உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மனம் விட்டு பேசுங்கள்!சமீபத்தில், மகளின் பிறந்த நாளுக்காக, நன்கொடை அளிக்க முதியோர் இல்லத்துக்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு பாட்டி என்னை அழைத்து, 'உங்களை போல் பலர், இங்கு, பணம், சாப்பாடு, துணிமணிகள் தானமாக கொடுத்துச் செல்கின்றனர். ஆனால், எங்களோடும் சிறிது நேரம் மனம் விட்டு பேசிச் சென்றால், சந்தோஷமாக இருக்குமே...' என்றார்.அவரது கோரிக்கையை ஏற்று, ஒரு ஞாயிறு மதியம், முதியோர் இல்லத்திற்கு சென்றேன். மிகுந்த மகிழ்ச்சியுடன், 'கல கல'வென்று பேசினர். அதைத் தொடர்ந்து, நானும், தோழியர் சிலரும், ஒவ்வொரு ஞாயிறன்றும், சில மணி நேரத்தை அவர்களுடன் பேசி, கழிக்கிறோம். அத்துடன், இல்லத்தை சுத்தம் செய்தல், பூச்செடி, காய்கறி செடிகள் வளர்த்தல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு, 'டியூஷன்' எடுத்தல், அந்தாக் ஷரி, பல்லாங்குழி, தாயம் விளையாடுவது மற்றும் யோகா செய்வது போன்ற செயல்களில் அவர்களை ஈடுபட வைத்தோம். அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, நாடகமாக்கி, அவர்களையே நடிக்க வைத்து, மற்றவர்களை ரசிக்க வைத்தோம். இதனால், அவர்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரித்ததை அறிந்து மகிழ்ந்தோம்.அவர்களை பரிசோதனை செய்ய வந்த மருத்துவர், எங்களை பாராட்டியதுடன், 'முதியோர்கள், மற்றவர்களுடன் மனம் விட்டு பேசுவதால், அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். துக்கம் காணாமல் போய் விடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை...' என்று கூறினார்.வாசகர்களே... நம் வீட்டிலோ, அக்கம் பக்கத்திலோ உள்ள மூத்த குடிமக்களுடன் சிறிது நேரம் பேசி, அவர்களை சந்தோஷப்படுத்துங்களேன்.- கலா ஜெயக்குமார், சென்னை.அங்கே அப்படி, இங்கே இப்படி!அஞ்சல் துறையில் பணிபுரியும் நண்பர், ராணுவ தபால் சேவையில் பணியாற்றினால், விரைவில் பதவி உயர்வு கிடைப்பதாக கேள்விப்பட்டு, அங்கு பணியாற்ற விண்ணப்பித்தார். குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் பணி நியமனம் செய்தனர். குடும்பத்தோடு சென்று, ஒரு பால்காரர் வீட்டு, மாடி போர்ஷனில் குடியேறினார்.நண்பருக்கு, கை குழந்தையும் உண்டு. வீட்டு உரிமையாளரிடமிருந்து தினமும், 1 லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருந்தார்.மாத வாடகை கொடுக்கும்போது, 'பாலுக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும்...' என்று கேட்டிருக்கிறார், நண்பர்.'பாலுக்கு பணமா... நாங்கள், பாலை பணத்துக்கு விற்பனை செய்வதில்லை. பால் இனிப்புகளாக செய்து தான் விற்பனை செய்வோம். நீங்கள், எங்கள் வீட்டில் வசிக்கும் வரை, பால் இலவசம் தான்...' என்று கூறியுள்ளார், வீட்டு உரிமையாளர்.அந்த வீட்டில் இருந்த நான்கு ஆண்டுகளும், தினம், 1 லிட்டர் பாலை இலவசமாகவே வாங்கி வந்திருக்கிறார், அவர்.வட மாநிலங்களில் சில இடங்களில், பாலை பணத்திற்கு விற்பதில்லை என்பதை, கொள்கையாகவே வைத்துள்ளனர். பாலை, கோவாவாகவும், இனிப்புகளாகவும் தயாரித்த பிறகே விற்பனை செய்வர்.அங்கே அப்படி. ஆனால், இங்கே பாலில் தண்ணீர் கலக்காமல் விற்பதில்லை என்பதை, கொள்கையாகவே வைத்திருக்கின்றனரே!- எம். கோபாலகிருஷ்ணன், சென்னை.திருமணத்திற்கு வரன் தேடும்போது...கணவரை இழந்த உறவின பெண்மணி ஒருவர், மகனுக்கு பெண் தேடும் விஷயத்தில், கொழுத்த வசதி, கொள்ளை அழகு என, பல அளவுகோல்களுடன், பேராசையோடும், அதிக எதிர்பார்ப்புகளோடும், பல வரன்களை தட்டிக் கழித்து, நிராகரித்தபடியே இருந்தார்.திடீரென பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாகி, வீட்டில் முடங்கினார், அப்பெண்மணி.இப்போது, வசதி குறைவான, சுமாரான அழகோடு பெண் தேடினாலும், நோயாளி மாமியாரையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டுமே என்று நிராகரித்து விடுகின்றனர், பெண் வீட்டார்.வசதி, பணம், புகழ் மற்றும் பதவியை பெரிதாக நினைத்து, ஆணவத்தோடு நடந்தாலும், அவை எல்லாம் ஏதாவது ஒரு கட்டத்தில், செல்லாக்காசாகி விடும் என்பதற்கு, உறவின பெண்மணியே உதாரணம்.அதேபோல், காலம் கடந்து திருமணம் செய்வதாலும், பல பிரச்னை ஏற்படும் என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பெண்மணியின், 40 வயது மகனுக்கு இன்னும் பெண் அமையவில்லை என்பது தான், உச்சக்கட்ட சோகம்.எனவே, வாசகர்களே... திருமணத்திற்கு வரன் தேடும்போது, உங்களது ஆசைகளை ஒதுக்கி வைத்து, காலத்தே மணம் முடியுங்கள்.— எஸ்.நாகராணி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !