இது உங்கள் இடம்!
சைக்கோ மாப்பிள்ளை, ஜாக்கிரதை!திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், தோழிக்கு குழந்தை இல்லை. இதனால், தோழியின் குடும்பத்தினர் அவளை டாக்டரிடம் காட்ட முயற்சித்தனர். ஆனால், டாக்டரிடம் செல்ல முரண்டு பிடித்தாள், தோழி. தோழியின் கணவரும், அவரது வீட்டாரும் இதை கண்டுகொள்ளவில்லை. தோழியை தனியே சந்தித்து, டாக்டரிடம் வர மறுப்பதற்கான காரணத்தை கேட்டேன்.'எங்களுக்குள் தாம்பத்தியமே நடக்காத போது எப்படி குழந்தை பிறக்கும்? கணவரோட மனசு கெட்டுப் போய் கிடக்கு. அவரோட சகோதரிக்கு, 35 வயதில் தான் திருமணம் நடந்துச்சாம்.'திருமணம் தள்ளி தள்ளி போய், அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்களாம். எனக்கு, 22 வயசிலேயே திருமணம் ஆயிடுச்சு.'முதலிரவு அன்றே, 'என் சகோதரிக்கு, 35 வயசுல தான் திருமணம் ஆனது. அதனால, உனக்கும், 35 வயசாகட்டும், அப்ப தாம்பத்தியம் வச்சுக்கலாம். என் சகோதரிக்கு நான் செய்யற பிராயச்சித்தம் இதுதான்...' என, கணவர் கூறினார்...' என்று சொல்லி வருத்தப்பட்டாள், தோழி.பெண்ணைப் பெற்றோரே... மாப்பிள்ளையின் வசதி வாய்ப்பை மட்டும் பாராமல், அவரது பின்னணி மற்றும் குண நலனையும் தீர விசாரித்து, முடிவுக்கு வாருங்கள். இல்லையேல், தோழியின் நிலைமை உங்கள் பெண்ணுக்கும் வரலாம், ஜாக்கிரதை! - ஆர்.மெகர்னிசா, அத்தாணி, புதுக்கோட்டை.பெண்ணே நீ வாழ்க!மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க, எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர், நண்பரும், அவர் மனைவியும். மனைவியிடம், அழைப்பிதழின் உள்ளே ஒரு வாசகம் எழுதப்பட்ட காகிதம் இருக்கிறது. பெண்ணுக்கு நலுங்கு வைக்கும்போது, அந்த வாசகத்தை மூன்று முறை உரக்கச் சொல்லி நலுங்கு வைக்கும்படி கேட்டுக் கொண்டார், நண்பரின் மனைவி.அவர்கள் போன பின், அழைப்பிதழை பிரித்து பார்த்தபோது, அதில், 'பெண்ணே நீ வாழ்க...' என்று எழுதப்பட்ட வாசகம் இருந்தது.மஞ்சள் நீராட்டு விழாவின்போது, பெண்கள் வரிசையாக நின்று, நண்பரின் மகளுக்கு நலுங்கு வைத்தனர். அப்போது, ஒவ்வொரு பெண்ணின் கையிலும் எங்களுக்கு கொடுத்தது போலவே, வாசகம் எழுதப்பட்ட, காகிதம் இருந்தது.அதில், 'அன்புடன் பழகு, கல்வியில் கவனம் கொள், தீமையை ஒதுக்கு, பெரியோர் சொல் மந்திரம்' போன்ற வாசகங்கள் இருந்தன. ஒவ்வொரு பெண்ணும் அந்தந்த வாசகத்தை மூன்று முறை உரக்கச் சொல்லியவாறு, நலுங்கு வைத்தனர்.மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட எல்லாரும் இதைப் பார்த்தும், கேட்டும், மகிழ்ச்சியில் கை தட்டி வரவேற்றனர்.- கே. முருகேசன், ஈச்சனாரி, கோவை.மண் பானை வாங்கும்போது...பொங்கல் நாளன்று, புதிதாக மண் பானை வாங்குவது எப்படி என்பதற்கு என் உறவினர் சொன்ன தகவல் இது:பானை கனமானதாக பார்த்து வாங்க வேண்டும். விரல்களால் தட்டிப் பார்த்தால், பலமாக ஓசை எழ வேண்டும்.புது பானையை வாங்கியவுடன், ஒருநாள் முழுதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, உள்ளேயும், வெளியேயும் தேங்காய் நாரால் தேய்த்து கழுவினால், மண் படிந்திருந்தால் நீங்கி விடும்.புது பானையில் தான், பொங்கல் வைக்க வேண்டும். நம் வாழ்வு காக்கவும், புது நெல்லில் விளைந்த அரிசியும் சேர்த்து, சூரியனுக்கு படைக்கப்படும் இந்த பொங்கல் பானை, மிகவும் விசேஷம். புது பானையில், மஞ்சள், விபூதி பூசி, குங்குமம் இட்டு, பூமியில் விளைந்த மஞ்சள் கொத்தை அதன் கழுத்தில் கட்டிவிட வேண்டும். புது பானையின் வெளிப்புற அடிப்பாகத்தில், மண்ணை நீரில் குழைத்து பூசி விட்டால், கரி பிடிக்காமல் இருக்கும்.பொங்கல் அன்று, பொங்கல் பானையிலிருந்து தண்ணீர் நுரைத்து வழிய வேண்டும். அதுபோலவே, நம்முடைய வாழ்வும், பொங்கி நிறையும் என்பது ஐதீகம்.- எஸ். வள்ளிசித்ரா, கிருஷ்ணகிரி.