வாசகர்கள் கருத்துகள் ( 1 )
R Dhasarathan
ஆக 16, 2026 09:11
சரியாக தெரியவில்லை நீங்கள் சொல்வது. கணவன் மனைவி தனியாக மனம் விட்டு பேசி நல்லதே நடக்கும் என்று யோசிக்க வேண்டும்.
அன்புள்ள அம்மாவுக்கு, நான், 32 வயது பெண். பி.காம்., படித்துள்ளேன். வேலைக்கு செல்லவில்லை. திருமணமாகி விட்டது. கணவர் வயது: 37. வங்கியில் பணிபுரிகிறார். எங்களுக்கு திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எங்களுக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.எனக்கு ஒரு தங்கையும், தம்பியும் உள்ளனர். என் தங்கை, சமீபத்தில், தான் காதலித்தவனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாள். தம்பிக்கும் திருமணமாகி விட்டது.கணவருக்கு இரு தம்பிகள். அவர்களுக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.என் மாமனார் சமீபத்தில் இறந்து விட்டார். மாமியார் மட்டும் எங்களுடன் உள்ளார்.'நமக்கென்று குழந்தை, குடும்பம் வேண்டாமா? நாம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம்... ' என்று கேட்டால், 'கொஞ்ச நாள் போகட்டும், எல்லாம் நல்லபடியாக நடக்கும்...' என்று, முனிவர் போல் பதிலளிக்கிறார்.'உன்னைவிட சின்னவங்களுக்கெல்லாம் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். நீங்கள் எப்போது குழந்தை பெத்துக்க போறீங்க?' என்று என் அம்மா உட்பட உறவினர்கள் அனைவரும் கேட்டு விட்டனர்.மாமியாரும் இதையே சொல்லி, குத்திக்காட்டி வருகிறார்.'உறவே இல்லாத போது குழந்தை எப்படி பிறக்கும்?' என்று நினைத்து, வேதனையில் இருக்கிறேன்.என் அம்மாவின் வற்புறுத்தலால், மருத்துவமனைக்கு சென்று, எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்து கொண்டேன். குழந்தை பெற முழு தகுதியும் உள்ளது என்று என்று கூறி விட்டனர்.கணவரை, பரிசோதனை செய்து கொள்ள சொன்னால், 'இப்போது வேண்டாம். இது குறித்து இனி எதுவும் பேச வேண்டாம்...' என்கிறார்.எவ்வளவு நாள் தான் பொறுமையாக இருப்பது? இப்போதெல்லாம், இயற்கையாக எழும் ஆசைகள் கூட, மலருவதில்லை. மன உளைச்சலில் உள்ளேன்.இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? வாழா வெட்டியாய் வாழவும் விருப்பம் இல்லை. குடும்ப கவுரவம் பாழாகும் என்பதால், நான் மலடி பட்டத்துடன் வாழ்ந்துவருகிறேன்.இதிலிருந்து மீண்டு வர, எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா.இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு,கணவன்-மனைவிக்கிடையே பரஸ்பர தாம்பத்யம் ஓர் அடிப்படை உரிமை.இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்ற நீ, வேலைக்கு போகாதது பெருங்குற்றம். வேலைக்கு செல்வது உனக்கு பொருளாதார சுதந்திரத்தை மட்டுமல்ல, விசாலமான பார்வையையும் பரிசளிக்கும்.தாம்பத்யத்திற்கு உடல் தகுதி இல்லாத கணவருடன், ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி, உன் இளமையை வீணடித்து விட்டாய்.உனக்கும், உன் கணவருக்கும் இடையே, ஏழு ஆண்டுகளாக தாம்பத்யம் அறவே இல்லாததை, நீ, உன் பெற்றோரிடமும், உன் மாமியாரிடமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.குடும்ப கவுரவம் பாழாகும் என நினைத்து, மலடி பட்டம் சுமக்கிறாய். இது என்ன சினிமாவா, சீரியலா அல்லது நாவலா? முட்டாள்தனமான தியாகங்கள், தேவையில்லாத ஆணி. நீ, நல்லவள் என, யாரும் சான்றிதழ் தர ஒற்றைக்கால் தவம் கிடக்காதே.அடுத்து நீ, செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.* உடனடியாக நீ, ஒரு வேலையில் சேர். தனியார் நிறுவன பணி, சொற்ப சம்பளமாய் இருந்தாலும் பரவாயில்லை* இருதரப்பு பெரியவர்களை வைத்து, பிரச்னையை பேசு. உன் கணவர், வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டு, உன்னை புறக்கணிக்கிறாரா என்ற கோணத்தையும் விவாதி. அப்படி இல்லை என்றால், அடுத்த, 15 நாட்களுக்குள் அவர் முழு உடல் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, நிபந்தனை போடு* குடும்பத்தினரின் பஞ்சாயத்து பலனளிக்காவிட்டால், ஒரு வழக்கறிஞரை அணுகி, உன் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பு. குடும்ப நல நீதிமன்றம் மூலம், விவாகரத்து பெற்ற பிறகு தகுந்த ஆண்மகனைத் தேர்ந்தெடுத்து, பார்த்து மறுமணம் செய்து கொள்.பொருந்தாத திருமண வாழ்க்கையில் கிடந்து உழல்வதை விட, விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொள்வது காலத்தின் கட்டாயம்.மறுமணம் செய்து கொள்வதில் அவசரம் கூடாது. முதல் திருமண தோல்வியை மனதில் வைத்து, மறுமண ஆணின் உடல் மற்றும் மனத்தகுதியை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது உத்தமம்.ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும். எக்கதவும் திறக்காவிட்டால் உடைத்து திற.உன் வாழ்க்கை உன் சந்தோஷம். யாரும் பிச்சையிட அனுமதி தர தேவையில்லை மகளே!என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.
சரியாக தெரியவில்லை நீங்கள் சொல்வது. கணவன் மனைவி தனியாக மனம் விட்டு பேசி நல்லதே நடக்கும் என்று யோசிக்க வேண்டும்.