அளித்தது அறிந்து, பாராட்டினேன்.வழக்கமாக, புத்தகங்கள் வாங்கி படித்த பின், அவற்றை பரண் மேல் போட்டு, பூச்சி அரித்த பின், பழைய புத்தக கடையில் எடைக்கு போடுவர். இதை தவிர்த்து, வருங்கால சமுதாயத்தை உருவாக்க உள்ள, மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு நன்கொடையாக அளித்து, அவர்களிடையே படிக்கும் பழக்கத்தை வளர்க்கலாம்.புத்தக பிரியர்கள், தம்மிடம் உள்ள, பிறருக்கு உதவக்கூடிய புத்தகங்களை, நண்பரை போலவே அருகில் உள்ள பள்ளிகளுக்கும் கொடுத்து உதவலாமே!ரா. சாந்தகுமார், சென்னை.