அந்துமணி பா.கே.ப.,
பா - கே மும்பையிலிருந்து வெளியாகும், ஆங்கில நாளிதழ் ஒன்றின் தலைமை செய்தியாளர் அவர்; எனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் நல்ல நண்பர். சென்னையில், முக்கியமான அரசியல் புள்ளி ஒருவரை பேட்டி எடுக்க, சமீபத்தில் சென்னை வந்திருந்தார். மதியம், பிரபல ஹோட்டல் ஒன்றில் சந்திக்கலாம் என, தகவல் அனுப்பியிருந்தார். அவர் சொன்ன நேரத்துக்கு, குறிப்பிட்ட ஹோட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். ஹோட்டலில் ஏற்கனவே, 'ரிசர்வ்' செய்திருந்த இடத்தில் அமர்ந்திருந்த நண்பர், எங்களைப் பார்த்ததும் உற்சாகமாக கையசைத்தவாறு எழுந்து வந்து, இருவரையும் கட்டிப்பிடித்து கொண்டார். 'ரொம்ப நாளாச்சுபா நாம சந்தித்து...' என, உருகினார். நாற்காலியை பின்னுக்கு நகர்த்தி, நாங்கள் அமர உதவினார். அவரது பண்பை ரசித்தபடி, நலம் விசாரித்தேன். 'டிரிம் ஆக இருப்பீரே... சற்று, 'வெயிட்' போட்டு விட்டிருக்கிறீர்கள்! உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டீர்களா?' என்றேன். 'வேலை அதிகம், அதைவிட சோம்பலும் சேர்ந்து கொண்டது...' என்றார். பேரரை அழைத்து, 'உங்களுக்கு தேவையானதை, 'ஆர்டர்' செய்யுங்கள். இன்று என்னோட ட்ரீட்...' என்றதும், மாமா முந்திக்கொண்டு, 'அங்கிள் ஜானி'யுடன், பறப்பன, நடப்பன, நீந்துவன என, வகைக்கு ஒன்றாக, 'ஆர்டர்' செய்தார். வெஜ் சூப், ஸ்டப்ட் பராத்தா மற்றும் கடாய் பனீர் சொன்னேன், நான். நண்பர், வெறும், பட்டர் நான் மற்றும் வெஜ் கறி, 'ஆர்டர்' செய்ய, 'என்னாச்சு... சிம்பிளா முடிச்சிட்டீங்க?' என்றேன். 'வயசாகிட்டு வருது. அது தவிர, 'வெயிட்'டும் போட்டுடறது. அதான்...' என்றவர், 'அதுசரி... சைவ உணவு சிறந்ததா, அசைவ உணவு சிறந்ததா? நான் ரெண்டையுமே சாப்பிடுற ஆளு தான். சில பேரைக் கேட்டா, அசைவம் சாப்பிடுங்க அது, உடலுக்கு ஊக்கத்தை கொடுக்கும்ங்கிறாங்க. நான் எதைக் கடைப்பிடிக்கலாம்ன்னு தெளிவா சொல்லிடுங்க...' என்றார். 'உங்களால முடியும்ன்னா அசைவ உணவை விட்டுடலாம். சைவ உணவையே எடுத்துக்கலாம். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இரண்டுலேயும் உடலுக்கு ஊக்கத்தை தரக்கூடிய சத்து இருக்குது. இன்னும் சொல்லப் போனா, அசைவ உணவுல இருந்து நிறைய சத்துக்கள், அதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஊக்கத்தை கொடுத்து விடும். 'ஆனா, ரொம்ப முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னன்னா, உடம்புல இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குறது, எந்த வகை உணவு என்பது தான்! 'இரண்டுலேயும் சத்துக்கள் இருந்தாலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கக்கூடிய சக்தி, சைவ உணவுக்கு உண்டுன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சைவ, அசைவ உணவு வகைகளை பத்தி ஆராய்ச்சி பண்ணியுள்ளார், அமெரிக்க நிபுணர் ஒருத்தர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர், ஒரு கருத்தை கூறியுள்ளார். 'அதாவது, அவர், தன் கையில் கத்தியாலே கீறி, காயத்தை ஏற்படுத்திக்கிட்டார். சில நாட்கள் அசைவ உணவை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். கூடவே, காயத்துக்கும் சிகிச்சை எடுத்துக்கிட்டார். என்னதான் சிகிச்சை எடுத்துக்கிட்டாலும், அசைவ உணவு சாப்பிட்டு வந்ததால, காயம் ஆறாம பெரிசாயிடுச்சு. 'அதற்கு அப்புறம், சிகிச்சையும் எடுத்துக்கிட்டு, சைவ உணவுக்கு மாறினாராம். சைவ உணவு சாப்பிட ஆரம்பிச்சவுடனேயே, காயம் கொஞ்சம் கொஞ்சமா ஆற ஆரம்பிச்சுடுச்சாம். காயம்பட்ட இடத்தில தழும்பு கூட இல்லாம போயுள்ளது. 'அப்பத்தான் அவரு ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு உணவு வகைகளுமே உடலுக்கு ஊக்கம் கொடுக்குறதா இருந்தாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிற சக்தி, சைவ உணவுக்கு தான் உண்டுன்னு கண்டுபிடிச்சு, ஒரு அறிக்கை வெளியிட்டார். அதற்கு பிறகு தான் சைவ உணவுக்கு ஆதரவான பிரசாரமெல்லாம் பெருக ஆரம்பித்தது. 'வெஜிடேரியன் கான்பிரன்ஸ் என்ற, சைவ உணவு மேம்பாட்டை வலியுறுத்தும் மாநாடுகள் எல்லாம் நடத்த ஆரம்பித்தனர். அப்புறம் நடைமுறையில பார்த்தால், ஓர் உண்மை புலப்படும். 'தாவர உணவுகளை உண்ணுகிற சாகபட்சிணிகள்ன்னு சொல்றோமே, மாடு, ஆடு, யானை மற்றும் ஒட்டகம் மாதிரியான விலங்குகளெல்லாம், அமைதியா வாழும்; அதேவேளையில், சோர்வடையாம தொடர்ந்து உழைச்சிக்கிட்டே இருக்கும். இந்த வல்லமை அவற்றுக்கு உண்டு. 'புல்லைத் தின்னும் குதிரையின் சக்தியை அடிப்படையா வைச்சுத்தானே எந்திர சக்தி - 'ஹார்ஸ் பவர்' அப்படின்னு சொல்றோம். 'சைவ உணவு, நோயை குணப்படுத்துறது மட்டுமில்லாம, உடல்திறன் மற்றும் செயல் திறன் ஆகியவற்றையும் அதிகரிக்குதாம். அறிவாற்றல் பெருகவும் உதவி செய்யுதாம். 'இதெல்லாம், 'டயட்ஷியன்' ஒருவர் கூறியது. உணவு கட்டுப்பாடு அவசியம் தான். அதே சமயம், எல்லா சத்துகளும் கிடைக்கும் வகையில் இருந்தால், நுாறு வயசு வரை ஆரோக்கியமாக இருக்கலாம்...' என்றேன். 'மணி... வர வர நீயும், 'அட்வைஸ்' திலகமா மாறிட்டு வர்ற. பிடித்ததை சாப்பிட்டு, சந்தோஷமா இருக்கிறதை விட்டு, நுாறு வயசு வரை இருந்து, என்ன சாதிக்க போகிறோம்...' என, குழறியபடி கூறினார், மாமா,. இவரிடம் இனி பேசி பயனில்லை என, நினைத்து, லென்ஸ் மாமாவை காரில் துாக்கிப் போட்டு, விமான நிலையம் சென்று, நண்பரை மும்பைக்கு வழி அனுப்பி வைத்தேன். மாமாவை அவர் வீட்டில் இறக்கிவிட்டு, மாமி கண்ணில் படாமல் கிளம்பி, வீடு போய் சேர்ந்தேன். ப பிரெஞ்சுக்காரர்கள், பாண்டிச்சேரி பகுதியை ஆண்டபோது, பிரெஞ்சு அரசுக்கு சொந்தமான சில நிறுவனங்கள் பாண்டிச்சேரியில் இருந்தது. அதை கவனிக்கும் பொறுப்பை ஒரு அதிகாரியிடம் கொடுத்து இருந்தனர். அந்த அதிகாரிக்கு தனிப்பட்ட முறையிலும், சில நிறுவனங்கள் உண்டு. ஆனால், மொத்தத்தில் பார்த்தால், அவருடைய தனிப்பட்ட நிறுவனங்களில் நல்ல லாபம் வந்து கொண்டே இருந்தது. அரசாங்கம் சார்பில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்களில் அவ்வளவு லாபம் கிடைக்கவில்லை. இதுபற்றி, அவரிடம் அரசு சார்பில் கேள்வி எழுப்பினர்... 'அரசு நிறுவனம் நஷ்டத்தில் ஓடுது. ஆனால், உங்கள் நிறுவனங்களெல்லாம் லாபத்தில் ஓடுதே... என்ன காரணம்?' என்றனர். அதற்கு, 'என்னுடைய நிறுவனங்களில் ஏற்படுற பிரச்னைகளுக்கு நானே முடிவெடுக்கிறேன். ஆனால், அரசாங்க நிறுவனத்தில் அதற்கெல்லாம் அரசாங்கமே கட்டளை போடுது. நான் அதுக்கு அடிபணியணும். அதனால், என்னால் சொந்த முடிவு எடுக்க முடியலை...' என்றார். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!