அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 29 வயது பெண். கணவர் வயது: 31. நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். தம்பியுடன் பெங்களூரில் வசிக்கின்றனர், என் பெற்றோர். மும்பையில் உள்ளனர், கணவரது பெற்றோர். மும்பையில் நிறுவனம் ஒன்றில், 'கன்சல்டன்ட்'டாக இருக்கிறார், கணவரது அப்பா. எப்போதாவது தான் சென்னை வருவார்.ஒரு ஆண்டுக்கு முன், எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக் கொள்ள வேலையை ராஜினாமா செய்தேன். குழந்தை பராமரிப்பில் அதிக நேரம் செலவழித்ததால், கணவரது நடவடிக்கையை கவனிக்க தவறிவிட்டேன். இரவில் குழந்தை அழும் என்பதால், நான், குழந்தையுடன் தனி அறையில் படுத்துக் கொள்வேன். தன் அறையில், 'டிவி' மற்றும் 'லேப்-டாப்' வைத்து, 'டிவி' பார்ப்பதும், ஆபிஸ் வேலை செய்வதுமாக இருப்பார், கணவர். அவருக்கு காலையில் டிபன், மதியம் லஞ்ச் செய்து கையில் கொடுத்தனுப்பி விடுவேன். இரவு அவருக்கு பிடித்த டிபன் செய்து வைத்து விடுவேன். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற ஒன்றை தவிர, வேறு எந்த குறையும் வைத்ததில்லை. ஆபிசில், 'ஓவர் டைம்' செய்வதாக கூறி, இரவு காலதாமதமாக வர ஆரம்பித்தார். விடுமுறை நாட்களிலும், நண்பர்களை சந்தித்து வருவதாக கூறி, சென்று விடுவார். நானும், வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு என, பரப்பரப்பாக இருப்பேன். சிறிது நாளில், 'நீ தனியாக இருந்து கஷ்டப்படுகிறாய். பெங்களூருவில் உன் அம்மாவுடன் சில நாட்கள் தங்கியிருந்து வா...' எனக் கூறி அனுப்பி வைத்தார். அப்போதும், அவர் என் மீது கொண்ட அன்பால் தான் அப்படி செய்வதாக, வெகுளியாய் நினைத்து கொண்டேன்.சமீபத்தில், என்னுடன் பணிபுரிந்த தோழி ஒருவள், என்னை சந்திக்க வந்திருந்தாள். 'உன் கணவர், வேறொரு பெண்ணுடன் பழகி வருகிறார். பலமுறை அவர்கள் ஒரே, 'பைக்'கில் போவதை பார்த்துள்ளேன்... 'ஓவர் டைம்' என்று கூறி, அவளுடன் தான் ஹோட்டல், சினிமா என, சென்று வருகிறார்...' என்ற அதிர்ச்சி தகவலை கூறினாள். இதைக்கேட்டு முதலில் நம்பவில்லை, நான். பிறகு, அவள், மொபைல் போனில் கணவர், அப்பெண்ணுடன், 'பைக்'கில் செல்லும் புகைப்படத்தை காட்டியதும், அதிர்ந்து போனேன். காதலித்து மணந்த கணவர், இவ்வளவு நாள் என்னை ஏமாற்றி வந்ததை ஏற்க முடியவில்லை.'உதவிக்கு யாரும் துணைக்கு இல்லாமல், குழந்தையை கவனித்துக் கொண்டதற்கு இதுதான் பலனா?' என, வருத்தமாக இருந்தது. அவர் வந்ததும், விசாரித்தேன். 'நீ குழந்தையை கவனிப்பதில் ஈடுபட்டிருந்ததால், தனிமை என்னை வாட்டியது. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல், எவ்வளவு நேரம் தான், 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பது. என்னையும் மீறி தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு...' என, காலில் விழுந்து அழுகிறார். 'இதே போல் எனக்கு ஒரு நிலைமை வந்து, நான் வேறொரு நபருடன் பழகினால், அதை ஏற்று கொள்வீர்களா? உங்களை உண்மையாக காதலித்தேன். இன்னமும் காதலித்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் மறந்து நீங்கள், எனக்கு துரோகம் செய்துவிட்டீர்கள்.'அந்த பெண்ணின் நிலைமை என்னாகும். நீங்கள் அவளிடமிருந்து விலகி வர, அவள் விடுவாளா? எனக்கும் துரோகம் செய்து, அவளையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளீர்கள். குழந்தையை எண்ணியாவது, யோசித்திருக்க வேண்டாமா?' என கேட்டால், பதில் சொல்லாமல் அழுகிறார்.இதில், நான் என்ன முடிவு எடுப்பது? அந்த பெண், இவரை லேசில் விடமாட்டாள் என்றும் எச்சரித்துள்ளாள், தோழி. எனக்கு ஒரு வழி காட்டுங்கள், அம்மா.— இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —காதலித்து ருசி கண்டோர், மீண்டும் மீண்டும் காதலில் ஈடுபடுவர். முதல் காதல் திருமணத்தில் முடிந்தால், அக்காதல் சமூக அங்கீகாரம் பெறும். திருமணத்துக்கு பிந்திய காதல்கள், கள்ளக்காதல் என, வகைபடுத்தப்படும்; காறி உமிழப்படும். நீ, செய்த தவறுகளை வரிசையாக பட்டியலிடுகிறேன்...* குழந்தையை கவனித்துக் கொள்கிறேன் என்ற சாக்கில் வேலையை விட்டது* குழந்தை பராமரிப்பில், 50 சதவீத பொறுப்பை, கணவருடன் பகிர மறந்தது* இரவில் குழந்தை அழும் என்பதற்காக, கணவரை விட்டுவிட்டு தனியறையில் படுத்தது. தனிமை பிசாசின் கூட்டணி. உன் கணவர் கண்ட கண்ட, 'போர்னோ வீடியோ'களை பார்க்க நீயே மறைமுக காரணமாய் இருந்திருக்கிறாய்* கணவரின் அலுவலக நேரங்களை கண்காணிக்க மறந்தது* கணவரின் கள்ளக்காதலியின் எதிர்காலம் பற்றி கவலைப்படும், உன் வெள்ளந்தி தனம். கணவரின் கள்ளக்காதலி திருமணமானவளா, ஆகாதவளா? அவள் உன் கணவருடன் பணி புரிபவளா?இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...* இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து, கணவரின் திருவிளையாடலை அம்பலப்படுத்து. மனசாட்சி உள்ள மாமனார் - மாமியார் என்றால், மகனின் வாலை ஒட்ட நறுக்கி விடுவர்* சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை, கணவருக்கு நிரூபி. கள்ளக்காதலை கத்தரித்து விட்டு வராவிட்டால், விஷம் வைத்தோ, 'கரன்ட் ஷாக்' வைத்தோ கொன்று விடுவேன் என, மிரட்டு* குழந்தையை உன் பெற்றோரிடம் வளர்க்க கொடுத்து விட்டு, கணவரை உன் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வா. மீண்டும் வேலைக்கு போ* கணவரின் க.காதலியுடன் போனிலோ, நேரிலோ ஒரு வார்த்தை பேசாதே. உன் நெற்றிக்கண் கோபம், அவளை சுட்டு எரிக்கட்டும். குரைக்கிற நாய் கடிக்காது துார ஓடிவிடும்* கணவரை குறைந்தபட்சம் ஓராண்டு, 'வொர்க் அட் ஹோம்' செய்யச் சொல். கணவரின் மொபைல் எண்ணை மாற்று, மின்னஞ்சல் முகவரியை மாற்று* தவறு செய்துவிட்டு கணவர், உன் காலில் விழுந்து அழுகிறார் என்றால், நடிக்கிறார் என பொருள். கணவரை துளியும் நம்பாதே* குடும்ப விஷயத்தில் முழு சுயநலமாய் இரு. பரிதாபப்பட்டால் உன் இடம் பறிபோய் விடும்* கணவர் தவறு செய்யக்கூடிய அனைத்து சேனல்களையும் துண்டித்துவிடு. மாட்டின் மூக்கணாம்கயிற்றை பிடித்து பட்டியில் கட்டு. நீ ஏமாளி அல்ல என்பதை, உன் உடல்மொழி மற்றும் கண்ணசைவு மூலம் கணவருக்கு உணர்த்து * முடிந்தால் அடுத்தக் குழந்தையை பெற்றுக் கொள். அவரது அலுவலகத்துக்கு, 'சர்ப்ரைஸ் விசிட்' அடி.உன் படுக்கையறையில் கணவரை விடியவிடிய முட்டிக்கால் போடவை. காதுமடலை திருகி, தலையில் ஒரு குட்டு வை.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.