உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு - நான், 35 வயது பெண். திருமணமாகி, 8 வயதில் ஒரு ஆண், 5 வயதில் ஒரு பெண் என, இரு குழந்தைகள் உள்ளனர். கணவர், எம்.எஸ்.சி., பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அத்துடன், 'டியூஷன் சென்டர்' ஒன்றும் நடத்தி வருகிறார். நான், திருமணமாவதற்கு முன், பி.எஸ்.சி., பட்டப்படிப்பு படித்திருந்தேன். என் கணவரின் ஆலோசனைப்படி, பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் தகுதி தேர்வும் எழுதி தேர்வானேன். திருமணமானதிலிருந்தே எனக்கும், என் மாமியாருக்கும் ஒத்துவரவில்லை. நான் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து, சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார். தன் அம்மா மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார், என் கணவர். எனவே, அவர் அம்மா செய்வது தவறு என்று தெரிந்தாலும், எதுவும் பேச மாட்டார். என்னை தான், 'அடங்கி போ...' என்று அதட்டுவார். கணவருக்கு இரு அக்காக்கள்; இருவருக்கும் திருமணமாகி, இதே பகுதியில் வெவ்வேறு பகுதியில் வசிக்கின்றனர். மாமனார், நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்மாவை கவனித்துக் கொள்ளும் கடமை இருப்பதால், தனிக்குடித்தனம் வரவும் மறுக்கிறார். நான்கு தெரு தள்ளியிருக்கும் என் அம்மா வீட்டுக்கு அடிக்கடி சென்று விடுவேன். இதற்கிடையில், என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் பணி காலியாக இருப்பதை அறிந்து, விண்ணப்பித்தேன். இப்போது அங்கு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளேன். அம்மா வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பதால், குழந்தைகளுடன் அம்மா வீட்டிலேயே தங்கியிருந்து, பணிக்கு சென்று வருகிறேன். என்னையும், குழந்தைகளையும் பார்க்க அவ்வப்போது வந்து செல்வார், கணவர். ஒருமுறை என் வீட்டுக்கு வந்த கணவரிடம், 'இன்னும் எத்தனை காலத்துக்கு தனித்தனியாக இருக்கப் போகிறீர்கள். பக்கத்திலேயே ஒரு வீடு வாடகைக்கு வருகிறது. அங்கு அம்மாவுடன் வந்து விடுங்கள்...' என்று, என் அப்பா கூற, வாக்குவாதம் செய்து, கோபித்துக் கொண்டு சென்று விட்டார், கணவர். அதன்பின், என்னையோ, குழந்தைகளையோ பார்க்க வருவதே இல்லை. எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாத அவர், தற்சமயம், மது அருந்த ஆரம்பித்துள்ளதாக கேள்விப்பட்டேன். டியூஷன் சென்டரையும் சரிவர கவனிக்காததால், யாரும் டியூஷன் படிக்க வருவதில்லையாம். வேலைக்கு சரியாக போவதில்லையாம். இதற்கெல்லாம் நான் தான் காரணம் என, என் மாமியார் என்னைத்தான் குறை கூறி வருகிறாராம். என் கணவர் மீது எந்த வருத்தமும் இல்லை. ஆனாலும், தன் அம்மா மீது தவறு இருந்தாலும், கண்மூடித்தனமாக, 'சப்போர்ட்' செய்வது தான் எனக்கு பிடிக்கவில்லை. என் அம்மாவோ, 'இப்போது நீ அங்கு சென்றால், குழந்தைகள் எதிர்காலம் தான் பாழாகும். திருந்தி வந்தால், பார்த்துக் கொள்ளலாம்...' என, என்னை அனுப்ப மறுக்கிறார். மாமியாரின், 'டார்ச்சரை' நினைத்தாலே பயமாக இருக்கிறது. நான் என்ன செய்யட்டும் அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு - இத்தலைமுறை பெண்களுக்கு இருவகை திறன் தேவை. ஒன்று-, பெண் நிர்வாகம். தாய், பெரியம்மா, சின்னம்மா, அக்காள், தங்கை, தாய் வழி, தந்தை வழி பாட்டிகள், மாமியார் மற்றும் நாத்தனாருடனான உறவை நீதமாக பேண தெரிதல் வேண்டும். இரண்டு-, ஆண் நிர்வாகம். தாய் வழி, தந்தை வழி தாத்தாக்கள், தந்தை, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, மாமனார், கொளுந்தன்களுடனான உறவை நீதமாக பேண தெரிதல் வேண்டும். பூமிப்பந்தில் கால்பந்தாட்டம் ஆட விரும்பும் பெண்கள், மாமியாருடன் ஆன உறவை கண்ணியப்படுத்த தவறுவது ஏன்? மாமியார்--மருமகள் ஆடும் டேபிள் டென்னிஸில் ஆண் என்ற டென்னிஸ் பந்து அல்லாடி மல்லாடுகிறது. ஒரு திருமணமான ஆண், தாய் மற்றும் மனைவி என்ற இரு பெண்களை, கழைக் கூத்தாடி போல, 'பேலன்ஸ்' பண்ண தெரிய வேண்டும். மாமியார் என்ற ஸ்தானத்தில் ஒரு பெண்ணும், மருமகள் ஸ்தானத்தில் ஒரு பெண்ணும், மகன் அல்லது கணவன் ஸ்தானத்தில் ஓர் ஆணும், தங்களுக்கு இடையேயான உறவை உன்னதமான நிலைக்கு உயர்த்த வேண்டும். இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அறுபது வயது மாமியாரை திருத்துவது குதிரை முட்டை. உன்னை திருந்து என, சொல்லமாட்டேன்; மாறு என, கூறுவேன். உன் கணவரை தனியாக சந்தித்து மனம் விட்டு பேசு. அம்மா வீட்டுக்கு மாற்றியதற்கு மன்னிப்பு கேள். மன்னிப்பு கேட்பதால் நாம் குறைந்து விட மாட்டோம். உறவு மேம்பட வேண்டும் என்றால், நுாறு தடவை மன்னிப்பு கேட்கலாம். உன் குடும்ப விஷயத்தில், உன் தந்தையின் தலையீட்டை தவிர். மாமியாரின் விரலளவு தெரிந்து, இரண்டு கிராமில் பவளம் பதித்த தங்க மோதிரம் அவருக்கு பரிசளி. அவரிடமும் மன்னிப்பு கேள். ஒரு சுபதினத்தில் குழந்தைகளுடன் மாமியார் வீட்டுக்கு போய் செட்டிலாகு. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மாமியார் எது பேசினாலும் சிரித்துக்கொண்டே விலகி போ. நீ சிரித்தால் அவருக்கு எரிச்சல் வருகிறது என்றால், அமைதியான முகத்துடன் எதிர்கொள். மாமியாரை மானசீகமாக ஜெயித்து விட்டால், நீ இந்த உலகை ஜெயித்ததாக அர்த்தம். -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

saiprakash
பிப் 02, 2026 10:34

நல்ல தெளிவான அறிவுரை, அந்த பெண்ணின் வீட்டில் மீனாட்சி ஆட்சி போலா காரணம் என்னவென்றால் அங்கு அவர் அம்மாதான் எல்லாமுமே போல அதுபோல் தன்னுடுய மகளும் அந்தமாதிரி இருக்க வேண்டும் என்று தவறான வழிகாட்டுகிறார் போல


Natarajan Ramanathan
பிப் 01, 2026 18:40

பிரச்சனையே இந்த பெண்ணின் அம்மாதான்.


Ragupathi
பிப் 01, 2026 18:26

சரியான யோசனை.


Ramesh
பிப் 01, 2026 18:21

இவர் அம்மா வீடு 4 தெரு தான் தள்ளி உள்ளதாம். கணவன் வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்தாலும் 4 தெரு தான் அதிகம் நடக்க வேண்டும். உங்கள் மாமியார் உடன் சேர்ந்து வாழ கூடாது இது தான் உன்னோட பெற்றோர் மற்றும் உங்கள் ஆசைகள். இதில் பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார்களாம். யார் யாரிடமோ பேசுவதற்கு பதில் உன் ஆழ்மனதிடம் பேசு. 4 தெரு தள்ளி உள்ள உன் அம்மா வீட்டில் அடிக்கடி போய் போய் தங்கியதால் வந்த வினை தான் இது


Ramesh
பிப் 01, 2026 17:48

அம்மா வீட்டுக்கு அருகில் பள்ளி இருக்கிறதாம். அதனால் அம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறாராம். ஆனால் இவர்கள் வீட்டில் இருந்து 4 தெரு தள்ளி தான் அம்மா வீடு இருக்கிறதாம். உங்க வீட்டில் இருந்து போனாலே 4 தெரு அதிகமாக நடக்க வேண்டும் அவ்வளவு தான். உங்களுக்கு கணவர் வீட்டில் உங்கள் மாமியாருடன் இருக்க பிடிக்கவில்லை. உங்கள் கணவனுடன் சென்றால் பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்கிறாராம். 4 தெரு மட்டும் தூரம் உள்ள வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு அருகில் குடியமர்த்த சொல்கிறார். இவர்களது மொத்த பிரச்சினையே அந்த பெண்ணின் அம்மா தான். மகள், மாமியாருடன் சேர்ந்து வாழ கூடாது