மனித பலூனாக மாறியவர்!
பலூனுக்குள் காற்றடைத்தால் பலூன் பெரிதாகும்; அதே போல், மனித உடலுக்குள் காற்றை அடைத்தால், என்ன ஆகும்? இப்படி ஒரு அபூர்வ சம்பவம், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்தது.வெலிங்டன் நகரில், லாரி டிரைவராக பணியாற்றுபவர் ஸ்டீவன் மெக்கார்மேக். லாரியின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது, திடீரென தவறி கீழே விழுந்தார். லாரி பிரேக்கிற்கு செல்லும் காற்று கம்ப்ரசர் குழாய் மீது விழுந்தார். அந்த குழாய் உடைந்து அவரது பின் பகுதியில் ஒரு முனை சொருகியது. அதில் அடைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த காற்று, அப்படியே அவர் உடலுக்குள் சென்றது.'கால்பந்து போல் என் உடல் வேகமாக வீங்கி வந்தது. என் அலறல் கேட்டு உதவியாளர்கள் ஓடி வந்தனர். உடனே, அவர்கள் காற்று வால்வை திறந்து விட்டதால், என் உடலில் காற்று அதிகமாக செல்லவில்லை. இல்லாவிடில் உடல் வெடித்து சிதறியிருப்பேன்...' என்கிறார் ஸ்டீவன்.இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடலில் புகுந்த காற்று, நல்லவேளையாக ரத்த நாளங்களில் புகவில்லை. அவ்வாறு புகுந்திருந்தால், உடனடியாக மரணமடைந்து இருப்பார்.— ஜோல்னா பையன்.