அன்புள்ள சகோதரிக்கு, எட்டு பிள்ளைகளை பெற்ற ஏழை பெற்றோருக்கு, எட்டாவது பிள்ளையாக பிறந்த ஆண் மகன், நான். குடும்பம், ஒருவேளை உணவு உண்ண வேண்டும் என்பதற்காக, படிப்பை கைவிட்டு மெக்கானிக் வேலைக்கு சென்றேன். அந்த பணியின் கடின தன்மை என்னை மலடாக்கியது. இந்நிலையில், அரசு பணியில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்ததில், எனக்கு கீழ்நிலை அரசுப்பணி கிடைத்தது. குடும்பம் வறுமையிலிருந்து மீண்டது. என் முன் பிறந்த அனைவருக்கும் திருமணம் முடிந்து, என் முறை வந்த சமயத்தில் நான் திருமணத்தை மறுத்தேன். என்னால் ஒரு பெண்ணை தாய் ஆக்க முடியாது எனக்கூறி, திருமணத்துக்கு தடை போட்டு வந்தேன். ஆனால், என்னுடன் பணிபுரிந்த பெண் என்னை காதலித்தாள். நான், என் பிரச்னையை தெரிவித்த போதும், என்னை ஏற்றுக்கொள்வதாக கூறியதால், இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். பதினைந்து ஆண்டுகள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக கடந்த சமயத்தில், எங்களுக்கு குழந்தை இல்லாததைக் குறித்த சமூக பேச்சுக்கள் என் மனைவியின் மனதை வருத்தி, கடும் மன அழுத்தம் ஏற்பட்டு, என்னை விட்டு மறைந்தாள். என், 47வது வயதில் தனிமரம் ஆனேன். என் சகோதரிகள் மற்றும் பெற்றோர் என்னை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது மறுத்து விட்டேன். தற்போது, என் பெற்றோர் வயது மூப்பினாலும், என்னைப் பற்றிய கவலையினாலும் மூன்று ஆண்டு இடைவெளியில் இறைவனடி சேர்ந்தனர். இந்நிலையில் அரசு பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றேன். இன்று, 60 வயது கடந்த நிலையில் அனாதரவாக இருக்கிறேன். சொந்த வீடு உள்ளது. இரவில் உறங்க முடியாமல், பயத்துடன் காலம் கழித்து வருகிறேன். ஓய்வூதியம் கிடைக்கிறது. பணப்பிரச்னை இல்லாவிட்டாலும், தனிமை என்னை அலைக்கழிக்கிறது. உடன்பிறந்தவர்களின் ஆதரவும் இல்லை. மீதமுள்ள நாட்களை நிம்மதியாக வாழ நல்ல வழி சொல்லுங்கள், சகோதரி.
இப்படிக்கு, உங்கள் சகோதரன். அன்பு சகோதரனுக்கு, உன்னுடைய உடல் சார்ந்த பிரச்னையை, நீ அப்போதே தகுந்த சிகிச்சை மேற்கொண்டு குணமாக்கியிருக்கலாம். நாற்பது வயதுள்ள, நெருங்கிய இயந்திரப் பணியாளர்களில், 40 சதவீத பேருக்கு இப்பிரச்னை இருக்கிறது. அதன்பின் ஒவ்வொரு, பத்து வயதுக்கும் இப்பிரச்னை, 10 சதவீதம் கூடிக் கொண்டே போகிறது. பதினைந்து ஆண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து விட்டாய். பிரச்னைகளை சபித்தபடி அவைகளுடன் சேர்ந்து வாழ்வது விவேகமல்ல. பிரச்னைகளைப் போராடி ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க முடியாவிட்டால் போராடிய திருப்தியாவது மனதிற்குள் இருக்கும். உன், 47வது வயதில் உனக்கு மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. அதை எட்டி உதைத்து சிதற்றி விட்டாய். உன் 60வது வயதில், உன் மனம் துணைக்கு ஏங்குகிறது. இப்போது, நீ மறுமணம் செய்ய விரும்பினால், கணவனை இழந்த அல்லது முதிர் கன்னியைத் தேர்ந்தெடுக்கலாம். எதற்கு, 'ரிஸ்க்' எடுக்கிறாய்? உனக்கு ஏழு சகோதர-சகோதரிகள் உள்ளனர். அவரவருக்கு குடும்பம் உள்ளது. உன் சொந்தவீட்டை வாடகைக்கு விடு. உனக்கு இணக்கமான சகோதரன் அல்லது சகோதரி வீட்டில் இணைந்திடு. கெட்ட ஆலோசனைகளை ஏற்காதே. சுயபச்சாதாபத்தை துாக்கி எறி. ஆன்மிகச் சுற்றுலாக்கள் போ. விரும்பிய உணவுகளை உண். வாழ்க்கைத்துணை தேவைப்படாத ஆயிரம் சந்தோஷங்கள் இவ்வுலகில் உண்டு.
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.