திண்ணை - நடுத்தெரு நாராயணன்
பாரதிதாசன் வைத்துக் கொண்ட புனைப் பெயர்களில் ஒன்று, 'கிண்டல்காரன்!' அது, எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.மலேசியாவிலிருந்து, நாடக ஆசிரியர் ஒருவர், கையில் ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியோடு பாரதிதாசனிடம் வந்தார். பாரதிதாசன் அதைப் படித்து, கருத்து கூற வேண்டும் என்பது அவர் விருப்பம்.பாரதிதாசன், அவர் கொணர்ந்த சுவடியைப் புரட்டப் புரட்ட, மலேசிய நண்பரின் உள்ளத் துடிப்பு அதிகரித்தது. ஓரளவு கவிஞர் புரட்டி முடித்து விட்டார் பிரதியை.கவிஞரை நோக்கிய மலேசிய நண்பர், 'ஐயா!' என்றார்.'இருக்கு, இருக்கு...எல்லாமே இருக்கு!''நல்லா வருங்களா?''வராம எங்கே போகப் போவுது... நகைச்சுவைப் பாத்திரங்கள் ரெண்டொன்று சேர்க்கணும்!''சேர்த்துட்டாப் போதுங்களா?''போதும்... போதும்! அப்படியே காட்சிகளைக் கொஞ்சம் அங்க இங்கே மாற்றி வைக்கணும்!''சரிங்க ஐயா!''கதை நல்லாருக்கு. கொஞ்சம் உயிரோட்டம் சேர்க்கணும்...''அப்புறம் ஐயா?''அப்புறம் என்ன... பிரமாதமா வந்திடும். நீ என்ன செய்யறே, வசனத்தை இன்னும் கொஞ்சம் திருத்திக்கணும். குறைக்க வேண்டிய இடத்திலே குறைச்சிடணும்... கூட்ட வேண்டிய இடத்திலே கூட்டணும்; அவ்வளவு தான். மற்றபடி நல்லாவே இருக்கு!''நல்லா இருக்குங்களாய்யா?''ஆமாம்பா... நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுச் செய்யணும் நீ!'அந்தக் கிண்டல்காரன், கொஞ்சம் கூட சிரிக்காமல், கேட்டுக் கொண்டிருப்பவர் ஐயப்படும்படியாக, தொனியில் வேறுபாடு கிளப்பாமல் பேசியதைக் கேட்டேன். உண்மையிலேயே, 'பொல்லாத கிண்டல் காரர்'தான் பாரதிதாசன்.— ஈரோடு தமிழன்பனின், 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து...***தேசிய உணர்ச்சியை வெளிக்காட்ட, உணர்ச்சிமயமான சின்னங்களை அரசு பயன்படுத்துகிறது. மக்களுக்கு தேசிய உணர்ச்சியை உண்டாக்க, சின்னங்கள் பயன்படுகின்றன.சில நாடுகள், தங்களது தேசிய சின்னமாகப் பறவைகள் அல்லது விலங்குகளை வைத்துள்ளன. இது, பழமையான சம்பிரதாயம். ஆதி கால மக்கள் கேடு செய்யும் பிசாசுகளை ஓட்டவும், அதிர்ஷ்டம் உண்டாக்கவும் ஒரு குறிப்பிட்ட பறவை அல்லது விலங்கைத் தேர்ந்தெடுத்தனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.பருந்து - சில சமயங்களில் இரண்டு தலைகளை உடைய பருந்து, தேசிய சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. புராதன ரோமானியப் படையினர் அவர்களது கொடிகளில் உருவத்தை வரைந்திருந்தனர். நெப்போலியன் பரபரப்பான சாதனைகளை அறிவிக்கும் பிரகடனங்களிலும், இதர தஸ்தாவேஜ்களிலும் பருந்து உருவத்தை அச்சிட்டான்.ஜெர்மானியப் பேரரசும், ரஷ்யாவில் ஜார் அரசும் பருந்து அடையாளத்தை வைத்திருந்தனர். அமெரிக்க அரசும் பருந்து சின்னத்தை வைத்துள்ளது. அமெரிக்க யூனியனில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனிச் சின்னங்களை வைத்துள்ளன. தனியொரு நட்சத்திரம் (டெக்சாஸ்), சீமை எலி (உரிசான்), சூரியகாந்திப்பூ (கன்சாஸ்), ஜாதிக்காய் (கன்னக்டிகட்).இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றைக் கொண்ட பிரிட்டனுக்கு, சிங்கம் தேசிய சின்னமாக விளங்குகிறது. இங்கிலாந்தைத் தனியாக குறிக்கும் போது, 'ஜான் புல்' என்று அழைக்கின்றனர். பழைய நாட்டுப்புற கனவானுடன், காவல் நாயும் சேர்ந்து காணப்படுவதே, 'ஜான் புல்' சின்னம். தற்கால சோவியத் ரஷ்யாவின் சின்னம் அரிவாளும், சுத்தியலும்.இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்தபோது, 'பாசிஸ்' என்ற ரோமானிய சின்னத்தைத் தேர்ந்தெடுத்தான். ஒரு கோடாரி சுற்றி வைக்கப்பட்ட இரும்புக் கம்பிக் கட்டுக்கு, லத்தீன் மொழியில் 'பாசிஸ்' என்று பெயர். அதிலிருந்து பிறந்ததே, 'பாஸிஸ்ட்' என்ற சொல்.— 'சர்வதேசக் கூட்டுறவின் வரலாறுகள்' நூலிலிருந்து...