அந்துமணி பதில்கள்!
பி.ஆர்.பாண்டி, மதுரை: தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு தினமும் அசைவ உணவு வழங்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளதாமே... முதலில், மனிதர்களுக்கு உணவு வழங்கும் திட்டங்களை வகுக்க வேண்டும். நாய்களுக்கு காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும்; தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்ய வேண்டும். அதைவிட்டு, 2.8 கோடி ரூபாயில் அபத்தமான திட்டத்தை தீட்டி இருக்கிறது, கர்நாடக அரசு! ********** * மை.சபானா, துாத்துக்குடி: 'பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வகுப்புகளை, மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்கக் கூடாது...' என, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தி உள்ளாரே... சரியாக வலியுறுத்தி உள்ளார். இன்றைய குழந்தைகள், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில், மொபைல் போனிலேயே மூழ்கி விடுகின்றனர். அவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி, மிகவும் அவசியம். இதை எல்லா பள்ளிகளும் உணர வேண்டும்! *********** கு.கணேசன், செங்கல்பட்டு: அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் ஊடகங்கள் மீது, ஆட்சியாளர்கள் கோபப்படுவதும், எரிச்சல் படுவதும் சரியா? உண்மையை உரைக்கத்தான் ஊடகங்கள் உள்ளன. தங்களை எப்போதும் ஊடகங்கள் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர், ஆட்சியாளர்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும், சரி செய்யும் நேர்மையையும், ஆட்சியாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்! ******எஸ்.மங்களம், நெல்லிக்குப்பம்: காசு கொடுத்து கூட்டப்படும் அரசியல் கூட்டம் நிலை எப்படி உள்ளது?எந்த கட்சி மாநாடு நடத்தினாலும், கூட்டத்திற்கு பஞ்சம் ஏற்படுவதில்லையே... எப்படி? இன்று ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களே, நாளை வேறு கட்சிக் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றனர்! ஆனால், அந்த கூட்டம், ஓட்டாக மாறுமா என்பது தான், புரியாத புதிர்! ******அ.செந்தில்குமார், சூலுார்: 'தமிழகத்தில் இலவசங்களை நிறுத்துவோம்; மது விலக்கை கொண்டு வருவோம்...' என, எந்த கட்சியாவது, தேர்தல் வாக்குறுதி கொடுக்குமா? வாய்ப்பே இல்லை. 'இலவசம்' என்ற அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்தி வெற்றி கண்டவர்கள்; தமிழக மக்களுக்கு மதுவின் போதையை பெருவாரியாகப் பழக்கி, அதன் மூலம் ஓட்டு அள்ளியவர்கள், உங்கள் ஆசையை நிறைவேற்றுவர் என, இன்னுமா எதிர்பார்க்கிறீர்கள், செந்தில்குமார்! *******கே.சக்கரபாணி, சென்னை: ஆடி மாதத்தில் பெரும்பாலான கடைகளில், தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனை செய்யப்படுவதன் ரகசியம் என்ன? ஆடி மாதம் முடிந்ததும், பல பண்டிகைகள் துவங்கும். பண்டிகைக்கு, புது துணிமணிகள், வியாபாரிகளால் வரவழைக்கப்படும். அதனால், முந்தைய ஆண்டின் மிச்சம் மீதியை, தள்ளுபடியில் விற்பர். அது தான் இப்போது, 'ஆடித் தள்ளுபடி' என்றாகி விட்டது!******எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்: மீண்டும் மக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வருக்கு, அதை தீர்த்து வைக்கக் கூடிய கால அவகாசம் உள்ளதா? ஆட்சி அமைப்பதற்கு முன், பெட்டி வைத்து வாங்கப்பட்ட மனுக்கள், பெட்டியிலேயே முடங்கி விட்டன. அதே கதி தான், தற்போது பெறப்படும் மனுக்களுக்கும் ஏற்படும். '45 நாட்களில், இவ்வளவு மனுக்களுக்கு தீர்வு கண்டோம்...' என, கணக்குக்காக அறிவிப்பெல்லாம் வெளியாகும். ஆனால், அதற்குள், அடுத்த தேர்தலே வந்து விடும்! *********என்.ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை: 30 புது பேன்ட் - சட்டைகளை உபயோகிக்க ஆரம்பித்து விட்டீர்களா? போன ஆண்டு ஆடைகளை யார் யாருக்குக் கொடுத்தீர்கள்? ஓ... எஸ்! புது ஆடைகளை அணிய ஆரம்பித்து விட்டேன்! நண்பர்களுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்து விட்டேன்; அனைவருக்கும் மிக்க சந்தோஷம்!