உள்ளூர் செய்திகள்

விடியலை நோக்கி....

''முருகு... ஏ முருகு வாரீயா, போன வாரம் கொடுத்தாங்கள்ல அதே தான்... சாப்பாடு போட்டு, 500 தருவாக!''''யாரு கதிரா... அட போப்பா, நான் வரல... மனசாட்சி உறுத்துது.''''என்னத்த மனசாட்சி... நீ என்ன போய் இடிக்கவா போற, அவுக சொல்லித் தர்றா மாதிரி கத்த போற... அவுகளே கூட்டிப் போய் சோலி முடிஞ்சதும், இறக்கி விடப் போறாங்க... அதுக்கு, 500 ரூவான்னா உனக்கு கசக்குதாக்கும்... இங்கன வெட்டியா உக்கார்றத, அங்கன வந்து உக்காரு.''''போடா... யாரு, என்ன, எதுக்கு கூப்பாடு போடச் சொல்றாங்கன்னே தெரியாம கூப்பாடு போட, பாமர ஜனங்களா நாம.''''படிச்ச விகடா... அவன் என்ன சொல்றான், தொழில் துவங்க வர்றவன, 'இங்கன உன் தொழிற் சாலையை துவக்காதே'ன்னு கத்த சொல்றான்.''''இதையெல்லாம் பாத்தா, இன்னிக்கு கதைக்கு ஆகுமாடா... ஏதோ சாப்பாடு போட்டு, 500 ரூபா தரானே, அத பாப்பியா.''''முட்டாள்தனமா பேசாத... நீயும், நானும் மட்டுமில்ல, நம்மள மாதிரி ஊர்ல பல பசங்க டிகிரி வாங்கி, அஞ்சு வருஷமாவப் போவுது, இன்னும் வேல கிடைச்ச பாட காணோம்... ''ஏன், ஆறு மாசத்துக்கு முன்ன, இப்படித்தான் செனுக்குனுார்ல வந்துருக்க வேண்டிய பேக்டரிய, போராட்டம் பண்ணி, வெரட்டி அடிச்சானுவ... போன வருஷம் தீச்சனுார்புரத்ல வெரட்டுனானுங்க... அதுக்கு இரண்டு வருஷம் முன்ன வேற ஊர்ல... ''இப்படியே நம் பக்கம் வர்ற தொழிலையெல்லாம், 'துவக்காத துவக்காத'ன்னு வெரட்டி அடிச்சு, வெரட்டி அடிச்சு, தொழில் துவங்க வந்தவனுங்க, 'போங்கடா... நீங்களும், உங்க போராட்டமும்'ன்னு நம் அக்கம்பக்கம் மாநிலம், வடக்காலன்னு போயிர்றானுங்க... அப்புறம் எப்புடி நமக்கு வேலை கிடைக்கும்.''''அது வாஸ்தவந்தான்... இதுல என்ன ஜோக்குன்னா, போன வாட்டி ரூபா கொடுத்தவனுங்க தான் இந்த வாட்டியும் தர்றானுங்க... போராட்டம்னா மட்டும் எங்கிருந்து வர்றாங்கன்னே தெரியல... என்ன செய்யிறது நம் நிலம அப்படி... அவனவனுக்கு ஆயிரம் கஷ்டம்.''''அதுக்காக, எனக்கென்னவோ மனசு ஒப்பல... நாம செய்யுறது தப்புன்னு தோணுது... அவனுங்களுக்கு தொண போக, தொண போக, அன்னாடங்காச்சியா தான் ஆவறோம்... நிரந்தரமா வேல கிடைக்கிற வழிய வெரட்டி விட்டுடிருக்கோம்.''''என்னவோ போ... என்னையும் யோசன பண்ண வெச்சுட்ட... எங்க, இந்த தினா பயல ஆளையே காணோம். பாவம்... நாமளாவது ஒன்டிக்கட்ட... அவன், கல்யாணத்த வேற செஞ்சு தொலச்சு, அப்பனாத்தாளுக்கும் சொகமில்லாம ரொம்ப கஷ்டப்படுறான்.''''அவன் எங்க இங்க இருக்கான். ரெண்டு நாள் முன்னாடியே தோள்ல, 'பேக்' மாட்டிட்டு கிளம்பி போனான். போன வாரம் முச்சூடும், புதுசு புதுசா ரெண்டு மூனு பேர் கூட வண்டியில சுத்திட்டிருந்தான்... சரி, நான் சொன்னத யோசன பண்ணு... முடிஞ்சா, நம் பயலுக நாலு பேர்கிட்ட நாஞ்சொன்னத சொல்லு... தொழில் வந்தா, நமக்கு தான் நல்லது.''இவர்களது நண்பன், தினா, உலக பிரசித்தி பெற்ற, அந்த கிருஷ்ணர் கோவிலில் இருந்தான். மிக அழகாக சிரித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணர். 'தினாவை போன்ற இளைஞர்கள், இது மாதிரியான செயல்களை செய்யும் நிலைக்கு வந்து விட்டனரே...' என்று சிரித்தாரோ என்னவோ... வழக்கம்போல், கோவிலில் கூட்டத்திற்கு குறைவில்லை.வயிற்றுப் பகுதியை தொட்டு பார்த்துக் கொண்டான், தினா. அந்த சின்ன டப்பா ஒளிந்திருந்தது. அதன் வலது பக்கம் உள்ள சின்ன பட்டனை அமுக்க வேண்டியது தான், நேரம் ஓடத் துவங்கி விடும்.கடமையை செய் என்று நீதான் சொன்னாய்... தான் செய்ய இருந்த காரியத்திற்கு பகவான் மேலேயே பழியை போட்டான், தினா. குடும்பத்திற்கான கடமையை செய்ய வேண்டும்... என்ன ஒன்று, கடமையை செய்ய தேர்ந்தெடுத்த வழி தான் தவறு... என்ன செய்வது, பொறுத்து பொறுத்து பார்த்தாயிற்று, வேலையும் கிடைத்தபாடில்லை... நல்ல காலம் பிறக்கும் அறிகுறியே தெரியவில்லை... 'இதை பயன்படுத்தி, இந்த சின்ன செயலை செய்து விடு, பணம் தருகிறோம்...' என, ஆசை வார்த்தை கூறி வளைத்து விட்டனர். வேறு வழியில்லாமல், இவர்கள் வலையில் விழுந்தாயிற்று.கிருஷ்ணர் கழுத்தில் ஒரு மணி. அந்த சிறிய மணி, அவனை பார்த்து வா வாவென அழைப்பது போல் இருந்தது, தினாவுக்கு. அந்த மணியை எடுத்து கொடுத்தால், 7 லட்சம் தருவதாக வாக்களித்திருந்தனர்.யார் அவர்கள்... தெரியாது! எதற்காக அந்த மணி... தெரியாது! அந்த மணியின் மதிப்பு... எதுவும் தெரியாது! அந்த மணியை கொண்டு வரவேண்டும்... அவ்வளவு தான். சுளையாக, 7 லட்சம். அம்மாவுக்கு முதலில் ஆபரேஷன் செய்ய வேண்டும். மனைவி கர்ப்பப் பையில் உள்ள கோளாறால், துடிதுடிக்கும் வலியிலிருந்து அவளுக்கு விடுதலையளிக்க வேண்டும். நாலு ஆண்டுக்கு முன், அப்பா வாங்கிய, 10 ஆயிரம் ரூபாய் கடன், குட்டி போட்டு, குட்டி போட்டு, 80 ஆயிரம் ஆகியிருந்தது. கடன் கொடுத்தவர்கள் அர்ச்சிக்கும் வசவுகளிலிருந்து அப்பாவை விடுவிக்க வேண்டும். வேலை கிடைத்திருந்தால், இவையெல்லாம் எப்பவோ முடிந்திருக்கும்.எல்லாவற்றிற்கும் தேவை பணம். அந்த பணத்தை இவர்கள் தருகின்றனர். யாரையும் துன்புறுத்த போவதில்லை... எந்த சேதமும் கிடையாது... ராப்பகலாக, எலெக்ட்ரானிக்ஸ் மூளையை பயன்படுத்தி, திட்டம் போட்டிருந்தான். வேலை வேலை என கனவு கண்ட எலெக்ட்ரானிக்ஸ் படிப்பு, கடைசியில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு துணை போவதை எண்ணி ஒரு பக்கம் அழுகையாய் வந்தது. 'கிருஷ்ணா என்னை மன்னித்து விடு... கடைசி நொடியில் என் மனம் மாறி விடாமல் நீதான் அருள்புரிய வேண்டும். ஏனெனில், எனக்கு பணம் அவசியம்.'கிருஷ்ணர், 100 அடி துாரத்திலிருந்து இவனை அழைப்பது போல் இருந்தது. 'வா, பக்தா வா... நீ நினைத்த நல்ல காரியத்தை செய்...'அது என்ன நல்ல காரியம்... கிருஷ்ணரின் சன்னிதானம் வரை செல்ல வேண்டியது, டப்பாவை எடுத்து பட்டனை அழுத்த, மணி, 'டிக் டிக் டிக்' என ஓடத் துவங்கும். அதைக்கண்டு, 'அய்யோ பாம் பாம்' என, அலற வேண்டும். திட்டம் அற்புதம். எந்த சுணக்கமும் இல்லை. ஒரு குறை, அந்த டப்பாவை எடுக்கையில் கண்காணிப்பு கேமராவில் அகப்பட்டு விடக்கூடாது. அவ்வளவு தான். விடிய விடிய யோசனை செய்து, இந்த திட்டத்தை தயார் செய்திருந்தான். மக்கள் தெறித்து ஓடுவது நிச்சயம். கிருஷ்ணா, உன் பாதம் அடைய வேண்டும் என, வேண்டுவோம். ஆனால், கோவிலாகவே இருந்தாலும், உயிர் ஆசை யாரை விட்டது.எல்லாம் மிகச் சரியாய் நடந்தது, ஒன்றை தவிர. இவன் வைத்துவிட்டு அலறியதும், கிருஷ்ணரின் அலங்கார மேடை பின்னாலிருந்து இரண்டு கிருஷ்ண பக்தர்கள் குபீரென எழுந்து, ஆரவாரத்தின் நடுவே மக்களை காப்பாற்ற முனைந்தனர். அதில், இவனையும் சேர்த்து கதவை நோக்கி தள்ளினர். காரியம் நடக்கவில்லை. கிருஷ்ணரை கோபமாக பார்த்தான். 'என் கஷ்டம் தீர்வது உனக்கு பிடிக்கவில்லை...'அப்போது, கிருஷ்ணர் இவனை பார்த்து சிரிப்பது போல் உணர்ந்தான்.'இதோ இவர் தான் அலறியது...' வெளியில் வந்ததும், ஆளாளுக்கு இவனை கை காட்டினர். 'ஆண்டவா... தொலைந்தோம்...'அடுத்த அரை மணி நேரத்தில், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தேடு தேடு என தேடி, குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 'அய்யோ, வெடித்திருந்தால், கோவில் முழுதும் துண்டு மண் கூட மிச்சமிருக்காது...''என்ன சொல்கின்றனர் இவர்கள்... வெடிகுண்டா... அது, சாதாரண எலெக்ட்ரானிக் டைம்பீஸ் அல்லவா... 50 ரூபாய் பெறாதே...'மறுநாள் செய்தித் தாளில் கொட்டை எழுத்தில் வந்தது.'தீவிரவாதிகள் சதி அம்பலம்'உலகம் முழுதும் வியாபித்திருக்கும் தனியார் அமைப்பின் கிருஷ்ணர் கோவிலுக்குள் வெடிகுண்டுகோவிலை குண்டு வைத்து பாழ்படுத்த நினைத்த சதி அம்பலம்!குண்டு வெடித்திருந்தால், கோவிலும் அங்கிருந்தோரும் சுக்குநுாறாய் போயிருப்பர்.நல்ல வேளை, தினா என்பவரால் இந்த சதி முறியடிக்கப்பட்டது. கோவிலும், எண்ணற்ற உயிர்களும் காப்பாற்றப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் பார்த்து கத்தியது வெறும் கடிகாரம் போன்றதுதான். பரிசோதனைக்காக, தீவிரவாதிகள் அதை வைத்திருக்கலாம். எனினும், அதை அவர் கண்டதாலேயே உண்மையான குண்டை கைப்பற்ற முடிந்தது; இல்லையேல் சர்வ நாசம் நிச்சயம்.அவரை பாராட்டும் விதமாக, கோவில் நிர்வாகம், அவருக்கு, 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்க இருக்கிறது.மறுநாள், தினா பணம் பெறுகையில், கிருஷ்ணரை பார்த்தான்.'பக்தர்களை காக்க தெரிந்த என்னால், இந்த சிறு மணியையா காக்க தெரியாது. எனக்கு மணியின் மீது ஆசை இல்லை. இதை அணிவித்த பக்தனின் அன்பின் மேல் அக்கறை உள்ளது. உன் மேல் உள்ள அக்கறை போல, மணியை திருடும் பாவத்திலிருந்து உன்னை காப்பாற்றினேன். உன்னை திருட துாண்டிய காரணத்தையும் களைந்தேன்...' என்று அவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது. தெய்வம் நின்று கொல்லும் என்பர். இல்லை இல்லை, என்னை, நின்று காத்தார்.புளிய மரத்தடியில், முருகு, கதிர், தினா மூவரும் அமர்ந்திருந்தனர். ''இந்தாங்கடா, எனக்கு கிருஷ்ணர் கோவில்ல கொடுத்தது. நீங்க ஆளுக்கு ரெண்டு லட்சம் வச்சுக்குங்க.''அதிர்ச்சியில் இருவரும் எழுந்தனர்.''எதுக்காகடா பணம் கொடுக்கறன்னு கேட்காதீங்க... சில கேள்விகளுக்கு பதில் இருக்காது. நாமெல்லாம் ஒரே ஜாதி... படிச்சு, வேலை கிடைக்காம, கஷ்டப்படுற ஜாதி... ''இதை பயன் படுத்திக்கிட்டு சில தீய சக்திகள், நம்மை மாதிரியான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, நம்ம கஷ்டத்தை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி, தேவையில்லாத தீய செயல்கள்ல, நாச வேலைகள்ல ஈடுபடுத்த முயல்றாங்க.''''ஏன்டா, நீ நல்லது தானே பண்ணின.''''டேய்... ப்ளீஸ், அதெல்லாம் கிண்டாதீங்க... என் நிலமை நாளைக்கு உங்களுக்கு வரக்கூடாது. அதனால தான், இந்த பணத்தை உங்களுக்கு தரேன். ஒன்னு மட்டும் சொல்றேன், பெரிய கண்டத்துலருந்து என்னை கடவுள் காப்பாத்தினாரு. ஆனா, எப்ப பார்த்தாலும் கடவுள் தான் நம்மை காப்பாத்தணும்ன்னு நாம எதிர்பார்த்தா, அந்த கடவுளுக்கே நம் மேல எரிச்சல் வரும். நமக்கு என்ன தேவைன்னு நாம தான் முடிவு பண்ணனும். சில பேர், நம் உணர்ச்சியை துாண்டி, அதுல குளிர் காயறாங்க.''''இப்ப என்ன பண்ணனும்ன்னு பொசுக்குன்னு ஆளுக்கு ரெண்ட துாக்கி கொடுத்த.''''பரவாயில்லை, இதுக்கு பிரதிபலனா உங்ககிட்டருந்து நான் எதிர்பார்க்குறது இரண்டே இரண்டு தான். ஒன்னு, இனிமே நம் ஊர் மக்கள், தேவையில்லாத போராட்டத்துலருந்து தள்ளி நிக்க, உங்களால முடிஞ்சத நீங்க செய்யணும். ''எல்லாருக்கும் இது மாதிரி என்னால பணம் தர முடியாது. நாமே உழைச்சு, வேலை செஞ்சு, சம்பாதிக்க பாக்கணும்... அதுக்கு நாலு பேர் நம் ஊர்ல தொழில் துவங்கினாத்தான் நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்... அவங்களும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றப்படுவாங்க...''ரெண்டாவது, நாம் இனிமே சும்மா இருக்கக் கூடாது... நானும் என் பங்குக்கு முதல் போடறேன்... மூன்று பேரும் சேர்ந்து, ஏதாவது தொழில் துவங்கி, முடிஞ்சா நாலு பேருக்கு வேலை கொடுப்போம்,'' என்றான், தினா.புதிய விடியலை நோக்கி அந்த மூவரும், இல்லை... இல்லை... அவர்கள் வழியே ஊரே சென்றது. எஸ். சுரேஷ்வயது: 51, சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., அலுவலகத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். கதை, கவிதை எழுதுவது இவரது விருப்பம். இதுவரை இரண்டு மாத நாவல்கள் வெளிவந்துள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மோதிர கையால் குட்டுப்பட்டது போன்று பெரு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !