உள்ளூர் செய்திகள்

உச்சிப் பிள்ளையார் பெயர் ரகசியம்!

திருச்சியில், உச்சிப்பிள்ளையாரை தரிசிக்காதவர்கள், தமிழகத்தில் மிகக்குறைவு என்றே சொல்லலாம். இவர், மலை உச்சியில் இருப்பதால், உச்சிப்பிள்ளையார் என, அழைப்பதாக கூறலாம். ஆனால், இவருக்கு இந்தப் பெயர் வர காரணமே வேறு.திருச்சியை, கிருதவீரியன் என்ற ராஜா, ஆண்டு வந்தார். இவரது மனைவி சுகந்தை. இவர்களுக்கு குழந்தை இல்லை. சுகந்தையை மலடி என, திட்டித் தீர்த்தனர், ராஜாவின் உறவினர்கள்.சுகந்தை மீது உயிரையே வைத்திருந்த ராஜா, அவளுடன் காட்டுக்கு போய் விட்டார். அங்கே அவர்கள் உண்ணாவிரதம் இருந்து, உயிரை விட முடிவெடுத்தனர். இதையறிந்த நாரதர், இறந்தவர்கள் வாழும் பித்ரு லோகத்திற்கு சென்று, கிருதவீரியனின் தந்தையிடம் விபரம் சொன்னார். அந்த முதியவர், பிரம்மாவிடம் சென்று, 'நான் வாழ்ந்த காலத்தில், ஏராளமான தான, தர்மம் செய்துள்ளேன். என் மகனும் அப்படித்தான். அப்படியிருந்தும், அவனுக்கு ஏன் குழந்தை வரம் தரவில்லை?' என்றார்.'முதியவரே, உம் மகன், அவனது முற்பிறப்பில் கொள்ளைக்காரனாக இருந்தான். தன் குடும்பத்தின் பசி போக்க, 12 அந்தணர்களிடம் கொள்ளையடிக்க முயன்றான். அவர்கள் தர மறுக்கவே, அவர்களைக் கொன்று, பொருட்களை எடுத்துச் சென்றான்.'அந்தக் கொடிய பாவம் காரணமாக, பிள்ளை இல்லை; உண்ணாவிரதம் இருந்து உயிர் விட நேர்ந்துள்ளது...' என்றார்.'சரி... இதற்கென்ன பரிகாரம்?' என, கேட்டார்.'யார் ஒருவர், விநாயகரை மனதில் எண்ணி, பவுர்ணமியை அடுத்த நான்காம் நாளில் வரும் சதுர்த்தி திதியான, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்கின்றனரோ, அவர்கள் முன்வினை பாவம் நீங்கப் பெறுவர். அவர்களுக்கு எந்த விஷயத்தில் தடை உள்ளதோ, அது நீங்கும்...' என்றார்.'அப்படியானால், தாங்களே காட்டில் இருக்கும் என் மகனுக்கு காட்சியளித்து, இந்த பரிகாரத்தைச் சொல்வீர்களா?' எனக் கெஞ்சினார், கிருதவீரியனின் தந்தை.இதற்கு சம்மதித்தார், பிரம்மா. அதன்படியே கிருதவீரியன் தம்பதிக்கு காட்சியளித்து, பரிகாரம் சொன்னார். அவர்களும் நாட்டுக்கு திரும்பினர். ஒரு மாசி மாதம் செவ்வாய்க் கிழமையுடன் கூடிய சங்கடஹர சதுர்த்தியன்று, விரதம் துவங்கினர். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர்கள் மகிழ்ச்சியின் உச்சியை அடைந்தனர்.'எங்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்ற விநாயகரே... இனி, உம்மை நாங்கள் உச்சிப்பிள்ளையார் என்றே அழைப்போம்...' என சொல்லி, ஆனந்தப்பட்டனர்.இதனால் தான், நாம் அவரை உச்சிப்பிள்ளையார் என்கிறோம். குழந்தை இல்லாதவர்கள், செவ்வாய்க் கிழமையன்று வரும், சங்கடஹர சதுர்த்தியன்று, உச்சிப்பிள்ளையாரை வழிபட்டால், மழலை பாக்கியம் கிடைக்கும். உச்சிப்பிள்ளையாரின் கதை வித்தியாசமானது தானே! - தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !