அந்துமணி பதில்கள்!
கே.பாஸ்கரன், தேனி: ஞாயிறு அன்று, 'தினமலர்' பத்திரிகையையும், 'வாரமலர்' இதழையும் படிக்கவில்லை என்றால், தலை வெடித்து விடும் என்கிறாரே, என் அப்பா. என்ன மாயம் அது? உங்கள் அப்பாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். அவரை போன்ற லட்சக்கணக்கான வாசகர்களால் தான், 'வாரமலர், சிறுவர்மலர்' போன்ற இதழ்களையும், வெற்றிகரமாக நடத்த முடிகிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!*********ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: மூன்று தேசிய விருதுகளை வென்ற, பார்க்கிங் பட குழுவினர், கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற பின், நடிகர் ஹரிஷ் கல்யாண், தன் பதிவில், 'கமலுடனான சந்திப்பு உரையாடலா அல்லது யுனிவர்சிட்டி பாடமா என, தெரியவில்லை...' என, குழப்பமாக சொல்லி இருப்பது பற்றி... ஒருமுறை சந்தித்து பேசியதிலேயே, நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்படி குழம்பி போய் விட்டார் என்றால், ராஜ்யசபாவில் கமலஹாசன் பேசுவதை கேட்டு, மற்ற எம்.பி.,கள் எவ்வாறு திண்டாடுவர் என, யோசித்து பாருங்கள்! *******தே.சந்தியா, விருதுநகர்: 'தி.மு.க., ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை...' என, பழனிசாமி விமர்சித்துள்ளாரே... இவரது அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும், ஊழலற்ற ஆட்சியையா கொடுத்தனர்? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்! ********கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், 2,300 பேர் குற்றவாளிகளாமே... அனைவரையும் விசாரித்து, வழக்கை முடிப்பது, முடிகிற காரியமா? வழக்கை இழுத்தடிக்கத்தானே இந்த ஏற்பாடு. எப்படி முடிக்க விடுவர். கடைசியில், 2,300 பேரில், ஒரு, 'பலி ஆடு' சிக்கும். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானாலும் வியப்பில்லை! ******** இ.ராஜு நரசிம்மன், சென்னை: தனி நபர் வருமானத்தில் தமிழ்நாடு, இரண்டாம் இடம் வகிப்பதாக, தமிழக அரசு பெருமிதம் கொள்வது, உண்மையான புள்ளி விபரமா? தனி மனிதர்களின் விடாமுயற்சியையும், உழைப்பையும் தான், இந்த புள்ளி விபரம் எடுத்துகாட்டுகிறது. அரசு பெருமிதம் கொள்ள இதில் எந்தவொரு பங்களிப்பும் இல்லை! ******** கோவி.திருநாயகம், கடலுார்: இன்றைய பரபரப்பு அரசியலில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் பெயரும், செய்தியும் இடம்பெறும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்கிறதா என்ன? 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவனும் இல்லை; எனக்கென்று ஒரு சுயமரியாதை உள்ளது...' என, பல 'உருட்டு'களை அவரும் கூறி பார்க்கிறார். யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. தி.மு.க.,விடம் பெற வேண்டியதை பெற்று, மேலும் மேலும், 'உருட்டு'வார்!********வி.எஸ்.மஞ்ஜேஷ்வர், சென்னை: தொப்பை இல்லாத, உ.பா., பழக்கம் இல்லாத விண்ணப்பதாரர்களை, போலீஸ் பணிக்கு தகுதியுள்ளவர்கள் என, சட்டம் இயற்றினால் என்ன? காவல்துறை பணியில் சேரும் இளைஞர்கள், வேலைக்கு தேர்வாகும் சமயத்தில், நல்ல உடற்கட்டுடனும், உற்சாகபான பழக்கம் இல்லாதவர்களாகவும் தான் இருக்கின்றனர். பிறகு பலவிதமான, 'கவனிப்பு'களால், எல்லா விதத்திலும், 'போஷாக்'காக மாறிவிடுகின்றனர். அவர்களின் உடற்தகுதியை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய வேண்டும்! ********எம்.ராஜேந்திரன், லால்குடி, திருச்சி: சமையல் படிப்புகளில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்? புராண காலத்தில் இருந்தே ஆண்களுக்கு சமையலில் தேர்ச்சி உண்டு. நளன் ஒரு உதாரணம். இன்றும் பெரும்பாலான ஹோட்டல்களிலும், கல்யாணங்களிலும், பொது விருந்துகளிலும் ஆண்கள் தானே சமைக்கின்றனர். அதனால், சமையல் கலை படிப்புகளிலும் ஆர்வமுடன் படிக்கின்றனர், ஆண்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது!