திண்ணை - நடுத்தெரு நாராயணன்
'அமெரிக்காவை முதன்முதலில் கண்டுபிடித்த கொலம்பசும், ஒரு வகையில் அரசியல்வாதி தான்!' என்று, ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம்:'எங்கே போகிறோம் என்று தெரியாமல் புறப்பட்டார் கொல்ம்பஸ். ஏன் போகிறோம் என்றும் அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. போய்ச் சேர்ந்த பிறகும், எந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம் என்று அவருக்குத் தெரியவில்லை. இத்தனை காரியங்களையும், அவர் தன் சொந்தப் பணத்தை செலவழித்துச் செய்யவில்லை. மற்றவர்களின் (ராணி இசபெல்லா நிதியுதவி) பணத்தில் தான் செய்து முடித்தார்!'***ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெனாலியில் பேசுவதற்காக, அண்ணாதுரையை அழைத்துப் போக, கோபால கிருஷ்ணமூர்த்தி எனும் ஆந்திரத் தோழர் வந்திருந்தார். அவர், 'கழகக் கொள்கைகளை விளக்கக் கூடிய ஆங்கில புத்தகங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்; அவற்றை எல்லாம் கொடுங்கள். எடுத்துச் சென்று எங்கள் நாட்டிலுள்ளவர்களுக்குக் காண்பிக்க வேண்டும்!' என்று அண்ணாதுரையிடம் கேட்டார்.அவர் கேட்டபடி கொடுக்கக்கூடிய ஆங்கிலப் புத்தகங்கள், இருந்தால் தானே கொடுப்பதற்கு! ஆகவே, அண்ணாதுரைக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சாமர்த்தியமாக, 'கழகக் கொள்கைகளை விளக்கும் புத்தகங்கள், தலைமை நிலையத்தில் இருக்கின்றன...' என்றார் அண்ணாதுரை.'ஒரு கடிதம் கொடுங்கள்... நான் போய் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார் அவர்.'இன்று நெடுஞ்செழியன் இல்லை; பிறகு நான் அனுப்பச் சொல்கிறேன்...' என்றார் அண்ணாதுரை. 'நெடுஞ்செழியன் இல்லாவிட்டால் என்ன, தலைமை நிலைய நிர்வாகி கூடவா இல்லை?' என்று கேட்டார். 'ஆமாம்... அவர் கூட நான்கு நாட்களாக விடுமுறையில் இருக்கிறார். நான் தெனாலிக்கு வரும் போது எடுத்து வருகிறேன். நீங்கள் போங்கள்!' என்று அனுப்பி வைத்தார்.அதன் பிறகு அண்ணாதுரை, தெனாலிக்கு போய் காரை விட்டு இறங்கியதும், 'புத்தகம் எடுத்து வந்தீர்களா?'' என்று கேட்டார் அந்தத் தோழர்.'பெட்டி நிறைய எடுத்து வைத்தேன்; ஆனால், அதை காரில் எடுத்து வைக்க மறந்து விட்டார் டிரைவர். பிறகு அனுப்பி வைக்கிறேன்!' என்று கூறி, தப்பித்துக் கொண்டார்.***ஒரு பிரபல அரசியல் தலைவர், ராஜாஜியிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு விஷயத்தைச் சொன்னார். அந்தப் பிரபலமான அரசியல் தலைவர், தன்னுடைய சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக ராஜாஜியிடம் குறிப்பிட்டார்.உடனே, 'வேண்டாம்... சுயசரிதை எழுதுவதை நிறுத்தி விடுங்கள். வேண்டுமானால், மற்றவர்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதட்டும். எனக்கென்று ஒரு எதிர்காலம் இருப்பதாக நான் நம்புவதைப் போலவே, உங்களுக்கென்றும் ஒரு எதிர்காலம் இருப்பதாக நம்புகிறேன். சுயசரிதம் எழுதினால், நமக்கு ஒரு சுவையான கடந்த காலம் இருந்தது; ஆனால், பிரகாசமான எதிர்காலம் இருக்கப் போவதில்லை என்று நாமே ஒப்புக் கொள்வதாகத் தான் அர்த்தம்!' என்று சொன்னார் ராஜாஜி.***அந்த அரசனின் வேலைக்காரன், மகிழ்ச்சியாக பாடிக் கொண்டும், புன்னகை மாறாமலும் வாழ்ந்தான். அரசனுக்குப் பொறாமை. அமைச்சரிடம் கேட்டான்.அடுத்த நாள் காலை 99 நாணயங்கள் கொண்ட பை, வேலைக்காரன் வீட்டு வாசலில் கிடந்தது. எண்ணிப் பார்த்தவன், 'ஒரு பையில் 100 நாணயங்கள் இருக்கும். எனக்குரிய நாணயங்களில் ஒன்றை யார் எடுத்தது?' என்று கவலை கொள்ளத் துவங்கினான். பாட்டு, புன்னகை எல்லாம் மறைந்தது. அரசன் கூப்பிட்டு விளக்கிய பின்னர், வேலைக்காரன் வெட்கத்தில் தலை கவிழ்ந்தான். கிடைத்ததை வைத்து மகிழாவிட்டால், கிடைத்ததையும் அனுபவிக்க முடியாது என்பதை உணர்ந்தான். ***