உள்ளூர் செய்திகள்

உப்பாகவும், ஒளியாகவும் இருப்பவர்கள்!

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை, உலுக்கி எழுப்பினாள் பிலோமினா. ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கலைக்கப்பட்டதில் கோபம் எழுந்தாலும், உடனே அதை மறந்து, ''என்னம்மா விசேஷம்,'' என்றான் முத்துராமன்.''நீயே கண்டுபிடியேன்,'' என்றாள், கொஞ்சம் பிகு செய்தபடி!சிறிது நேரம் யோசித்து, ஒன்றும் பிடிபடாமல் போகவே, ''தெரியலயே,'' என்றான் சிறு குற்ற உணர்ச்சியுடன்.''இன்னைக்கு என்ன நாள்...'' என்றாள் கோபத்துடன்.''அக்டோபர் 4; அப்படி என்ன இன்னைக்கு விசேஷம்...'' என்றான் புரியாமல்!''இத்தனை வருஷம் உன் கூட வாழ்ந்ததுக்கு, ஒரு மரக்கட்டை கூட குடித்தனம் செய்திருக்கலாம்,'' என்று, அவள் கண்களை கசக்கிய போது தான், அவனுக்கு சிலீரென்று ஞாபகத்தில் உறைத்தது.''ஓ... இன்னைக்கு நம்ம கல்யாண நாள் இல்ல... சாரிம்மா மறந்துருச்சு,'' என்றான்.அப்புறம் அவனே, ''துக்க நாட்கள நான் எப்பவும் ஞாபகம் வச்சுக்கிறதில்ல தெரியுமா...'' என்றான் சிரித்துக் கொண்டே!''துக்க நாளா... அடிபடுவ ராஸ்கல்,'' என்றவள், ''இந்த வருஷ கல்யாண நாளுக்கு, இன்னொரு விசேஷமும் இருக்கு; அதையாவது கண்டுபிடியேன்,'' என்றாள் இரங்கத்தக்க குரலில்!''நான் தான், டியூப்லைட்ன்னு உனக்கு. தெரியுமில்ல; அதனால, அதையும் நீயே சொல்லிடேன் ப்ளீஸ்... என் தங்கம் இல்ல,'' என்று, கொஞ்சினான் முத்துராமன்.''இன்னிக்கு நம்மளோட, 25வது கல்யாண நாள்; உன் கூட, 24 வருஷம் எப்படி குப்பை கொட்டுனேன்னு நினைச்சா, இப்பவும் மலைப்பா இருக்கு,'' என்றாள் அலுத்தபடி!''அதுதான் நம் இந்திய கல்யாணங்களோட சூட்சுமம்,'' என்று கூறி, கண்ணடித்தான் முத்துராமன்.''சூட்சுமமும் இல்ல, சுரைக்காயும் இல்ல. உன்னை காதலிக்கிறேன்னு எங்க அண்ணன் கிட்டச் சொல்லவும், இதுதான் சாக்குன்னு, செலவே இல்லாம கைகழுவி, உன் கூட அனுப்பி வச்சுட்டான்; நானே தேடிக்கிட்ட துணை நீ... சரியில்லன்னு திரும்ப வீட்டுக்கு போய் நிக்க முடியாது. அதனால, வேறவழி இல்லாம, உன்னை சகிச்சுக்கிட்டேன்,'' என்றாள் செல்லமாய்!''சில விபத்துகளை வாழ்க்கையில தவிர்க்கவே முடியாது; அதுல கல்யாணமும் ஒண்ணு. சரி விடு... 25வது கல்யாண நாளை, எப்படி கொண்டாடலாம்ன்னு சொல்லு,'' என்றான் முத்துராமன்.''நான் ஒண்ணு சொன்னா, எனக்காக மறுக்காம செய்வியா...'' கொஞ்சலும், கெஞ்சலுமாய் கேட்டாள் பிலோமினா.''அதுக்கென்ன... மகாராணி எது கேட்டாலும் செஞ்சுடலாம்,'' என்றான் உற்சாகமாய்!''இன்னைக்கு ஒருநாள் மட்டும், சர்ச்சுல ஆராதனை நடக்குறப்ப, நீயும் என்கூடவே இருக்கணும். நான், பாதர் கிட்ட ஆசீர்வாதம் வாங்குறப்ப, நீயும், என் பக்கத்துல நின்னு, ஆசீர்வாதம் வாங்கிக்கணும். நான் மட்டும் தனியா போயி, பாதர்கிட்ட எனக்கு கல்யாண நாள்ன்னு சொன்னா, அது நல்லாவா இருக்கும்... ப்ளீஸ்ப்பா... முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத,'' என்றாள் பிலோமினா.முத்துராமன் பிறப்பால் இந்து என்றாலும், கடவுள், மதம் போன்ற நம்பிக்கைகள் இல்லாதவன். பிலோமினா தீவிர கடவுள் பக்தியுள்ள கிறிஸ்தவப் பெண். இருவரும் காதலித்தது இயற்கையின் விதி அல்லது ஹார்மோன்களின் அழைப்பு. இருவருக்கும் திருமணம் செய்ய, பிலோமினாவின் வீட்டில் முத்துராமனை மதம் மாறக் கூறினர்; அவன், முடியாது என்று மூர்க்கமாய் மறுத்து விட்டான்.அதனால், வேறு வழி இல்லாமல், நண்பர்களின் உதவியுடன், பதிவு அலுவலகத்தில் மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சந்தோஷமாய் வாழ்ந்ததற்கான சாட்சியாய், ஒரே ஒரு புத்திரன்; தஞ்சாவூரில், விடுதியில் தங்கி, டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறான்.திருமணத்திற்கு பின்பும், சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்தாள் பிலோமினா. மகன் வீட்டிலிருந்தால், அவனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, சர்ச் வாசலில் இறக்கி விட்டு விட்டு, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்று விடுவான் முத்துராமன். பின், ஆராதனை முடிந்து காத்திருக்கும் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவான்.இவ்வளவு காலம், பிலோமினா, முத்துராமனை சர்ச்சிற்கு வரச் சொல்லி வற்புறுத்தியதே இல்லை. அவனும் உள்ளே போக ஆர்வம் காட்டியதில்லை. இன்றைக்கு அழைக்கிறாள். முத்துராமனுக்கு ஒரு நிமிடம், அவளின் விருப்பத்துக்கு சம்மதிக்கலாமா, நிராகரிக்கலாமா என்று குழப்பமாக இருந்தது. அப்புறம், மனைவியை சந்தோஷப்படுத்தலாமென்று முடிவு செய்தான்.இருவரும் சர்ச்சிற்கு போன போது ஆராதனை நடந்து கொண்டிருந்தது. அங்கு நடுநாயகமாய் அமர்ந்திருந்தவரின் உடையைப் பார்த்தே, பாதர் என்று புரிந்து கொண்டான். ஆங்காங்கே சிறிய, 'டிஜிட்டல்' போர்டுகளில் பாமாலை என்று எழுதப்பட்டு, சில எண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.அங்கு நடப்பது முத்துராமனுக்கு எதுவும் புரியவில்லை. எல்லாரும் உட்கார்ந்திருக்கும் போது, அவனும் உட்கார்ந்தான்; எல்லாரும் எழுந்து பாடும் போது, இவனும் எழுந்து நின்று வேடிக்கை பார்த்தான். கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருந்தது.பாதர், அவரின் இடத்திலிருந்து எழுந்து, கொஞ்சம் முன்னால் அமைக்கப்பட்டிருந்த மைக்கில் பேச ஆரம்பித்தார்.''பாதரோட பிரசங்கம் முடிந்ததும் பாமாலை; அப்புறம் நாம பாதர் கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கலாம்,'' என்று முத்துராமனின் காதுக்குள் கிசுகிசுத்தாள் பிலோமினா.''கர்த்தர் இயேசு, நம்மை இந்த உலகத்திற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருப்பதற்காக அனுப்பி வைத்திருக்கிறார்; உப்பாக இருப்பதென்றால் என்ன... எங்கே உப்பின் இயல்புகளை சொல்லுங்கள் பாக்கலாம்,'' என்றார் கூட்டத்தினரை பார்த்து!எல்லாரும் அமைதியாக இருந்தனர்.''சொல்லுங்கள்... யாராவது சொன்னால் தான், என் பிரசங்கத்தை தொடர முடியும்,'' என்றார்.''உப்பு உணவிற்கு சுவை கூட்டக் கூடியது.'' கூட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.''அற்புதம்! நாமும் மற்றவர்களின் வாழ்க்கைக்கு சுவை கூட்டுபவர்களாக இருக்க வேண்டும்; அடுத்து, யாராவது சொல்லுங்கள்...''''உப்பு மிக எளிமையானது; சாமானியர்களாலும் வாங்க முடியும்,'' இன்னொரு மூலையிலிருந்து குரல் ஒலித்தது.''மிக நல்லது... நாமும் நம் வாழ்க்கையை எளிமையானதாகவும், எளிதில் அனைவராலும் அணுகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். உப்பு என்றதும், நமக்கு ஒருவர் கண்டிப்பாக ஞாபகத்திற்கு வருகிறார்; அவர் தான் காந்தி; எளிமையின் மறு உருவம். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி போட்ட போது, சாமானிய மனிதர்களை திரட்டி, உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக தான், நமக்கு சுதந்திரமும் கிடைத்தது இல்லயா...'' என்றார்.''உப்பு, மிக சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது,'' என, எங்கிருந்தோ மற்றொரு குரல் ஒலித்தது.''மிகச் சரி. நாமும் பிறருடைய துன்பங்களை நமதாக்கி, அவர்களை வலியிலிருந்து விடுவித்து, குணமாக்க உதவ வேண்டும். ஆனால், இன்னும் உப்பின் முக்கியமான இயல்பை யாருமே சொல்லவில்லையே,'' என்றார் கூட்டத்தினரை பார்த்து!முத்துராமனுக்கு உப்பின் சில இயல்புகள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனால், சொல்லலாமா, வேண்டாமா என்று தயக்கமாக இருந்தது. பின், மெல்ல கை தூக்கினான்.பாதரும் அவனை நோக்கி, ''கூச்சப்படாமல் சொல்லுங்கள் அய்யா,'' என்றார்.இவன் எழுந்து நின்று, ''உப்பானது நீரில் எளிதில் கரைந்து, காணாமல் போகக் கூடியது,'' என்றான்.''அதே தான்... அருமையான கருத்து. அய்யா ஒருத்தர் தான், சபையில் எழுந்து நின்று சொல்லியிருக்கிறார். அவருக்கு என் வணக்கங்களும், ஆசீர்வாதங்களும்! உப்பை போலவே நாமும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, நம் அடையாளத்தை, அதாவது, ஐடண்டிட்டியை துறந்து, கரைந்து, காணாமல் போய் விட வேண்டும் என்கிறார் கர்த்தர்.''உங்களுடைய வாழ்க்கையில் உப்பாகவும், ஒளியாகவும் இருந்தவர்களை, எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா... நீங்கள், யாருடைய வாழ்க்கைக்காவது உப்பாகவும், ஒளியாகவும் இருந்திருக்கிறீர்களா....'' என, பாதரின் பிரசங்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.கண்களை மூடி, அவனுடைய வாழ்க்கையில், உப்பாக, ஒளியாக யாரெல்லாம் இருந்திருக்கின்றனர் என்று யோசிக்க ஆரம்பித்தான் முத்துராமன். அவனுடைய இளமைப்பருவம் வறுமையால் சூழப்பட்டது. அவன் பிறப்பதற்கே முன்பே அவனுடைய அப்பா இறந்து விட்டார்.அம்மாவின் உழைப்பால், அவர்களின் அன்றாட உணவிற்கான தேவைகளை கூட ஈடு செய்ய முடிந்ததில்லை. இவனும் சாணி பொறுக்கி கொண்டும், வேப்பமுத்து சேகரித்துக் கொண்டும், காடு மேடுகளில் தான் அலைந்து கொண்டிருந்தான்.அப்படி ஒருமுறை சாணி பொறுக்குவதற்காக மாடுகளுக்கு பின் திரிந்து கொண்டிருந்த போது தான், மாடு மேய்க்கிற குருசாமி, 'பள்ளிக்கூடத்துக்கு போய்யா; அங்க மத்தியான சாப்பாடு போடுறாங்களாம்...' என்றான்.அப்படித்தான் பள்ளிக்கு போக துவங்கினான் முத்துராமன். பள்ளியில் போடுகிற உணவும், அங்கு சொல்லி தருகிற பாடங்களும் ருசிக்க, தொடர்ந்து படிக்கலானான்.அவன் படித்த காலகட்டத்தில், கிராமப்புற பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில், 'மெரிட்' பரீட்சை நடத்தி, அதில் தேர்வாகும் முதல் நான்கு மாணவர்களை, பக்கத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சேர்த்து, அவர்கள் பிளஸ் 2 படித்து முடிப்பது வரையிலான, அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடு ஒன்று அமலில் இருந்தது.பஸ் போக்குவரத்து இல்லாத இவனுடைய கிராமத்திலிருந்து காலையில் கிளம்பிப் போனால், 'மெரிட்' பரீட்சை நடைபெறும் இடத்துக்கு, உரிய நேரத்துக்கு போய்ச் சேர முடியாது. எனவே, முதல் நாள் இரவே, விருதுநகரிலிருக்கும் எபிநேச வாத்தியார், அவருடைய வீட்டில் அவனை தங்க வைத்து, அவரே செலவழித்து, முத்துராமனை சாத்தூருக்கு அழைத்து போய் பரீட்சை எழுத வைத்து, கிராமத்திற்கு திரும்ப அழைத்து வந்தார்.அப்பரீட்சையில், மாவட்டத்தில் முதல் மாணவனாய் தேறிய முத்துராமனை, அருப்புக் கோட்டையில் உள்ள பள்ளியில் போய் சேர்ப்பதற்கான ஆரம்ப செலவினங்களுக்கு கூட, அவன் அம்மாவிடம் பணமில்லை; இஸ்மாயில் அண்ணன் தான், அவனுக்கு பணம் கட்டி, பள்ளியில் சேர்த்து விட்டார்.பிளஸ்2 படித்து முடித்தவனுக்கு, கோவை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்போதெல்லாம் ஒன்பதே கல்லூரிகள் தான் இருந்தன. இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. அப்படி கிடைத்த போதும், கல்லூரியில் சேர்வதற்கு தேவையான பணத்தை, அவனின் அம்மாவால், புரட்ட முடியவில்லை.யார் யாரிடமெல்லாமோ போய் கெஞ்சிப் பார்த்தாள். உதவ மனமிருப்போருக்கு தருவதற்கு பணமில்லை. பணமிருப்போருக்கு, 'இவள் பிள்ளையெல்லாம் இன்ஜினியரிங் படிப்பதா...' என்ற காழ்ப்பில், தருவதற்கு மனமில்லை. கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.முத்துராமனை அழைத்துக் கொண்டு, விருதுநகரிலிருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அம்மா, அம்மனிடம் முறையிட துவங்கினாள். பொதுவாக, அம்மாவின் முறையீடுகள் எப்போதுமே மனசுக்குள் இருக்காது; சத்தமாக, ஏதோ பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசுவது போல், அம்மனிடம் சண்டை போடுவாள். அப்படி அம்மனிடம் முறையிட்டு, அங்க பிரதட்சணம் செய்து முடித்து, அவனும், அம்மாவும் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தனர்.அப்போது, கோவில் குருக்களில் ஒருவர் வந்து, 'இங்க யாரும்மா, பையன இன்ஜினியரிங் காலேஜுல சேக்குறதுக்கு பணமில்லன்னு அம்மன்கிட்ட முறையீடு செய்துட்டு இருந்தது...' என்று கேட்டார்.அம்மாவும், முத்துராமனும் எழுந்து அவரிடம் போனதும், 'காலேஜுக்கு எவ்வளவும்மா கட்டணும்?' என்று கேட்டார்.முத்துராமன் தொகையை சொல்லவும், அங்கேயே எண்ணிக் கொடுத்தார். அம்மா அவரின் கால்களில் விழப் போக, 'அய்யோ... இந்தப் பணம் என்னோடது இல்லம்மா; நீ அம்மன் கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கிறத கேட்ட, கோவிலுக்கு வந்த ஒரு புண்ணியவான், என்கிட்ட இந்த பணத்தை கொடுத்து, உன்கிட்ட சேர்க்கச் சொல்லிட்டு போயிட்டார்ம்மா...' என்றார்.'சாமி... அவரு யாருன்னு சொல்லி, அவரோட முகவரிய எழுதிக் குடுங்க; எங்களுக்கு வசதி வந்ததும், அவரு பணத்தை கண்டிப்பா திருப்பிக் குடுத்துடுறோம்...' என்றான் முத்துராமன்.'அதெல்லாம் தேவையில்லப்பா; எனக்கே அவர யாருன்னு தெரியாது...' என்று சொல்லி விட்டு போய்விட்டார் குருக்கள்.பின்னாளில் பலமுறை இதைப் பற்றி யோசிக்கும் போது, முத்துராமனுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கிறது. நண்பர்கள் பலரிடம் இதுபற்றி அவன் சொல்லியிருக்கிறான்; அவர்கள் யாருமே இதை நம்பியதில்லை.பாதர் பிரசங்கத்தை முடித்து, அறிவிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். ''இந்த வருஷமும் ஏழைப் பிள்ளைகள் நிறைய பேர், கல்விக்கான உதவித் தொகைகள் கேட்டு, நம்மிடம் விண்ணப்பித்துள்ளனர். அப்படி உதவி கோரி விண்ணப்பத்தவர்களில், நம் சபையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவான ஏழைப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.''கள்ளிக்குப்பத்தை சேர்ந்த ஒரு சகோதரியின் பெண்ணிற்கு, இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால், அதில் சேர்ப்பதற்கு பெருந்தொகை தேவைப்படுகிறது; அந்த தொகையை புரட்ட, அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதனால், கருணை உள்ளம் கொண்டவர்கள், இந்த ஆண்டு கல்விநிதிக்காக தாராளமாக தந்து உதவும்படி, உங்கள் எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.ஆராதனைக் கூட்டம் முடிந்து வீட்டிற்கு சென்றதும், 'செக்' புக்கை எடுத்துக் கொண்டு, மறுபடியும் சர்ச்சிற்கு போனான் முத்துராமன். பெருந்தொகையை எழுதிய காசோலையை பாதரிடம் கொடுத்து, ''இதை, அந்த ஏழை பெண்ணிற்கு, மெடிக்கல் காலேஜ்ல சேர்றதுக்கு குடுத்துருங்க பாதர்,'' என்றான்.''வாருங்கள்... உங்களை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அழைத்துப் போகிறேன்; இதை, நீங்களே நேரிடையாக அந்தப் பெண்ணிற்கு கொடுங்கள்; சந்தோஷப்படுவார்கள்,'' என்றார் பாதர்.''தேவையில்ல பாதர்... நான் அப்பெண்ணின் வாழ்க்கைக்கு உப்பாக இருக்கவே ஆசைப்படுகிறேன்,'' என்றான் முத்துராமன்.புன்னகைத்தபடி காசோலையை வாங்கிக் கொண்ட பாதர், ''கர்த்தர் உங்களை கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் அய்யா,'' என்று நெற்றியில் சிலுவையிட்டு அனுப்பி வைத்தார்.சில்வியாமேரிஇயற்பெயர்: சோ.சுப்புராஜ், வயது: 50.பணி: கட்டடப் பொறியாளர், தினமலர் - வாரமலர் உட்பட பல்வேறு இதழ்களில் இதுவரை, 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கவிதைகள் வெளியாகி உள்ளன. சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள், பல போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஏற்கனவே ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !