உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேகாவல்துறையில், உயர் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற நண்பர் அவர். காவல்துறை பற்றி, அ முதல் ஃ வரை அறிந்தவர். லஞ்சம், ஊழல் என, எந்த தில்லுமுல்லு வேலைக்கும் போகாத நேர்மையான அதிகாரி என, நல்ல பெயர் எடுத்தவர். அவரது பணி காலத்தில், நிறைய குற்றவாளிகளை திருத்தி, நல்வழிக்கு கொண்டு வந்தவர்.இப்படி எத்தனையோ சிறப்புகள் அவருக்கு உண்டு. ஆசிரியரின், 'குட் புக்'கில் இருப்பவர். எனக்கும் நண்பர். நீண்ட நாட்களுக்கு பின் அன்று, அலுவலகம் வந்த அவருடன், பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சின் இடையே, காவல்துறை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி பொதுவான சில விஷயங்களை கூறினார். அது: * 'போலீஸ்' என்ற சொல், 'பொலிஷியா' என்ற கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அந்த வார்த்தைக்கு, அரசாங்கம் என்று பொருள். நம் அரசின் மொழி பெயர்ப்பு இலாகா, அதற்கு, காவல்துறை என்று பெயரிட்டது.* கவுடில்யர் எழுதிய, 'அர்த்த சாஸ்திரம்' நுால், அரசியல் பாடப்புத்தகம் போன்றது. அதில், ஓர் அரசனுக்குரிய கடமைகளும், குதிரை படை, யானை படை, ஒற்றர்கள் பணி போன்றவற்றுக்கான வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, மாக்ஸ்முல்லர் இந்தியாவுக்கு வந்தபோது, சமஸ்கிருதம் பயின்று, தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த இலக்கியங்களை, ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தார். அதில், 'அர்த்த சாஸ்திரமும்' ஒன்று. * இந்தியாவில் ஆட்சி புரிந்த ஹிந்து அரசர்கள் அனைவரும், 'அர்த்த சாஸ்திரம்' மற்றும் 'மனு தர்மம்' ஆகிய இரு நுால்களில் குறிப்பிட்டிருந்த கொள்கைகள் மற்றும் முறைகளை அடிப்படையாக வைத்தே ஆட்சி செய்துள்ளனர். * 'கான்ஸ்டபிள்' என்ற வார்த்தை, 'கம்ஸ்-ஸ்டேபுளி' என்ற, இரு லத்தீன் வார்த்தைகளிலிருந்து தோன்றியது. * முற்காலத்தில், திருடனை, மக்களே தான் துரத்தி சென்று, பிடிக்க வேண்டும். இந்த முறைக்கு, 'ஹீயு அண்டு க்ரை' என்று பெயர். இதே பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார், ஜான் பீல்டிங் என்பவர். அந்த பத்திரிகையில், குற்றவாளிகளின் பெயர் மற்றும் அவர்களுடைய முழு விபரங்களையும் வெளியிட்டார். இன்றைய, 'போலீஸ் கெசட்' என்ற பத்திரிகைக்கு முன்னோடியாக இதை சொல்லலாம். * சி.ஐ.டி., என்பது, 'கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்' என்ற, மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் ஆகும். * போலீஸ் விசாரணையின் போது, குற்றவாளி பொய் சொல்கிறானா என்று அறிய, 'போலிகிராப்' என்ற கருவி பயன்பட்டது. அதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது தான், 'லை டிடெக்டர்' கருவி.* குற்றவாளியை கண்டுபிடிக்க, விரல் ரேகைக்கு முக்கிய பங்குண்டு. இந்த அறிவியல் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு, பிரபலமாவதற்கு முன்பே, அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான, மார்க் ட்வைன், 'புட்டட் ஹெட்டட் வில்சன்' என்ற தலைப்பில், ஒரு நாவலை எழுதினார். அதில், கதாநாயகன், விரல் ரேகை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போல், கதை அமைத்திருந்தார்.சர் ஆர்தர் கானன் என்ற எழுத்தாளர் உருவாக்கிய, ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரமும், கைரேகையை அடிப்படையாக வைத்து, பல குற்றவாளிகளை கண்டுபிடித்ததாக கதை அமைத்திருந்தார். * குற்றவாளிகளை கண்டறிய, முதன் முதலில் நாய்களை பயன்படுத்தியது, ஜெர்மானியர்கள் தான். பொதுவாக, 'அல்சேஷன், ஏர்டேல், பாக்ஸர், டாபர்மேன், லாப்ரடார்' போன்ற, உயர் ஜாதி நாய்களைத் தான் துப்பறியும் பணிக்கு தேர்ந்தெடுப்பர். குறிப்பாக, அபரிமிதமான மோப்ப சக்தி, சுறுசுறுப்பு, எதையும் உன்னிப்பாக கவனிக்கும் குணம், அச்சமின்மை மற்றும் புத்திக்கூர்மை அதிகமுள்ள, 'அல்சேஷன்' வகை நாய்களை அதிகமாக தேர்ந்தெடுப்பர். மேலும், வெண்மை நிறமும், வெண்மையும் கருப்பு புள்ளிகளும் கொண்ட நாய்கள், போலீஸ் வேலைக்கு உபயோகிப்பதில்லை. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போதே, பழக்க ஆரம்பித்து விடுவர். இந்த நாய்களை கவனித்து கொள்வதற்காக, சுமூகமான சுபாவமுள்ள, அனுபவமுள்ள, போலீஸ்காரர்களைத் தான் தேர்ந்தெடுப்பர். இவர்களுக்கு, நாய்களிடம் நண்பர்கள் போல பழக தெரிந்திருக்க வேண்டும். அதட்டி, உருட்டுவது கூடாது; எஜமானன் பாவனையுடனும் நாய்களிடம் பழகக் கூடாது.ஒவ்வொரு நாயையும், குறிப்பிட்ட போலீஸ்காரர் தான் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சியாளரை அடிக்கடி மாற்றக் கூடாது என்பதும், கண்டிப்பான விதிமுறை. * காவல்துறையில், 'போரன்சிக் சயின்ஸ்' தடயவியல் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு லாரி, கார் மீது மோதி, தப்பி சென்றுவிட்டதாக வைத்துக் கொள்வோம். காரில் இருந்தவர் இறந்து விட்டார். அந்த கார், குறிப்பிட்ட நிறமுள்ள வண்டி. விபத்து ஏற்பட்ட பின், அதன் மீது வேறு ஒரு வண்டியின் பெயின்ட் துகள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அதை வைத்து, கார் மீது மோதிய லாரி எது என்று, 'போரன்சிக் சயின்ஸ்' மூலமாக சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.* கொலை குற்றங்களில், விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா, கழுத்தை நெரித்து கொன்றனரா என்பதை எல்லாம், 'போஸ்ட்மார்டம்' செய்து கண்டுபிடிக்க முடியும். ஒருவர் இறந்து, எத்தனை மணி நேரம், எத்தனை நாள் என்று கூட, போஸ்ட்மார்ட்டத்தில் தெரிந்து விடும்.சமீபகாலமாக, மொபைல் போன், பல குற்றவாளிகளை நெருங்க உதவுகிறது. 'சிசிடிவி' கேமரா, 'டிரோன்' கேமரா என, பல நவீன தொழில்நுட்ப வசதிகள் திருட்டு, கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு, எமனாக வந்து விட்டது. போலீஸ் துறையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பிறகு நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்.- என்று கூறி முடித்தார், காவல்துறை நண்பர். 'எத்தனை வசதி வந்து என்ன பிரயோஜனம். ஒரு காலத்தில், ஸ்காட்லாந்து போலீசுக்கு சமமாக இருந்தோம். இன்று...' என, அலுத்துக் கொண்டார், லென்ஸ் மாமா. ஒரு ஊரில் எல்லாருக்கும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார், பெரியவர் ஒருவர். பாவம் செய்கிறவர்களுக்கும், பரிகாரம் சொல்வார். அவரிடம் ஒருவன் வந்து, 'ஐயா... நான், ஒரு பெண்ணை, அவளின் அப்பாவுக்குத் தெரியாமல் அழைத்து போய் கல்யாணம் செய்து கொண்டேன். நான் செய்தது பாவம் எனில், அதற்கு பரிகாரம் என்ன?' என, கேட்டான்.'இது, பாவம் இல்லை. அந்த பெண்ணின் அப்பாவை இங்கே அழைத்து வா. பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன்...' என்றார், பெரியவர்.'அதிலும் ஒரு பிரச்னை இருக்கு...' என்றான்.'என்ன பிரச்னை...' என்றார், பெரியவர்.'அந்த அப்பாவே நீங்கதானே...' என்றான்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !