இன்னல்களிலிருந்து விடுபட...
அறிவு, படிப்பு, செல்வம் என, பல இருந்தாலும், ஏதோ ஒன்று பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது. 'என்னவென்று தெரியவில்லை. இனம் புரியாத ஏதோ ஒன்று, பேய் பிடித்தாற்போல, மனதைப் பிடித்து அழுத்துகிறது...' என்று, புலம்ப கேட்டிருப்போம்.இவ்வாறான இனம்புரியாத அழுத்தம் நீங்கிய வரலாறு தான் இது...சேர நாட்டில், ஹேமரதன் என்பவர், சிறப்பான முறையில் ஆண்டு வந்தார். பேரும், புகழுமாய் இருந்த மன்னருக்கு, மாலினி எனும் மகள் இருந்தாள். கல்வி, கேள்வி, கலைகள் என, அனைத்திலும் தலைசிறந்து விளங்கினாள்.ஒருநாள், தோழியருடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள், மாலினி. அப்போது, சூரிய - சந்திரர்களை, கிரகணம் பிடிப்பதை போல, மாலினியை பெரும் பேய் ஒன்று பிடித்துக் கொண்டது; மயங்கி விழுந்தாள்.பதறிய தோழியர், மாலினியை துாக்கிப் போய், அரண்மனையில் சேர்த்தனர். விபரமறிந்து, ஓடி வந்தார், மன்னர். அரண்மனை வைத்தியர் முதலான பலரும், பல விதங்களிலும் மருத்துவம் பார்த்தும் பயன் இல்லை.'மன்னா... மன்னித்துக் கொள்ளுங்கள், இளவரசியை பிடித்த பேய், என்ன செய்தும் விலகவில்லை...' என்று சொல்லி, அவர்கள் விலகினர். வருந்தினார், மன்னர். நாளாக நாளாக இளவரசியின் உடம்பு மெலிந்தது. கெட்டது வரும்போது, நல்லதும் தேடி வரும் என்பதற்கிணங்க, ஒருநாள், மன்னரை தேடி, கோபிலர் எனும் ரிஷி வந்தார். வந்தவருக்கு, சகல உபசாரங்களும் செய்த, மன்னர், தன் மகளின் துயரத்தை சொல்லி, அதை தீர்க்குமாறு வேண்டினார். 'மன்னா... உன் மகளை பிடித்துக் கொண்டிருக்கும் துயர் விலக, வழி சொல்கிறேன்... பாண்டிய நாட்டில், புன்னை வனங்கள் சூழ, திருச்சுழியல் எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. மகளுடன் அங்கு சென்று, பாவங்களை நீக்கும் பாபஹரி நதியில், அவளை நீராடச் செய்.'பூமிநாதர் - புவனேசுவரர் எனும் திருநாமத்தில் அங்கே எழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட செய்து, நீயும் வழிபடு. பூத, பிரேத, பிசாச, ராட்சசம் எனும் தீங்குகள் அனைத்தும் விலகும்...' என்று, ஆசீர்வதித்தார்.துயர் தீரும் வழி தெரிந்ததும், சற்று தெளிவு பெற்றார், மன்னர். முனிவரை வணங்கி, மகளுடன் புறப்பட்டு திருச்சுழியலை அடைந்தார். பாபஹரி நதியில் மகளை நீராட செய்து, புவனேசுவரரை வழிபட செய்தார். முனிவரின் சொல்படி, மன்னரும், அவர் மகளும் வழிபட்டு வர, மாலினியை பிடித்திருந்த பெரும் பேய் விலகியது. அவள் தெளிவு பெற்றாள்; மன்னரும் வருத்தம் நீங்கி, நாடு திரும்பினார்.திருச்சுழியல் எனும் இத்திருத்தலம் தான், ரமண மகரிஷி எனும் உலகப்புகழ் பெற்ற மகானை அளித்தது. இத்தலத்து ஈசனிடமும், தான் யார் என்பதை உணர்ந்து, உணரும் விதத்தை உலகுக்கும் உணர்த்திய ரமண மகரிஷியிடமும்; நம்மை அழுத்தும் இனம் புரியாத இன்னல்களிலிருந்து விடுவிக்க வேண்டுவோம்!பி. என். பரசுராமன்