உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன?எங்கள் கம்பெனியில், புதிதாக ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். தமிழ் மீடியத்தில் படித்தவர். அலுவலகத்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.அவர், ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் தவறாக பேசினால், அதை சிலர், கேலி செய்தனர். அவருடன் சரியாக பேசாமல், அலட்சியம் செய்தனர். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் வேலைகளை சிறப்பாக செய்து வந்தார். புதிதாக நிறைய விஷயங்களை, விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டார்.கடைசியில், அந்த ஆண்டின் சிறந்த ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை கேலி செய்தவர்கள், வாயடைத்து போயினர்.மொழி என்பது, அறிவின் அளவுகோல் அல்ல. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல் பரிமாற பயன்படும் கருவி. இப்படிப்பட்டவர்களை கேலி செய்யாமல், முடிந்தால், தனியாக அழைத்து, அவர்களின் தவறை சொல்லி திருத்துங்கள். அதுதான், படித்தவர்களுக்கு அடையாளம்.— பி. பாரதி, பெங்களூரு.மணமக்கள் தந்த பரிசு!நண்பரின் மகனுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. வழக்கமாக, திருமணத்திற்கு வருவோர், மணமக்களுக்கு பரிசளித்து, வாழ்த்துவர். ஆனால், அந்த திருமணத்தில், புதுமையான நிகழ்வாக, சிலருக்கு, மணமக்கள் பரிசளித்து, அவர்களிடமிருந்து வாழ்த்து பெற்றனர்.அதாவது, பொருளாதாரத்தில் நலிந்த சில குடும்பத்தை சேர்ந்த, வேலை தேடும் இளைஞர்களை வரவழைத்து, அரசு தேர்வுகளுக்கு அவர்கள் தயாராக உதவக்கூடிய புத்தகங்கள் அடங்கிய பார்சலை கொடுத்தனர்.பள்ளியிலோ, கல்லுாரியிலோ, கல்வியை தொடர இயலாத சூழ்நிலையிலிருந்த, சில மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தை வழங்கினர்.ஆதரவற்ற சில முதியோருக்கு, குறிப்பிட்ட தொகையை கொடுத்து உதவினர். மருத்துவ உதவி தேவைப்பட்டோருக்கு, அதற்கான தொகையை தந்தனர்.மணமக்களின் குடும்பத்தினர் வசதியானவர்களாக இருந்தாலும், திருமணத்தை எளிமையாக நடத்தி, சில லட்சங்களை மிச்சப்படுத்தி, தேவைப்படுவோருக்கு பரிசாக அளித்து, மகிழ்ந்தனர்.இந்த நல்லெண்ண செயலை, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருமே பாராட்டி, வாழ்த்தினர்.- ஆர். செந்தில்குமார், மதுரை.திருமண மண்டப உரிமையாளரின் நற்பணி!சமீபத்தில், இரு சக்கர வாகனத்தில், நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டப நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், பக்கத்தில், 'ஷெட்' போட்ட இடத்தில், வாகனத்தை நிறுத்துமாறு கூறினார்.அங்கு, சீருடை அணிந்த ஒருவர், 'டோக்கன்' கொடுத்து, அங்கு வைத்திருந்த பதிவேட்டில், பெயர், விலாசம் எழுதி, கையெழுத்து பெற்றார். அத்துடன், அவர் வைத்திருந்த மொபைல் போனில், என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.'என்னிடம் கையெழுத்தும், புகைப்படமும் எடுக்கிறீர்களே, எதற்கு...' என்று கேட்டேன்.'சென்ற மாதம், திருமண மண்டபத்தில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களில், சக்கரங்கள் களவு போய் விட்டது. இதேபோல் அடுத்தடுத்து நடந்த திருமணங்களிலும் களவு போவது வழக்கமானது.'களவு போகாமல் தடுக்க, 'ஷெட்' அமைத்து, மேற்கண்ட விதிகளின்படி செயல்பட, என்னை பணி அமர்த்தியுள்ளார், மண்டப உரிமையாளர். மேலும், உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள, 'டோக்கன்' தொலைந்து போய், அந்த, 'டோக்கன்' வேறு ஒருவர் எடுத்து வந்து கொடுத்தாலும், வண்டியை அவரிடம் கொடுக்க மாட்டோம்.'சம்பந்தப்பட்டவரே வந்து, 'டோக்கன்' இல்லாத நிலையில், அவரிடம் மீண்டும் ஒரு கையெழுத்து பெற்று ஒப்பிடுவதுடன், புகைப்படத்தில் உள்ள நபர்தானா என்பதை சரிபார்த்த பின் தான் வண்டியை கொடுப்போம். இந்த பணி, மண்டப உரிமையாளரின் முழு பொறுப்பில் செயல்படுகிறது...' என்றார்.மண்டப உரிமையாளரின் நற்பணியை பாராட்டினேன். இதேபோல், மற்ற திருமண மண்டப உரிமையாளர்களும் செயல்பட்டால் நன்றாக இருக்குமே!- ஜெ. நாராயணமூர்த்தி, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !