உள்ளூர் செய்திகள்

டைட்டானிக் காதல்... (23)

முன்கதை சுருக்கம்: புவனா - கார்த்திகேயனுக்கு கோவிலில் திருமணம் நடத்த, சாம்பசிவமும், ராஜாராமனும் ஏற்பாடுகளை துவங்கினர். மருத்துவமனையில் குருமூர்த்தி சிவாச்சாரியார், ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புவனா இல்லாதது குறித்து உறவினர்கள் கேட்டனர். விஷயமறிந்து ஆளாளுக்கு அவளை திட்ட, 'கணவர் குணமானால் போதும். வேறு எதுவும் வேண்டாம்...' என, பர்வதம் கூற, அனைவரும் மவுனமாயினர் -''என்னங்கடா சொல்றீங்க?'' என்று உறுமினார், பொன்னப்பர்.''சின்னய்யா ஆபீசு பூட்டிக் கிடக்குதுங்க... அந்தப் பக்கமே அவரு வர்றதில்லீங்க.''''ஏண்டா... வீடு தெரியுமில்ல, நேரா வீட்டுக்கு போயிருக்க வேண்டியது தானே?''''பாத்தோமுங்களே... அங்கிட்டும் அவரு இல்லீங்களே.''''அப்படி எங்கடா போயிட்டான்... யாரையாச்சும் விசாரிக்க வேண்டியது தானே?''''விசாரிச்சோமுங்க... யாருக்கும் தெரியலீங்க.''''வீட்டு வாசல்ல, கார் இருக்குதாடா?''''இருக்குங்க.''''சின்னய்யா கார்தானே, நல்லா பார்த்தீங்களா?''''பார்த்தோமுங்க... சின்னய்யா காரேதாங்க.''''கார் இருக்குதுன்னா, எங்கடா போயிருப்பான்... ஒருவேளை, அந்த பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஏதாச்சும் கோவில்ல வச்சு, தாலி கட்டி, கல்யாணத்தை முடிச்சுக்கலாம்ன்னு போயிருப்பானோ?''''இருக்கலாமுங்க.''''அப்படின்னா, விடாதீங்கடா... நாலு பேர் திருப்பதி, நாலு பேர் பழநி, நாலு பேர் திருத்தணி, நாலு பேர் திருச்செந்துார்ன்னு சுத்துங்கடா... நான் சொன்ன மாதிரி கல்யாணம் கட்டிக்கிட்டிருந்தான்னா, அவன் கண்ணு முன்னாலயே அந்த பொண்ணு கழுத்துல இருக்குற தாலிய அறுத்து, அவள வெட்டி பொலி போடுங்கடா.''அதற்கு மேல் கேட்டுக் கொண்டிருக்க முடியாமல், ஆவேசத்தோடு உள்ளே நுழைந்தாள், ஜோதி.''என்ன மாமா பேசுறீங்க, உங்க மவன் கட்டுன தாலிய அறுத்தா, என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா?''''ஓஹோ... எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு தான் இருந்தியா?''''பெத்த மகன் நல்லா இருக்கணும்ன்னுதான், நல்ல அப்பன் நினைப்பான்.''''நா கெட்ட அப்பன்னே வச்சுக்கிடு. ஆனா, ஊருக்கு நல்ல மனுஷனா இருக்க நெனைக்கிறேன். என் ஜாதிக்கு பங்கம் வராம காப்பாத்தணும்ன்னு, துடிக்கிறேன். நம் ஜாதி தலைவன், நானு; எனக்கு ஒரு நீதி, மத்தவங்களுக்கு ஒரு நீதின்னு பாக்குறவனில்ல.''''என்ன மாமா, பெரிய ஜாதி... அன்புக்கும், பாசத்துக்கும் முன்னால ஜாதி என்ன மாமா, ஜாதி...''''வெறும் ஜாதி மட்டுமில்ல, நீ சொன்ன அதே அன்பும், பாசமும் கூட சேர்ந்துதான் என்னை இதைச் செய்யச் சொல்லுது.''''அன்பும், பாசமும் இருக்குறவங்க இப்படி நடக்க மாட்டாங்க மாமா.''''அன்பும், பாசமும் இருக்குறதாலத்தான் இப்படி நடக்குறேன்.''அவள், அவரையே பார்த்தாள்.''என்ன பாக்குற... ஒன்ன சின்ன வயசுலேர்ந்து துாக்கி வளத்தவன், நானு. ஒனக்கு ஒங்கப்பன் மொகம் தெரியாது. நான் மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்ட ஒனக்கு, எம் மவனே ஆனாலும் துரோகம் செய்ய வுட மாட்டேன்.''''அவுரு எங்க மாமா, எனக்கு துரோகம் செஞ்சாரு... ஏதோ அவுரு என்னை காதலிச்சு, கைவிட்ட மாதிரி பேசுறீங்க?''''ஏம்மா, சின்ன புள்ளையிலேர்ந்து நாங்க சொல்லிச் சொல்லித்தானே வளர்த்தோம். உனக்கு அவன் - அவனுக்கு நீன்னு.''''நீங்க சொல்லிட்டா ஆயிருச்சா மாமா... மனசு கேக்கணுமில்ல. அவுரு மனசு வேற ஒருத்திக்கிட்டல்ல போயிருச்சு...''''அப்படியெல்லாம் போகக் கூடாதுன்னுதான், அந்த வேறொருத்திய கிள்ளி துாக்கி எறியச் சொல்றேன். பயிறு வெக்குறபோதே களை எடுக்குறோமில்ல, அந்த மாதிரி...''''நான் ஒருத்தி இல்லேன்னா, இந்த பிரச்னையே வந்திருக்காதுல்ல, மாமா.''''நீ, எம் மவனே இல்ல போடான்னு வீட்டை விட்டு வெரட்டி, தலைய முழுகியிருப்பேன்...'' சட்டென்று சொல்லி விட்டார். உடனே, நா இடறி விட்டதை புரிந்து, மாற்ற முயன்றார்.''அது எப்படிம்மா... நானே, ஜாதி சங்க தலைவனா இருந்துக்கிட்டு எப்பிடி உட முடியும்?''''புரியுது மாமா...'' என்றவளிடமிருந்து ஓர் ஆழப்பெருமூச்சு வெளிப்பட்டது.''என்னம்மா புரியுது?''''எல்லாம் புரியுது, மாமா.''''புரிஞ்சுக்கிட்ட இல்ல, பேசாம போயிரு... இதுக்கு மேல இதுல தலையிடாத... என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும்.'''எனக்கும் என்ன செய்யணும்ன்னு தெரிஞ்சிடுச்சு, மாமா...' என, தனக்குள் முணுமுணுத்தவள், ''சரி மாமா...'' என்று, அந்த இடத்தை விட்டு, ஒரு தீர்க்கமான முடிவோடு அகன்றாள், ஜோதி.திமிலோகப்பட்டது ஊர். அந்த சின்ன கிராமம், சந்தோஷத்தில் மிதந்தது. கல்யாணத்திற்கு ஒருவர் விடாமல் அழைத்திருந்தார், சாம்பசிவம். எல்லாரும், தங்கள் வீட்டு கல்யாணம் போல், வரிந்து கட்டி வேலை செய்தனர். ஓடி ஓடி உழைத்தான், ராஜாராமன். ஊர் கூடி இழுத்த தேர், வெள்ளிக் கிழமை காலை, நிலைக்கு வந்தது. நல்ல சுபமுகூர்த்தத்தில், சாம்பசிவத்தின் மடியில், சர்வாலங்கார பூஷிதையாக, ஒன்பது கஜ புடவையோடு, கைகூப்பி பரவசமாக உட்கார்ந்திருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் தாலி கட்டினான், கார்த்திகேயன்.அந்த இடம் முழுவதும் ரோஜா இதழ்களாலும், அட்சதையாலும் மங்களகரமாக நிறைந்திருந்தது. கெட்டி மேளம் நின்று, நாதஸ்வரக்காரர் வேறு ஏதோ வாசிக்க ஆரம்பித்தார்.ஒரு பெரிய காரியத்தை நிறைவேற்றிய திருப்தியும், அமைதியும் ராஜாராமன் முகத்தை வந்தடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.புவனாவின் கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்த அதே நேரம் - நாள் கணக்கில், கண் திறக்காமல் கிடந்தவர், கடைசி நிமிடத்தில், கண் விழித்தார். சைகை காட்டி, நர்சை தன் அருகில் கூப்பிட்டு, 'ஆக்சிஜன் மாஸ்க்'கை எடுக்க சொன்னார். உதடுகள் லேசாக முணுமுணுத்தன. ''பர்வதம்... பார்க்கணும்...'' என்றார்.உடனே வெளியில் ஓடி வந்து, ''யாரும்மா பர்வதம்... 'பேஷன்ட்' பார்க்கணும்ன்றாரு...'' என்றாள், நர்ஸ்.''ஓ... அவர் கண்ணை முழிச்சுட்டாரா... ஞாபகம் வந்துடுத்தா... சர்வேஸ்வரா... நீ எங்களை கைவிடல...'' என, ஐ.சி.யு.,வினுள் ஓடி, அவர் கட்டிலின் அருகே நின்றாள். கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன.''நீங்க கண்ணை முழிச்சுட்டேள்... நன்னாயிட்டேள்னா...''தடவி தடவி அவள் கையை பற்றி, ''என்னை மன்னிச்சுடு, பர்வதம்... உன்னை நிர்கதியா விட்டுட்டு போறேன்... குழந்தைகளை பார்த்துக்கோ.''கடைசி வார்த்தைகள் கணீரென்று வந்தன. அணைவதற்கு முன், பிரகாசமாய் சுடர் விட்டது, விளக்கு. பின், பொட்டென்று அணைந்தது.குருமூர்த்தி சிவாச்சாரியாரின் உயிர் பிரிந்தது. ''ஐயோ... என்னை விட்டுப் போயிட்டேளே...'' என்று அலறினாள், பர்வதம். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்கள் இருளத் துவங்கின. கால்கள் தள்ளாடின. அவளை பிடித்து அழைத்து வந்து, வெளியில் நாற்காலியில் உட்கார வைத்தாள், நர்ஸ்.''என்ன ஆச்சு மன்னி?''''உங்கண்ணா, நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு போயிட்டார்.''''ஐயோ, மன்னி...'' என்று, அவளை கட்டிக் கொண்டனர், அவரது தங்கைகள்.வாயை மேல் துண்டால் இறுக்கி கதறினர், தம்பிகள்.''அப்பா... அப்பா...''என, வாய் விட்டு அழுதனர், பெற்ற பையனும், பெண்களும்.அழ சக்தியற்றவளாக, நிலை குலைந்து சிலையாக இறுகி உட்கார்ந்திருந்தாள், பர்வதம்.தனக்கு தெரிந்த தமிழில், கோழிக் கிறுக்கலில், பொன்னப்பருக்கு கடிதம் எழுதி முடித்தாள், ஜோதி. சுற்றி யாரும் இருக்கின்றனரா என்று பார்த்தபடியே, வாய் விட்டு படித்தாள்.'மதிப்பிற்குரிய மாமா சமூகத்துக்கு, உங்களுக்கும், அத்தைக்கும் நான் ரொம்ப கடன் பட்டுருக்கேன். என்னை, சொந்த பொண்ணுக்கு மேலா பாசத்த கொட்டி வளர்த்தீங்க... அந்த கடன திருப்பித் தரும் நேரம் வந்திடுச்சு. சின்ன மாமான்னா, எனக்கு உசுரு.'ஒருத்தர் மேல நாம உசுரா இருக்கோம்னா, என்ன அர்த்தம்... அவுங்க நமக்கு கிடைக்கணும்ன்றது இல்ல... நம்ம இஷ்டப்படி அவுக நடந்துக்கணும்றதும் இல்ல... அவுக ஆசை என்னவோ, அதும்படி நடந்து, அதை நிறைவேத்தி வைக்கிறது தான், உண்மையான அன்பு மாமா... நா சின்ன மாமா மேல வச்சது, நெசமான அன்பு.'ஆனா, நான் தான் சின்ன மாமாவோட வாழ்க்கைக்கு பிரச்னை... நா இருக்கிறதுதான் அவரோட சந்தோஷத்துக்கு இடைஞ்சலா இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நா உயிரோட இருக்குற வரைக்கும், நீங்க, சின்ன மாமாவையோ, புவனா அக்காவையோ நிம்மதியா வாழ வுட மாட்டீங்கன்றது தெரிஞ்சு போச்சுது.'அதனால, நான் போறேன், மாமா. நா செத்ததுக்கு அப்புறமாச்சும், அவுங்கள வாழ உடுங்க. என் சாவுக்குப் பொறகாவது, அவுங்கள நிம்மதியா இருக்க உடுங்க. உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன், மாமா...'கையெழுத்து போடாமல், மொட்டையாக விட்டாள்.அத்தையை தேடி, சமையல்கட்டுக்கு போனாள்.''அத்தை, உங்க கையால எனக்கு கொஞ்சம் பால் குடுங்க...''''என்னடீ இது அதிசயமாயிருக்குது... படுக்கறதுக்கு முன்ன பால குடிச்சிட்டு படுடீன்னு வேண்டினாலும் குடிக்க மாட்ட... இன்னிக்கு தேடிக்கிட்டு வந்து கேக்கற...'' என நொடித்தாள், அம்மா செல்லாயி.''அத்தை கையால பால் குடிக்கணும்ன்னு தோணுச்சும்மா...''''இந்தாம்மா... கறந்த பால, இப்ப தான் காச்சி வச்சேன். சூடா இருக்குது, குடி.''''அறைக்கு போயி குடிக்கிறேன் அத்தை,'' என்று டம்ளரை வாங்கியபடி, பூவாயியை பாசம் ததும்ப பார்த்தாள்.''என்னம்மா அப்படி பாக்குற?'' என்று கேட்டாள், பூவாயி.''ஒண்ணுமில்ல அத்தை... வரேன்...'' என்று, தன் அறைக்கு வந்தாள். கதவை தாழிடாமல் வெறுமனே மூடினாள்.கட்டில் அடியில் தயாராக வைத்திருந்த, பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து, பாலோடு கலந்தாள். கட்டிலில் அமர்ந்து, 'சின்ன மாமா... நீங்க நல்லா இருக்கணும்...' என்று நினைத்து, மடமடவென்று குடித்தாள். பின்னர், தலையணையின் கீழிருந்த கடிதத்தை கையில் வைத்து, அமைதியாக கண் மூடினாள். — தொடரும்இந்துமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !