உள்ளூர் செய்திகள்

கடவுள் கொடுக்கும் காணிக்கை!

இந்தோனேசியா வின் கிழக்கு ஜாவா பகுதியில் டெங்கரீஸ் என்ற சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், இங்குள்ள பிரோமோ எரிமலையை, கடவுளுக்கு சமமாக நினைத்து வணங்குகின்றனர். இந்த எரிமலை, 7,641 அடி உயரம் உடையது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும், மூன்று முறை, வெடித்துச் சிதறி இருக்கிறது. கடைசியாக, கடந்தாண்டு ஜனவரியில் வெடித்துச் சிதறியது.டெங்கரீஸ் மக்கள், ஒரு வினோதமான திருவிழாவை கொண்டாடு கின்றனர். கடவுள், தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும் பொருட்களை, பக்தர்களுக்கே திருப்பி அளிக்கிறார், என்பது இவர்களின் நம்பிக்கை. இதையொட்டி, கடவுளால் பக்தர்களுக்கு திருப்பி வழங்கப்படும் பொருட்களை பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட நாளில், எரிமலையின் மீது, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கைகளில் வலைகளுடன் திரண்டு விடுகின்றனர். இந்த பண்டிகைக்கு, 'யந்த்யா கசாடா' என பெயர்.மொத்தம் 14 நாட்கள் நடக்கும் இந்த பண்டிகையின் கடைசி நாளில் தான், கடவுளிடம் இருந்து காணிக்கை பெறும் நிகழ்ச்சி நடக்கும். அன்று அதிகாலை முதலே, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள், எரிமலையைச் சுற்றி திரண்டு விடுவர். மாலை நேரத்தில், மலை உச்சியில் இருக்கும், அந்த சமூகத்தை சேர்ந்த துறவிகள், கடவுளுக்கு படைக்கப்பட்ட அரிசி, கோழி, காய்கறி, பழம், பணம் ஆகியவற்றை, கீழே திரண்டிருக்கும் பக்தர்களை நோக்கி வீசி எறிவர்.இவ்வாறு தூக்கி எறியப்படும் பொருட்களை, தாங்கள் கொண்டு வரும் வலையால், லாவகமாக பிடிக்கின்றனர், கீழே உள்ள மக்கள். ஏதாவது ஒரு பொருள், வலையில் விழுந்து விட்டால், அந்தாண்டு முழுவதும், தங்களின் வாழ்வு செழிப்பாக இருக்கும் என, அந்த மக்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து டெங்கரீஸ் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'இந்த பண்டிகை யின் பின்னணி யில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. பழங்காலத்தில் இந்த பகுதியில் ஆட்சி நடத்திய இளவரசர் ஜோகோ செகாருக் கும், இளவரசி ரோரொ ஆண்டெங்கிற்கும், குழந்தைகள் இல்லை. இந்த எரிமலையை வழிபட்டனர். இதன்பின், கடவுள், அவர்கள் முன் தோன்றி, 'உங்களுக்கு, 25 குழந்தைகள் பிறக்கும். ஆனால், 25வது குழந்தையை எனக்கு காணிக்கையாக செலுத்தி விட வேண்டும்' என, வரம் அளித்தார். இதன்படி, அவர்களுக்கு, 25 குழந்தைகள் பிறந்தன. கடவுளுக்கு அளித்த வாக்குறுதிப்படி, 25வது குழந்தையை, கடவுளுக்கு பலியிட்டனர். இதற்கு பின்னும், தொடர்ச்சியாக, கடவுளுக்கு மனித உயிர்கள் பலியிடப்பட்டன. இப்போது இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டு, மனித உயிர்களுக்கு பதிலாக, பொருட்களை காணிக்கையாக செலு<த்தும் நடைமுறை துவங்கியது...' என்றார். ***எஸ்.ஆர்.முகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !