உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே 'மணி... என் மாப்பிள்ளை, துபாயிலிருந்து வந்துள்ளார். திரும்பி போகும் போது, என்னையும் கூப்பிட்டு போகிறேன் என்று, விசா, டிக்கெட் எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டார். பேரப் பிள்ளைகளும் வற்புறுத்தறாங்க. இதுவரை விமானத்தில் போனதே இல்லை.'ஒண்ணும் தெரியாதவன் என்று மாப்பிள்ளையும், பேரக்குழந்தைகளும் கேலி செய்துடப் போறாங்கன்னு பதட்டமா இருக்கு. நீதான், அடிக்கடி விமானத்தில், பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கியே...'விமானத்தைப் பற்றி சில பல விஷயங்களை எனக்கு சொல்லேன். அதை அப்படியே கிளிப்போல் ஒப்பித்து, 'விஷய ஞானி' என்று காட்டிக் கொள்கிறேன். அப்பாவுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறதே என்று, என் பெண்ணுக்கும் கவுரமா இருக்குமில்லை?' என்றார், அன்வர் பாய்.'இதுக்கு இவ்வளவு பீடிகை தேவையா? எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். கவலைப்படாதீங்க...' என்று   கூற ஆரம்பித்தேன், நான்:வானத்தில், விமானங்கள், 'விர்' என பறப்பதைப் பார்த்து, மிக வேகமாக பறப்பதாக பெரும்பாலோர் நினைத்துக் கொள்வர். உண்மையில், பயணிகள் விமானம், மணிக்கு 900 கி.மீ., வேகத்தில் தான் பறக்கிறது. இது, பூமியின் சுழற்சி வேகத்தைவிட குறைவு. பூமி தன் அச்சில் மணிக்கு 1,600 கி.மீ., வேகத்தில் சுழல்கிறது!பயணிகள் விமானம் ஒன்றின் எடை, 90 ஆயிரம் கி.கி., விமானத்தின் இறக்கைகள் வடிவமைப்பு காரணமாக, அதன் மேற்புறத்தில் காற்றின் வேகம் அதிகமாகவும், கீழ்ப்புறத்தில் குறைவாகவும் இருக்கும். இதனால், மேல்நோக்கிய விசை உருவாகி, விமானம் மேலே உயர்கிறது. இந்த அற்புதமான இயற்பியல் விதி இல்லையென்றால், விமானங்கள் பறக்க முடியாதுவிமானம் பறக்கும் போது, அதன் உள்ளே உள்ள ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் தான் விமானப் பயணத்தின் போது, நமக்கு அதிக தாகம் எடுக்கும். மேலும், விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம், கடல் மட்டத்தில் இருப்பதை விட குறைவாக இருக்கும். எனவே, விமானம் உயரே செல்லும் போது, நம் காதுகள் அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.விமானத்தின் மின்சார அமைப்பு மிகவும் சிக்கலாக இருக்கும். ஒரு சாதாரண விமானத்தில், 150 கி.மீ., நீளமுள்ள மின் கம்பிகள் பயன்படுத்தப் படுகின்றன. இது, ஒரு சிறிய நகரத்தின் மின் வலையமைப்புக்கு சமமானது. விமானத்தின் பல்வேறு பாகங்களை இயக்க, இது உதவுகிறதுவிமானத்தின் ஜன்னல்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு முக்கிய காரணம், உயரத்தில் பறக்கும் போது அதன் உள்ளேயும், வெளியேயும் உள்ள அழுத்த வேறுபாடு அதிகமாக இருக்கும். வட்ட வடிவ ஜன்னல்கள், இந்த அழுத்த வேறுபாட்டை சமாளிக்க உதவுகின்றன. சதுர வடிவ ஜன்னல்கள் இருந்தால், விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதுவிமான இறக்கைகளின் நுனியில் மேல்நோக்கி வளைந்திருப்பதை பார்த்திருக்கலாம். இது, வெறும் அழகுக்காக அல்ல. இந்த வடிவமைப்பு, விமானம் பறக்கும் போது ஏற்படும், சுழல் காற்றை குறைக்க உதவுகிறது. இதனால், எரிபொருள் சேமிக்கப்படும். மேலும், விமானம் நிலையான முறையில் பறக்க இது உதவுகிறதுநீண்ட துார பயணங்களின் போது, விமான ஓட்டிகள் துாங்குவதுண்டு. நான்கு மணி நேரத்திற்கு மேல் பறக்கும் விமானங்களில், மூன்று அல்லது நான்கு பைலட்டுகள் இருப்பர். அவர்கள் மாறி மாறி ஓய்வெடுப்பர். ஒரு நேரத்தில், இரண்டு பைலட்டுகள் கட்டாயம் விழிப்புடன் இருப்பர்விமானத்தில் இடி விழுவது அரிதாக தான் நிகழும். விமானங்கள் இடி தாக்குதலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உலோக உடல், மின்சாரத்தை பாதுகாப்பாக நிலத்திற்கு கடத்தி விடும். இதனால், விமானத்தின் உள்ளே உள்ள பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுவிமானத்தின் கழிவறைகள் வெற்றிடம் மூலம் இயங்குகின்றன. கழிவுகள் அனைத்தும் ஒரு சிறப்பு தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பின், இந்த தொட்டி காலி செய்யப்படும். பைலட்களுக்கு முதலில், 'ப்ளைட் சிமுலேட்டர்'களில் பயிற்சி வழங்கப்படும். 'ப்ளைட் சிமுலேட்டர்' என்பது, பயண விமானங்களில் இருப்பது போன்ற மாடலில் வடிவமைக்கப்பட்ட இயந்திரம். பயிற்சி நோக்கங்களுக்காக மட்டுமே, 'ப்ளைட் சிமுலேட்டர்' இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.பயிற்சி முடிந்த உடனேயே, பைலட்கள் நேராக பயணிகளுடன் கூடிய பாசஞ்சர் விமானங்களை இயக்கும் பணிக்கு செல்வர். எனினும், அவர்களுக்கு துணையாக அனுபவம் வாய்ந்த பைலட் ஒருவர் இருப்பார். சூப்பர்வைசர் பைலட்டின் இரண்டாவது சோதனைக்கு பிறகு, சுயமாகவே விமானங்களை இயக்க, அவர்கள் அனுமதிக்கப்படுவர்.எட்டு மாதங்களுக்கு ஒரு முறை, பைலட்கள் மீண்டும், 'சிமுலேட்டர்' பயிற்சிக்கு அனுப்பப்படுவர். பைலட்கள் தங்களின் லைசென்ஸை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதேசமயம், போயிங் 777 விமானங்களை இயக்குபவர்களுக்கு இது, ஆறு மாதமாக உள்ளது.ஒரு சமயத்தில், ஒரே வகையான விமானத்தை மட்டுமே பைலட்களால் இயக்க முடியும். வேறு வகையான விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸை பெற வேண்டுமென்றால், அதற்கு அவர்கள் மீண்டும், எட்டு முதல் 12 வாரம் பயிற்சிக்கு சென்றாக வேண்டும்.ஒவ்வொரு விமானமும் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே தான், ஒரு வகையில் இருந்து மற்றொரு வகை விமானத்திற்கு மாறும் போது, பைலட்களுக்கு மீண்டும் கடுமையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. விமானங்களை இயக்கும் போது, பைலட்களும், கோ--பைலட்களும் ஒரே வகை உணவை சாப்பிட கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஒரு உணவால், 'புட் பாய்சன்' ஏற்பட்டால், மற்றொரு பைலட் பாதிக்கப்பட மாட்டார் என்பதற்காகவே, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே, இருவருக்கும் வெவ்வேறான உணவுகள் தான் வழங்கப்படும்.வானில், இரண்டு விமானங்கள் சந்தித்து கொள்ளும்போது, பஸ் டிரைவர்களை போல, 'ஹலோ' சொல்ல மாட்டார்கள். 'லேண்டிங் லைட்' அல்லது 'விங் இன்ஸ்பெக்ஷன் லைட்'களை, ஒளிர செய்வர், பைலட்கள்.- என்று, நான் கூறி முடிக்கவும், 'அம்மாடியோவ்.... இவ்வளவு விஷயம் இருக்கா? அவ்வளவையும் ஞாபகம் வைத்துக் கொள்ளணுமே. திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்து, கொள்கிறேன். ரொம்ப நன்றி மணி...' என்று கூறி விடைபெற்றார், அன்வர் பாய்.அவருக்கு வாழ்த்து சொல்லி, அனுப்பி வைத்தேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !