உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு, நான், 70 வயது முதியவன். என் மனைவி காலமாகி விட்டாள். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. நான் கூட்டுறவு துறையில் மிக குறைந்த ஊதியத்தில் பணி செய்து, ஓய்வு பெற்றேன். எனக்கு கருணை ஓய்வூதியமாக, மாதம், ஆயிரம் ரூபாய் மட்டும் வருகிறது. வங்கியில் கடன் வாங்கி என் மகனை, பொறியியல் படிக்க வைத்தேன். என் மகளையும் சிறப்பு பள்ளி ஆசிரியை பயிற்சி அளித்து, அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாங்கி கொடுத்துள்ளேன். என் மகன் தற்போது ஒரு நிறுவனத்தில், 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். தன் மனைவியின் நடத்தை சரியில்லை என்று என் மகன் விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் வழக்கு நடந்தது. நான் மகனுக்கு அறிவுரை கூறி, மேற்படி வழக்கை வாபஸ் பெற செய்தேன். இப்போது, மகன் மற்றும் மருமகளுடன் ஒன்றாக வாழ்கிறேன். என் மகனுக்கு, ஆறு வயதில், ஒரு மகன் உள்ளான். எனக்கு சொந்தமாக, 20 லட்சம் மதிப்புள்ள வீடும், காலி மனையும் உள்ளது. இந்நிலையில், என் மகன் என்னை அடித்து, 'உனக்கு, 70 வயது ஆகிறது. ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறாய்...' என, தகாத வார்த்தைகளால் துன்புறுத்துகிறான். என் சொந்த வருமானத்தில், என் மனைவிக்கு, 3 சவரன் தாலி சரடு அணிவித்து இருந்தேன். என் மனைவி இறந்த பிறகு, தாலி சரடை என் மகன் எடுத்து கொண்டான். எனக்குரிய, மூன்று சவரன் மோதிரங்களை வங்கியில் அடமானம் வைத்து விட்டான். அதை நான் கேட்டதற்கு, 'வயதான உனக்கு எதற்கு?' என்று கூறி, நகையை கொடுக்க மறுக்கிறான். வீட்டை விட்டு எங்காவது போய் செத்து மடி, என்று, என்னை விரட்டுகிறான். 'வீடு எனக்கே சொந்தம். வீட்டை பூட்டி விடுவேன். நீ சென்று கோர்ட்டில் கேஸ் போட்டு பார்த்துக் கொள்...' என்கிறான். 'நான் காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பேன்...' என்று கூறியதற்கு, 'நீ புகார் செய்தால், மீண்டும் இதைவிட கடுமையாக உனக்கு தொந்தரவு செய்வேன்...' என்கிறான். எனக்கு, மூன்று தங்கைகள் மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். அவர்கள் வந்து கேட்டதற்கு, அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். இந்த கொடுமைகளில் இருந்து நான் மீண்டு வர, எனக்கொரு நல்ல வழி காட்ட வேண்டும். — இப்படிக்கு, உன் சகோதரன். அன்பு சகோதரருக்கு, இப்போதிருக்கும், இளம் தலைமுறையினருக்கு ஒரு பேராசை. அவர்களது பெற்றோர், 50 வயது நிறைவுற்றதுமே, உணவு, உடை, வீடு, தாம்பத்யம் மற்றும் அனைத்து அகப்புற ஆசைகளையும் துறந்து, இல்லறத்துறவிகள் ஆகிவிட வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் நன்றாக சம்பாதிக்கும் தந்தை, ஏ.டி.எம்., கார்டாகி விடவேண்டும். தாயோ சம்பளம் இல்லா ஆயாவாகி விட வேண்டும். எவ்வித மருத்துவ செலவும் வைக்காது தந்தை, 60- அல்லது 65 வயதில் துாக்கத்தில் இறந்து விட வேண்டும். ஆயா வேலை செய்யும் அம்மா உடல்நலத்துடன், 80 வயது வரை இருக்கலாம். உங்கள் மகனுக்கு, 45 வயதும், மகளுக்கு, 42 வயதும் இருக்கும் என, யூகிக்கிறேன். மனைவியை இழந்த வயோதிகம் பெரும் சாபம். நாயும் மதிக்காது, பேயும் மதிக்காது. மனைவியின், மூன்று பவுன் தாலி சரடையும், உங்களின் மூன்று பவுன் மோதிரங்களையும் பங்கு போட உங்கள் மகள் வரவில்லையா? அண்ணனும், தங்கையும், 'குற்றத்தில் பங்காளிகள்' இல்லையா? உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் இருக்கக்கூடும். அப்படி இருந்து, அவைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டால் மாதம், மூவாயிரம் ரூபாய் செலவாகுமே? ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் போக, இரண்டாயிரம் ரூபாய் துண்டு விழுமே? என்ன செய்கிறீர்கள்? எப்படி சமாளிக்கிறீர்கள்? மகனின் தொந்தரவிலிருந்து மீள, காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். சொந்தமாய் சம்பாதித்து கட்டிய வீட்டையும், வாங்கிய மனையையும் பிடித்த நபருக்கு பரிசு பத்திரமாக எழுதிக் கொடுக்கலாம். பதிவு செய்யப்பட்ட உயில் எழுதி மகனை சொத்திலிருந்து விலக்கி வைக்கலாம். மகனிடமிருந்து மாத பராமரிப்பு தொகை, 10 ஆயிரம் ரூபாய் பெற, ஆர்.டி.ஓ., தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்கலாம். வயது சான்று, வருமான ஆதாரம், வாரிசுகளின் விபரம் கேட்பர். 90 நாட்களில் நிவாரணம் கிடைக்கும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007ன் படி, மகன் மீது மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் செய்யலாம். மகனை சொத்திலிருந்து விலக்கி வைக்க வழக்கறிஞரை அணுகி, சட்ட அறிவிப்பு மகனுக்கு அனுப்பலாம். மகன், மகள், பேரனை வீட்டை விட்டு வெளியேற்ற சட்டத்தில் இடமுண்டு. மகன் மிரட்டினான் என்றால், பயப்படாமல் தீரமாய் எதிர்த்து நில்லுங்கள். மகன் மீது சட்ட நடவடிக்கை வேண்டாம் என்றால், வீட்டையும், மனையையும் விற்று, விற்ற பணத்தை மூன்றாக பிரித்து, மகன், மகளுக்கு கொடுத்து, மீதி ரூபாயை அஞ்சல் சேமிப்பில், ஐந்து ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக போட்டு வைக்கவும். மாதம் வட்டி, 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். சமையலுக்கு ஆளை போட்டு, மகிழ்ச்சியாக இருக்கலாம். போஷாக்கும், சரியான மருத்துவமும், மனநிம்மதியும் இருந்தால், சகோதரா நீ இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாய். சுயத்தை பாதுகாக்க வாழ்ந்து காட்டுவோமே! — என்றென்றும் சகோதரி சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

1968shylaja kumari
ஏப் 15, 2026 14:36

மகன் மீது சட்ட நடவடிக்கை வேண்டாம் என்றால் ??? நாசமாபோகவேண்டியதுதான். ஐயோ பாவம் என்றால் 6 மாதம் பாவம் வந்து சேரும் என்று பழமொழி உண்டு. தயவு செய்து இனிமேலும் மகன் உதவி செய்வான் , கொள்ளி போடுவான் என்று எதிர்பார்த்தால் வாழும்போதே அனாதை நாயக அவஸ்தை படவேண்டும் .அந்த வீட்டை விற்று பணத்தை SCSS டெபாசிட் செய்து நல்ல ஆஸ்ரமத்தில் சேர்ந்து வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்கள்


Bala
ஏப் 14, 2026 13:02

உடனே எல்லா சொத்தையும் விற்றுவிடுங்கல் அவனை நடுத்தெருவில் விட்டால் புத்திவரும்.


1968shylaja kumari
ஏப் 15, 2026 14:36

கரெக்ட் சூப்பர்


Ganesun Iyer
ஏப் 14, 2026 02:29

கஷ்டப்பட்டு சேர்த்து வைச்ச மருமகளின் நடவடிக்கை என்ன?


Ragupathi
ஏப் 12, 2026 23:45

சரியான யோசனை.


crap
ஏப் 12, 2026 21:22

13 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் சமையலுக்கு ஆள் போட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் - எந்த ஊர்ல அம்மா?


Anantharaman Srinivasan
ஏப் 12, 2026 21:14

மாதம் 70 ஆயிரம் சாம்பாதிக்கும் மகனுக்கு பேராசையா அல்லது மனநோயா. எப்படியிருந்தாலும் பெற்றோர் பாராமரிப்பு சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்வதே நல்லது. வாழ்நாள் முழுவதும் சொத்து அப்படியே இருக்கட்டும். பிரித்து தர வேண்டாம்.