உயர்ந்து நிற்கும் இரும்பு மனிதர்!
அக்., 31 - படேல் பிறந்தநாள்நர்மதை ஆற்றின் கரையோரம், 597 அடி உயரத்தில் அமைந்துள்ளது, இந்தியாவின் மாபெரும் மனிதரின் சிலை. துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தவர்; சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர்; இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர். யார் இவர்?அவர் தான், இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேல்!குஜராத் மாநிலத்தில், அக்., 31, 1875ல், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார், சர்தார் வல்லபாய் படேல். அவரின் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கிறது, மத்திய அரசு.இவரது தந்தை பெயர், ஜாவேரிபாய் படேல்; தாய், லாட்பா. இவருடன் பிறந்தவர்கள், மூன்று அண்ணன்களும், ஒரு தங்கை மற்றும் தம்பி.சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். பள்ளியில் படிக்கும்போது, தன்னிடமே மாணவர்கள் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என்று சொன்னார், ஆசிரியர். இது, வல்லபாய் படேலுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.மாணவர்கள் யாரும் அவரிடம் புத்தகங்கள் வாங்கக் கூடாது என, அப்போதே போர்க்கொடி துாக்கினார். வேறு வழியின்றி, புத்தகங்களை விற்பதை நிறுத்திக் கொண்டார், அந்த ஆசிரியர். வல்லபாய் படேலுக்குசிறு வயதிலேயே போராடும் குணம் இருந்தது.மெட்ரிகுலேஷன் கல்வியில் தேர்ச்சி அடைந்தபோது, வல்லபாய் படேலின் வயது: 22. அதனால், 'பொறுப்பற்ற இளைஞர். இப்படி படித்தால், சாதாரண வேலை தான் கிடைக்கும்...' என, கேலி செய்தனர், அவரது சகோதரர்கள்.ஆனால், வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து, கடுமையாக உழைத்து, பணம் சேர்த்தார், வல்லபாய் படேல். மேலும், மற்ற வழக்கறிஞர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து, மூன்றே ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.தன், 25வயது வயதில், 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து, வழக்கறிஞராக தொழில் துவங்கினார். தன், 18வது வயதில், ஜவேர்பா என்ற, 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.பின்னர், சிறிது சிறிதாக பணம் சேர்த்து, சட்டம் பயில, லண்டன் புறப்பட்டார். அங்கு பட்டப் படிப்பில் முதல் மாணவனாக தேறி, பாரீஸ்டர் பட்டமும் பெற்றார்.பிறகு, நாடு திரும்பியவர், அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் துவங்கினார். சில ஆண்டுகளிலேயே அவருக்கு, பணமும், புகழும் கிடைக்கத் துவங்கியது. அந்த சமயம், தென்னாப்பிரிக்காவில், சத்தியாகிரகத்தை முடித்து, இந்தியா திரும்பினார், காந்திஜி.குஜராத் அரசியலில், காந்திஜி பங்கெடுத்து, செயலாற்றிய விதம், வல்லபாய் படேலை பெரிதும் ஈர்த்தது. காந்திஜி தலைமையில், கோத்ராவில் நடைபெற்ற மாநாட்டு படைகளை கவனிக்க, ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதில், வல்லபாய் படேல் செயலராக பொறுப்பேற்றார்.அன்று, விடுதலைப் போரில் இறங்கியவர், நாடு விடுதலை அடையும் வரை ஓயவில்லை.ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு போராடினர், விவசாயிகள். அரசு பணியாததால், வல்லபாய் படேல் தலைமையில், வரிகொடாமைப் போராட்டம் நடத்தினார், காந்திஜி. இதனால், ஆங்கிலேய அரசு பணிந்தது; வரி ரத்தானது. இதுவே, வல்லபாய் படேலின் முதல் வெற்றியாகும்.கடந்த, 1920ம் ஆண்டு, நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார், காந்திஜி. குஜராத் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி, மக்களிடம் எடுத்துரைத்தார்.கிளர்ச்சியின் காரணமாக, ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறை தலைதுாக்கியது. இதன் விளைவாக, காந்திஜி கைது செய்யப்பட்டார்.காந்திஜி சிறைக்கு சென்றதால், இயக்கத்தை தலைமை தாங்கும் பொறுப்பு, வல்லபாய் படேலுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், குஜராத்தை தாண்டி, வெளியிலும் வல்லபாய் படேலின் புகழ் பரவத் துவங்கியது.படேலின் படைத் திறமையும், நாடாளும் திறனும், நாடு முழுவதும் அவரை பிரபலமான தலைவராக்கியது. இதற்கு பிறகே இவர், 'சர்தார்' என்று அழைக்கப்பட்டார். சர்தார் என்றால், தலைவர் அல்லது தளபதி என்று பொருள்.மார்ச் 12, 1930ல், சத்யாகிரக யாத்திரைக்கு அழைப்பு விடுத்தார், காந்திஜி. இதற்கான கூட்டத்தில், தடையை மீறி கலந்து கொள்ள சென்றபோது கைது செய்யப்பட்டார், வல்லபாய் படேல். மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டார். வல்லபாய் படேல், காந்திஜியின் தளபதியாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன.ஒரு முடிவு எடுத்த பிறகு, அதை பற்றி திரும்ப திரும்ப பேச மாட்டார், படேல். இவரின் குணத்தை நன்கு அறிந்த காந்திஜி, அவரிடம் நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.அமைச்சரவையில் பரப்புரை, சமஸ்தானம், உள்துறை என, மூன்று பொறுப்புகளை ஏற்றிருந்தார், வல்லபாய் படேல். சுதந்திரம் அடைந்தபின், சர்தார் வல்லபாய் படேல், துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நாடு முழுவதும் பல இடங்களில், மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சரான, சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார், பிரதமர் ஜவஹர்லால் நேரு.வல்லபாய் படேலின் இடைவிடாத முயற்சிக்கும், ராஜதந்திரத்திற்கும், இரண்டே ஆண்டுகளில் பலன் கிடைத்தது. பல சமஸ்தானங்கள், மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, இந்தியாவுடன் இணைந்தன.ஒரு சில மன்னர்கள் முரண்டு பிடித்தனர். ஆனாலும், வல்லபாய் படேலின் இரும்பு கரங்களுக்கு முன், அவர்கள் அடங்கிப் போயினர்.உற்துறை அமைச்சர் என்ற பெயரில், வல்லபாய் படேல் செய்த இரண்டு காரியங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.ஒன்று: ஐ.சி.எஸ்.,க்கு பதிலாக, ஐ.ஏ.எஸ்.,ஐ உருவாக்கியது. தன்னாட்சி தன்மை கொண்ட ஆணையத்தின் வழியே போட்டித் தேர்வுகளை நடத்தி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்க வழி வகை செய்தார், படேல்.அதேபோல், ஐ.பி.எஸ்., அமைப்பையும் உருவாக்கினார். உள்நாட்டு நிர்வாகத்திற்கும், பாதுகாப்பிற்கும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அமைப்புகளின் பங்களிப்பு இன்றளவும் தொடர்கிறது.அரை நுாற்றாண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த வல்லபாய் படேல், டிச., 15, 1950ம் ஆண்டு, தன் 75வது வயதில், மாரடைப்பால் இறந்தார்.வானளவு உயர்ந்த ஆல மரமும் ஒருநாள் வீழ்ந்துவிட வேண்டும் என்பது, காலத்தின் நியதி. ஆனாலும், அவரது அயராத உழைப்பும், இந்தியாவை இணைக்க மேற்கொண்ட இடைவிடாத முயற்சியும், இரும்பு மனிதர் என்பதால், இன்றும், துாண் போல் நிலைத்து நிற்கிறது. - ஏ.எஸ். கோவிந்தராஜன்