உள்ளூர் செய்திகள்

மிரட்டல் கடிதம்!

'நான் கும்பிடும் தெய்வம் என்னைக் காப்பாற்றும்...' என, அழுத்தமான நம்பிக்கை வேண்டும்; அந்த நம்பிக்கை, தைரியத்தைக் கொடுத்து, எதையும் வெற்றி கொள்ள செய்யும் என்பதை விளக்கும், வரலாற்று நிகழ்வு இது:பத்தொன்பதாம் நுாற்றாண்டின் முற்பகுதி... காடியவாட் ராஜ்ஜியத்தை (அகமதாபாத் பகுதியில் உள்ளது), ராணி ராஜ்பாய் என்பவர் ஆண்டு வந்தார். அக்காலத்தில், அந்த ராஜ்ஜியத்தை பெண்கள் ஆளுவதுதான் வழக்கம்.ராமனிடமும், கிருஷ்ணனிடமும் அளவில்லாத பக்தி கொண்டவர்; அஞ்சாநெஞ்சம் கொண்டவர்; போர்க்கலையில் தலை சிறந்தவர்.நல்ல முறையில் ஆட்சி செய்து வந்த ராணி, வயதானதும், தீர்த்த யாத்திரையாக, கோவில்களுக்கு செல்ல தீர்மானித்தார்.தன் மருமகளான, கோவல்பாயிடம், 'தீர்த்த யாத்திரை செல்கிறேன். நான் திரும்பி வரும் வரை, நாட்டை நல்லமுறையில் ஆண்டு வா. திரும்பியதும், நான் பொறுப்பு ஏற்கிறேன்...' என்று கூறி, புறப்பட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு பின், திரும்பி வந்தார், ராணி. கோட்டைக்குள் ராணியை அனுமதிக்க மறுத்தனர், காவலாளிகள்.அந்த வேளையில், 'உங்களுக்கோ வயதாகி விட்டது; இறைவன் பாதங்களை அடையும் காலம் நெருங்கி விட்டது. இனிமேல் உங்களுக்கு ராஜ்யபாரம் வேண்டாம். கடைசி காலத்தில், கோவில், குளங்களுக்குப் போய், கிருஷ்ணா, ராமா என்று காலத்தைக் கழியுங்கள்...' என, தகவல் அனுப்பி இருந்தாள், மருமகள்.ராணிக்கு கோபம் தாங்கவில்லை.அப்போது, ராஜ்கோட்டிலிருந்த பிரிட்டிஷ் துாதரிடம் தனக்கு உதவுமாறு கேட்டார், ராணி; அவரோ ஒதுங்கிக் கொண்டார்.'ஒருபோதும் அஞ்ச மாட்டேன். சைனியங்களை நானே திரட்டுவேன்; போர் புரிவேன்; தெய்வ அருளால் வெற்றி கொள்வேன்...' என்று கர்ஜித்தார், ராணி.தன்னிடம் விசுவாசமுள்ள ஆயிரம் வீரர்களை சேர்த்து, முதுமையான வயதிலும் கவசம் அணிந்து, கையில் வாள் ஏந்தி, குதிரை மீதேறி, தலைமை தாங்கி, கோட்டையை நோக்கி சென்றார்.கோட்டையின் உள்ளேயிருந்து பீரங்கிக்குண்டுகள், மழை போலப் பொழிந்தன. ராணியைச் சுற்றியிருந்த வீரர்களில் பலர் விழுந்தனர்.'கோட்டைக் கதவுகளை இடியுங்கள்...' என, கம்பீரமாகக் கத்தினார், ராணி.ராணியின் குரலையும், கோபாவேசப்பட்ட முகத்தையும் பார்த்த காவலாளிகள், கோட்டை கதவுகளை திறந்து விட்டனர். தன் வீரர்களுடன் உள்ளே பாய்ந்தார், ராணி. அதையறிந்த மருமகள், எங்கேயோ ஓடி மறைந்தாள்.தங்கள் முதிய ராணியை விமரிசையாக வரவேற்றனர், மக்கள். பழையபடியே சிம்மாசனத்தில் அமர்ந்தார், ராணி.ராணியின் அஞ்சாநெஞ்சமும், தைரியமும், அழுத்தமான தெய்வ பக்தியும் சாதித்த வரலாறு இது.ஆன்மீக தகவல்கள்!வெள்ளிக்கிழமையில் பாலை வீணாக்கினால், தரித்திரம் வரும்.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !