உள்ளூர் செய்திகள்

காலம் மாறும்!

சின்னஞ் சிறிய விதையை விதைத்தால் கூட, அது முளைத்துப் பயன் தரும் வரை, பொறுமையாக இருந்தால் தானே பலன் கிடைக்கிறது. அதேபோல், காலம், யாரையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டே இருக்காது. துயரத்திலிருந்து, மகிழ்ச்சியில் மாற்றும். தேவை, பொறுமை. அதை விளக்கும் கதை...காட்டில், ஒரு குடிசையில், நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர் சுவேந்தன், மனைவி சுவேதினியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்.அரச தம்பதியராக இருந்தும், அவர்களது ஆடைகள் கந்தலாக, மோசமான நிலையில் இருந்தன. அரசியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அவள் புடவையை நனைத்தது. அப்போது, வாசலில் ஏதோ ஓசை கேட்க, மடியிலிருந்த கணவன் தலையை மெதுவாக கீழே வைத்து, வாசலுக்கு விரைந்தாள், அரசி.அங்கே, ஆங்கிரச முனிவர் இருந்தார். அரசி, அவரை வணங்கி எழுந்ததும், 'அம்மா, யார் நீ... பார்த்தால் அரச குடும்பத்தை சேர்ந்தவள் போல் தோன்றுகிறதே...' என்றார்.'சுவாமி, நன்றாக ஆட்சி செலுத்தி வந்த எங்களை, தாயாதிகளெல்லாம் சேர்ந்து அநியாயமாக போரிட்டு, விரட்டி விட்டனர். நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும்...' என்றாள்.'கண்ணீரைத் துடை. கவலையை விடு. எந்த துயரத்துக்கும் முடிவு உண்டு. வா, வனவாசத்தின்போது, ஸ்ரீராமர் தங்கிய பஞ்சவடிக்குப் போகலாம். அங்கு எழுந்தருளியிருக்கும், அம்பாளை பூஜை செய். நீ இழந்த ராஜ்ஜியமும் கிடைக்கும்; புத்திரனும் பிறப்பான்...' என்றார்.பஞ்சவடிக்கு போனதும், அரச தம்பதியருக்கு, அம்பாளின் மகிமையை விவரித்த ஆங்கிரசர், அவர்களுக்கு, தானே முன்னின்று, நவராத்திரி பூஜையை செய்து வைத்தார். அரசனும், அரசியும் பக்தியோடு ஒன்பது நாள் பூஜை செய்தனர்.அதன்பின், அம்பிகையின் அருளால், ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள், அரசி. சூரியப்பிரதாபன் என பெயர் சூட்டினர். ஆங்கிரச முனிவரிடம் அனைத்து கலைகளையும் கற்று, இளமைப் பருவத்தை அடைந்தான், சூரியப்பிரதாபன்.ஒருநாள், ஆங்கிரசரை வணங்கி, 'குருதேவா, உங்கள் அருளாலும், அம்பாளின் அருளாலும் அனைத்தும் கற்றேன். இனி, பகைவர்களை வென்று, ராஜ்யத்தை மீட்க வேண்டும். அடியேனுக்கு ஆசி கூறி அனுப்புங்கள்...' என, வேண்டினான், சூரியப்பிரதாபன்.ஆசி கூறி அனுப்பினார், ஆங்கிரசர்.பெற்றோர் இழந்ததை, தான் மீட்டாக வேண்டும் என்ற துடிப்பு, ஆங்கிரசரின் அரும்பயிற்சி, அனைத்திற்கும் மேலாக அம்பிகையின் அருள் ஆகியவற்றுடன் வந்த சூரியப்பிரதாபனை, பகைவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.வெற்றி பெற்ற சூரியப்பிரதாபன், காடு திரும்பி, ஆங்கிரச முனிவரை பணிந்தான். அவர் ஆசியுடன், பெற்றோருடன் நாடு திரும்பி, அரியணை ஏறினான். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய சுவேதனும், சுவேதினியும், அரண்மனையிலும் தொடர்ந்து நவராத்திரி வைபவத்தைக் கொண்டாடினர். அவர்கள் செய்த பூஜா பலன், அவர்களின் சந்ததியையும் சேர்த்து வாழ வைத்தது.பொறுமை, பரம்பரையையும் வாழ வைக்கும்! பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !