உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

வி.வைத்தியநாதன், சென்னை: கிராமத்தில் இருந்தபடியே பலர், 'யூ டியூப்' வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக செய்திகள் படித்தேன். உண்மையா? உண்மை தான்! இளைஞர்கள் முதல் பாட்டிகள் வரை அனைவரும், தங்களுக்குத் தெரிந்த ஒரு கலையை, காணொளியாக எடுத்து, தங்கள் ஊர் வழக்கு மொழியிலேயே பேசி, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பிரபலமாகி, லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்! க.நடேஷ், நெல்லை: கன்னட நடிகர், அனந்த் நாக், தாதா சாஹேப் பால்கே விருது பெற்றிருக்கிறாரே... இந்திய திரையுலகின் மிக உயரிய விருது இது. 78 வயது நிரம்பிய அனந்த் நாக், பல மொழிகளில் நல்ல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து, பொன்விழா படங்களைக் கொடுத்தவர்; அதனால், இந்த அங்கீகாரம்! மூ.வள்ளி, கோவை: 'அரசு ஊழியர்கள், பணி நேரத்தில், 'சீட்'டில் இல்லையெனில், சம்பளம், 'கட்' செய்யப்படும்' என, பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதே...இதைப் படித்தவுடன், 'உலகெங்கும் கொண்டு வரப்பட வேண்டிய சட்டம் இது' என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கும் தானே, வள்ளி? ஏ.ருக்குமணி, கோவை: 'தாங்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் எப்படி பேசுகின்றனர் என்பது தங்களுக்கு தெரிய வேண்டும் என, மக்கள், என்னிடம் கேட்கின்றனர். அதனால், சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதில் நான் அக்கறையாக உள்ளேன்...' என, சபாநாயகர் கூறியிருக்கிறாரே... மிகச் சரியான முடிவு! தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி, சட்டசபையில் சரியாக நடந்து கொள்கிறாரா என்பதை அறிவது, ஜனநாயக உரிமை அல்லவா! இ த்தனை ஆண்டுகாலமாக, அப்படி நடந்து கொள்ளாத எம்.எல்.ஏ.,க்களின் கொட்டங்கள் இனி அடங்கும்! நா.கோபிநாத், திருப்பூர்: சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியைப் பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, பாரதிதாசன், தனக்கு ஊதியம் வேண்டாம் என, அறிவித்துள்ளாரே... சும்மா இல்லை... மாதம், 3 லட்சம் ரூபாய்! அந்தத் தொகையை, கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கே பயன்படுத்தக் கூறியுள்ளார்! * வி.பரமசிவம், செங்கல்பட்டு: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள அனைவருக்கும், பல கடுமையான சிக்கன நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளதாமே. .. பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிக்க ஏராளமான பணத்தைச் செலவழித்து, திவாலாகி விட்டது; மக்களின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கவே இல்லை. நம்மிடமிருந்து பிரிந்த நாள் முதல், மக்களை அடிமைப்படுத்த, பழக்கப்படுத்துவதன் மற்றொரு முயற்சி இது! * எம்.ராஜேந்திரன், லால்குடி: பயணியர் நிழற்குடைகள் அனைத்திலும், 'சோலார் பேனல்'களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாமே... நல்ல ஐடியா தான்! சென்னையில் சில இடங்களில், 'ஏசி' நிழற்குடைகள் கூட அமைக்கப்பட்டன. ஆனால், சமூக விரோதிகள் அவற்றை, 'பதம்' பார்த்ததால், திட்டம் தோல்வி; 'சோலார் பேனல்'கள் அமைத்தால், அவற்றை முறையாக கண்காணித்து, பராமரிக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !