உள்ளூர் செய்திகள்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்

போதி தர்மரை சந்தித்த ஓர் அரசன், தன் கவலைகள் பற்றிக் கூறினான். 'நாளை விடியற் காலை இங்கு வா! என் பிரம்போடு காத்திருக்கிறேன். உன் கவலைகளையும் கொண்டு வா! அவற்றை ஓட ஓட விரட்டுகிறேன்!' என்று போதி தர்மர் சொன்னார்; அரசன் குழம்பினான். அடுத்த நாள் காலை, தயங்கித் தயங்கி வந்தான். பிரம்பை நீவிக் கொண்டே போதி தர்மர், 'எங்கே உன் கவலைகள்...' என்றார். 'அவை பொருட்களல்ல, எனக்குள் இருக்கின்றன...' என்று சொன்னான் அரசன். 'கண்மூடி அமர்ந்து அவற்றை வெளியே கொண்டுவா...' என்றார் போதி தர்மர். கண்மூடி அமர்ந்து, தன் கவலைகளை கவனிக்க கவனிக்க, அவை வினாடியில் கரைந்து போவதை உணர்ந்தான். கண் திறந்து, கைகூப்பி, 'உண்மை தான்... என் கவலைகளை ஓட ஓட விரட்டி விட்டீர்கள்...' என்றான். ***கண்ணதாசன், இளம் வயதில் திருவொற்றியூரில் இருந்த, 'அஜாக்ஸ்' என்ற நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவருக்கு சிரங்கு ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் போட்டும் குணமாகவில்லை. அதனால், டாக்டரிடம் சென்று, ஊசி போட்டு வந்தார்.ஒருநாள் ஊசி போடப் புறப்பட்ட கவிஞர், தம் முதலாளியிடம், 'நான் டாக்டரிடம் சென்று, 'பின்' (ஊசி) போட்டுக் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன்...' எனச் சொன்னாராம். அந்த முதலாளி சிரித்து விட்டார்.'இஞ்செக்ஷன் போட்டுக் கொள்ளப் போகிறேன்...' என்று சொல்லத் தெரியாமல், அப்பாவித்தனமாக ஊசி என்பதை, 'பின்' போட்டு கொள்கிறேன் என்று சொன்னால், முதலாளி சிரிக்காமல் இருப்பாரா? ***ஏப்.,18, 1929 தேதியிட்ட, 'தி இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் பகத்சிங், தத் ஆகிய இருவரின் புகைப்படங்களும், முதல் பக்கத்திலேயே வெளியாகி இருந்தன. தலையில் தொப்பியும், முகத்தில் சிறிய மீசையுமாக, தாடி மழிக்கப்பட்ட, பகத்சிங் புகைப்படம் தான் இன்னும் பல நூல்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பகத்சிங் என்றால், எல்லாருக்கும் இந்த உருவம் தான் நினைவுக்கு வரும்.ஆனால், அவர் 1928 வரை ஒரு சீக்கிய மத இளைஞனைப் போல் தாடி, தலையில் உச்சிக் கொண்டை ஆகிய தோற்றத்துடன் தான் இருந்தார். கடந்த 1929ல் தான் சாண்டரஸ் கொலைக்குப் பிறகு, தாடியைக் கலைத்து இப்படி மாறுவேடம் புனைந்தார்.இந்துஸ்தான் டைம்சில், வெளிவந்த புகைப்படமும், போலீசாருக்கு இவ்வழக்கில் இன்னொரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சென்ற வருடம் வரை இருந்த பகத்சிங்கின் தோற்றம் போலீசாரிடம் புகைப்படமாக இருந்தது. இந்த வருடம் எட்டாம் தேதி சட்டசபையில் பகத்சிங்கைத் கைது செய்தபோது, எந்த புகைப்படக்காரரும் புகைப்படம் எடுக்கவில்லை. அப்படியிருக்க, கைதான போது பகத்சிங் எப்படி இருந்தாரோ, அதே உருவத்தை ஒரு பத்திரிகை புகைப்படமாக வெளியிடுகிறது என்றால், அந்தப் பத்திரிகைக்கும், பகத்சிங்கிற்கும் தொடர்பு இருக்கக் கூடுமோ என்று, போலீஸ் சந்தேகப்பட்டது. பின் போலீஸ் விசாரணையில், சமன்லால், துர்காதாஸ் முதலான இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஊழியர்கள் நால்வருக்கும், புரட்சி இயக்கத்தினருக்கும் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !