அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு, நான், 26 வயது பெண். எனக்கு, ஐந்து வயதாகும்போதே, என் பெற்றோர், விபத்து ஒன்றில் இறந்து விட்டனர். என் மாமா தான் என்னை வளர்த்து, பிளஸ் 2 வரை படிக்க வைத்தார். நான் மாமா வீட்டில் இருப்பது, என் அத்தைக்கு பிடிக்கவில்லை. எனவே, தன் நண்பர் வீட்டில், பணியாளாக என்னை சேர்த்து விட்டார், மாமா. அந்த வீட்டில், வயதான கணவன் - மனைவி மட்டும் தான். அவர்களது இரு மகன்களும், வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி விட்டதாக கூறினர். அந்த முதியவர்கள் கீழ் போர்ஷனில் இருந்தனர். மாடியை, வங்கியில் பணிபுரியும், ஐந்து இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். அந்த இளைஞர்கள் தங்கியிருந்த மாடி பகுதியையும், நான் தான் தினமும் பெருக்கி, துடைப்பேன். அவர்களே சமையல் செய்து கொள்வர். நான் பாத்திரம் கழுவி வைப்பேன். அவர்களில் ஒருவர், என்னை காதலிப்பதாக கூறினார். என் நிலைமை புரிந்து, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு, மீண்டும் என்னிடம் கேட்டார். மீண்டும் மறுத்தேன். ஆனால், அவரது நண்பர்கள் என்னை சமாதானப்படுத்தி, நண்பரின் நல்ல குணம், வசதியான குடும்ப பின்னணி பற்றியெல்லாம் கூறி, ஒப்புக்கொள்ள வைத்து விட்டனர். எனக்கும், அவருக்கும், கோவில் ஒன்றில் திருமணம் செய்து வைத்தனர். அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயந்து, 'கொஞ்ச நாளைக்கு இங்கேயே பணி செய்து வா...' என்று கூறி விட்டார். அவரது பெற்றோரின் வற்புறுத்தலால், சொந்த ஊருக்கு சென்றார். பெற்றோரை சமாதானப்படுத்தி, அழைத்து செல்வதாக கூறி சென்றார். இரண்டு மாதமாகியும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாடியில் தங்கியிருந்த அவரது நண்பர்களிடம் கேட்க, 'நீ முதலில், வீட்டு வேலை செய்வது போல், அந்த வீட்டுக்குள் சென்று விடு. பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறி, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நானும் அங்கு சென்று, பணிப்பெண்ணாக அறிமுகமாகி, வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். அவரது பெற்றோர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். அவர், மேற்படிப்பு படித்து முடித்து, வேலை கிடைத்ததும், என் விஷயத்தை, பெற்றோரிடம் சொல்வதாக தள்ளி போட்டு வந்தார். ஒருநாள், 'வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. இங்கேயே இரு. நான் திரும்பி வந்து, பெற்றோர் சம்மதத்துடன் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்...' என்று கூறி சென்று விட்டார். வேறு வழி இல்லாமல், நானும், அவர் வீட்டிலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தேன். ஒருநாள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது உறவினன் ஒருவன் வந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றான். நான் சத்தம் போட்டபடி வெளியே ஓடிவிட்டேன். அவரது பெற்றோர் வந்ததும், நான் தான் அவனிடம் தப்பாக நடந்து கொண்டதாக கதையை மாற்றி விட்டான். அவரது பெற்றோரும், தீர விசாரிக்காமல், என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். போக்கிடம் ஏதுமின்றி அவரது நண்பர் ஒருவருக்கு போன் செய்து சொல்ல, என்னை அழைத்து சென்று, குடிசை பகுதி ஒன்றில் வாடகைக்கு வீடு பிடித்து தங்க வைத்தார். செலவுக்கு அவ்வப்போது பணமும் கொடுத்து செல்வார். என்னவரது போன் நம்பர் கேட்டாலும், கொடுக்க மறுத்தார். எனவே, வெளிநாட்டில் அவருக்கு போன் செய்து, என் நிலைமையை எடுத்துச் சொல்ல சொன்னேன். அதற்கு முன்பாகவே, அவரது பெற்றோர், நான் நடத்தை கெட்டவள் என்று, சொல்லியிருக்கின்றனர். அதனால், என் மீது கோபமாக இருப்பதாக கூறினார், அவரது நண்பர். இப்போது, என் வாழ்க்கை சிக்கலாகி விட்டது. மாமா வீட்டுக்கும் போக முடியாமல், முதலில் நான் பணிபுரிந்த, அந்த முதியவர்கள் வீட்டுக்கும் போக முடியாமல் தவிக்கிறேன். அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. நான் என்ன செய்வது, அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு, மாமாவின் நண்பர் வீட்டில் பணியாளாய் சேர்ந்து, காற்றடித்த திசையில் எல்லாம், கிழி ந்த ரூபாய் நோட்டாய் பறந்திருக்கிறாய். நல்லவேளை உன்னை யாரும், விலைமகள் ஆக்கவில்லை; இது ஓர் ஆறுதல். மகளே... சில கேள்விகளும், நீ அடுத்து செய்ய வேண்டிய நகர்வுகளும் கீழே-: * உன்னை காதலித்து மணந்தவனின் உண்மையான பெயர் தெரியுமா? உன், கோவில் திருமணம் திருமணப்பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டதா? * உன் கணவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கலாம். கணவரின் நண்பருக்கு கணவரின் விலாசம் மற்றும் வெளிநாட்டு பணி இடம் தெரியும் என்பதால், புகாரில் கணவரின் நண்பர் பெயரையும் சேர்க்கலாம். காவல்துறையில் புகார் கொடுப்பதில், நீ நடைமுறை சிக்கல்களையும், வீணான அலைச்சல்களையும் சந்திக்க வேண்டிவரும். அதனால், காவல்துறை நடவடிக்கையை தவிர்த்து, உன் வாழ்வாதாரத்துக்கு சில வழிவகைகள் சொல்கிறேன். எது உனக்கு சரி வருமோ அதை நீ செய்யலாம். அரசு சேவை இல்லங்கள்,- ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் கல்வி இலவசமாய் இங்கு வழங்கப்படுகின்றன. சென்னை, சேலம், கடலுார், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரியில் இல்லங்கள் உள்ளன. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கடின சூழ்நிலை கொண்ட பெண்களுக்கு, 'சுவதார் கிரஹ்' என்ற திட்டம் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, தங்குமிடம், உணவு, ஆலோசனை, சட்டஉதவி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகள் தவிர, தமிழ்நாட்டில் ஏராளமான, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆதரவற்ற பெண்களுக்கான உதவி எண்- : 181. நீ தேவையில்லாமல் அலைந்தால், சமூகவிரோதிகள் கையில் சிக்கி, சின்னாபின்னபட்டு போவாய். நீ மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி, தகுந்த ஆலோசனைகள் பெறலாம். பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழு மக ளே! - என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.