உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே நண்பர் ஒருவரது இல்லத் திருமணம் மதுரையில் நடக்க இருந்தது. திருமணத்துக்கு கண்டிப்பாக வர வேண்டும் என, கோரிக்கை வைத்திருந்தார், நண்பர். தட்ட முடியாமல், நானும், லென்ஸ் மாமாவும் ரயிலில் செல்ல முடிவெடுத்தோம்.ஸ்டேஷனில், ரயில் புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, எங்களது முன்பதிவு பெட்டியில் ஏறினோம். எங்கள் இருக்கைக்கு எதிரே, கீழ் 'பெர்த்'தில், பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும், கொஞ்சம், 'ஜெர்க்' ஆனார், லென்ஸ் மாமா. 'இவருடனா பயணம் செய்யப் போகிறோம்...' என்ற, லென்ஸ் மாமாவின், 'மைன்ட் வாய்ஸ்' எனக்கு புரிந்தது.எங்களை பார்த்து, லேசாக புன்னகைத்த அந்த பெரியவர், 'எக்ஸ்க்யூஸ் மீ, என் பையை கொஞ்சம் பார்த்துக் கொள்கிறீர்களா? தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து விடுகிறேன்...' என, தன்மையாக கேட்டார்.'சரி...' என்பதற்கு அடையாளமாக தலை ஆட்டினேன், நான்.'சீக்கிரமா போய் வாருங்கள். ரயில் கிளம்ப போகிறது. அப்படியே கிளம்பி விட்டாலும், வேறு ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி விடுங்கள். பிறகு, இங்கு வந்து விடலாம்...' அக்கறையாக சொன்னார், லென்ஸ் மாமா.டி.டி.ஆரிடம் சொல்லி, அப்படியே அவரை வேறு எங்காவது இடம் மாற்றம் செய்து விடலாம் என்ற, லென்ஸ் மாமாவின் உள்நோக்கம் புரிய, ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.இரண்டு இளைஞர்கள் தங்களது, 'கோச்' எது என தெரியாமல், எங்கள் பெட்டியில் ஏறி, 'சீட்' எண்ணை சோதித்தனர். தங்களுடையது இல்லை என தெரிந்ததும், பதட்டத்துடன் கிளம்ப, அப்போது, இரண்டு கைகளில், இரண்டு தண்ணீர் பாட்டிலை பிடித்தபடி வந்த பெரியவரை மோதியபடி ஓடினர்.இதில், சற்று தடுமாறிய பெரியவர், சமாளித்து, உள்ளே வந்து, பெருமூச்சுடன் அமர்ந்தார். 'சாந்தி, சாந்தி, சாந்தி...' என, மூன்று முறை கூறி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.'சாந்தி, என்கிறீர்களே. யார் அவர்?' என்றார், லென்ஸ் மாமா.'அட அசடே...' என்பது போல், ஒரு, 'லுக்' விட்டு, 'என்னை, நானே அமைதிப்படுத்திக் கொள்ள சொன்னது அது...' என்றார்.ரயில் கிளம்பியது.அரசின், தமிழ் வளர்ச்சி துறையில், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், பெரியவர்.எங்களைப் பற்றி விசாரித்தறிந்து, 'உங்களோடு பேச நிறைய விஷயமிருக்கு. உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே...' என்றார்.நான் அமைதியாக இருக்க, 'போச்சுடா...' என முணுமுணுத்த மாமா, 'மணி, டி.டி.ஆரை பார்த்துட்டு வந்துடறேன்...' எனக் கூறி, அங்கிருந்து நகர்ந்தார்.பொதுவான பல விஷயங்களை பேசிய பின், திடீரென, 'ரெண்டு நல்லவனுக்கு மூணு வழி; ஒரு நல்லவன் மற்றும் ஒரு கெட்டவனுக்கு ரெண்டு வழி; ரெண்டு கெட்டவனுக்கு ஒரே வழி...' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'இதுக்கு என்னங்க விளக்கம்?' என்றேன்.சொல்ல ஆரம்பித்தார்: வரப்பு அல்லது ஒத்தையடி பாதையிலே எதிரும் புதிருமா இரண்டு பேர் வந்துகிட்டிருக்காங்க. இரண்டு பேரும் பாதையை விட்டு விலகாம நேரா வந்தா, மோதிக்க வேண்டியது தான். எதிரும், புதிருமா வந்துகிட்டிருக்கிற அந்த ரெண்டு பேருமே நல்லவங்க.ஒருத்தர் என்ன பண்ணுவார்... இவரு நேரா பாதையிலே வரட்டும்ன்னு, அவரு வரப்பை விட்டு விலகி கீழே இறங்கி நடந்து வருவார். இவரு என்ன பண்ணுவார்... அவரு பாதையிலே வரட்டும்ன்னு, இவரு விலகி கீழே இறங்கி நடந்து வருவார். அவருக்காக இவரு விட்டுக் கொடுக்கிறார். இவருக்காக அவரு விட்டுக் கொடுக்கிறார். ஆக இருவருக்கும் நடுவுலே ஏற்கனவே உள்ள பாதை ஒண்ணுன்னு, மொத்தம் மூணு பாதை.அதுதான் ரெண்டு நல்லவனுக்கு மூணு வழின்னு சொல்றது.ஒரு நல்லவன் - ஒரு கெட்டவனுக்கு, ரெண்டு வழி. இது எப்படின்னா. ஒரே வரப்புலே எதிரும் புதிருமா வர்ற ரெண்டு பேர்ல ஒருத்தன் நல்லவன். ஒருத்தன் கெட்டவன். நல்லவன் வரப்பை விட்டு கீழே இறங்கி, எதிர்ல வர்றவனுக்கு வழிவிடுவான். கெட்டவன், வரப்பை விட்டு கீழே இறங்க மாட்டான். அவன் இறங்கட்டுமே நாம எதுக்கு இறங்கணும்ன்னு இருந்துடுவான். இப்ப ரெண்டு பாதை தான் உண்டு.இது தான், ஒரு நல்லவன் - ஒரு கெட்டவனுக்கு ரெண்டு வழின்னு சொல்றது. ரெண்டு கெட்டவனுக்கு ஒரே வழின்னு சொல்றது எப்படி தெரியுமா? வரப்புல எதிரும் புதிருமா வர்ற ரெண்டு பேருமே கெட்டவன்னு வச்சிக்குங்களேன். ரெண்டு பேருமே வரப்பை விட்டு கீழே இறங்க மாட்டாங்க. இவன் இறங்கட்டுமேன்னு, அவன் இருப்பான். அவன் இறங்கட்டுமேன்னு, இவன் இருப்பான். ரெண்டு பேரும் ஒரே பாதையிலே தான் வந்துகிட்டிருப்பாங்க. இது தான் ரெண்டு கெட்டவனுக்கு ஒரே வழின்னு சொல்றது.- எனக் கூறினார், பெரியவர்.இப்பத்தான் அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சது.தன்னை நிதானப்படுத்த, 'சாந்தி' என்று கூறியதற்கான அர்த்தத்தையும் அவரே சொன்னார்: நமக்கு வர்ற இடையூறுகள் மூணு வகை.நாம ஒரு காரியத்தை துவங்கறோம்ன்னு வச்சிக்குங்களேன். அதுக்கு மூணு வகையிலே இடைஞ்சல் வரலாம்.நம்மாலேயே வர்ற இடைஞ்சல், ஒருவகை. இது ஆத்யாத்மிகம். நம்மைத் தவிர, மத்தவங்களாலே வர்ற இடைஞ்சல் ஒருவகை - இது ஆதிபவுதிகம்.இயற்கையாக வரும் இடைஞ்சல், மூணாவது ரகம். அதுக்குப் பேரு - ஆதி தெய்வீகம்.நமக்குப் பிடிச்ச ஒரு நல்ல சினிமா படத்தைப் பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு வெச்சிக்குங்க. அந்த சமயம் பார்த்து நமக்கு வயித்த வலிக்குது. இது நம்மகிட்ட இருந்தே வர்ற இடைஞ்சல். ஆர்வமா அந்தப் படத்தைப் பார்த்துக்கிட்டிருக்கோம். அந்த சமயம் பார்த்து, பக்கத்துல இருக்கறவங்க, காச் மூச்ன்னு பேசிக்கிட்டிருக்காங்க. இது அடுத்தவங்களாலே வர்ற இடைஞ்சல்.அந்த சமயம் பார்த்து இடி - மின்னல் - மழை. மின்சாரம் போயிடுது. இது இயற்கை உண்டு பண்ணுற இடைஞ்சல். இப்படி மூணு வகையாவும் இடைஞ்சல் வரக் கூடாது என்பதற்கு தான் பெரியவங்க, 'சாந்தி, சாந்தி, சாந்தி'ன்னு மூணு தடவை சொல்வாங்க. இந்த மூணு இடைஞ்சல் ஏற்படும் போது, அமைதியா இருக்கணும்ன்னு அர்த்தம். - இப்படி கூறி முடித்தார், பெரியவர். போன காரியம் முடியாமல், தொங்கிய முகத்துடன் திரும்பி வந்தார், லென்ஸ் மாமா.பெரியவர் சாப்பிட ஆரம்பிக்க, நாங்களும் மிளகாய் பொடியில் குளித்திருந்த இட்லியையும், தயிர் சாதத்தையும் சாப்பிட்டு, துாங்க சென்றோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !