கேப்டன் விஜயகாந்த்! (24)
நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க முடியாமல் திண்டாடினார், அப்போதைய சங்க தலைவரான, விஜயகாந்த். இதுபற்றி அறிந்தார் தயாரிப்பாளர், காஜா மொய்தீன். 'என்ன கேப்டன் இவ்வளவு பேரு இருக்கீங்க. ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கடன் தீர்ந்துடுமே...' என, புரியாமல் கேட்டார், காஜா மொய்தீன். 'யாரும் தரல சார்...' என்று சொன்ன போது, விஜயகாந்தின் குரலில் அவ்வளவு ஆற்றாமை. வாஞ்சிநாதன் படத்துக்காக விஜயகாந்துடன் பழகிய குறுகிய காலத்தில், காஜா மொய்தீனுக்கு அவர் மீது தனி பாசமும், அன்பு கலந்த மரியாதையும் அதிகரித்து கொண்டே வந்தது. இவர் நமக்கானவர். இவருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல் உணர்வு கூடிக்கொண்டே வந்தது. அதன் தாக்கத்தில் சற்றும் யோசிக்காமல் தன் கருத்தை சொன்னார். 'எனக்கொரு, 'ஸ்டார் நைட்' பண்ணிக் கொடுங்க சார்...' என்றார், காஜா மொய்தீன். நிஜத்தில், அந்த நொடி வரை, 'ஸ்டார் நைட்' என்றால் என்னவென்றே விஜயகாந்துக்கு தெரியாது. அதுவும் ஒரு வியாபாரம். அதிலும் லாபம் நிறைய வரும் என்ற நினைப்பில் சொல்லியிருக்கலாம், காஜா மொய்தீன். 'உங்களால முடியுமா?' என்று கேட்டார், விஜி. 'கண்டிப்பா முடியும் சார். வாஞ்சிநாதன் படத்தை வித்த காசு, 2 கோடி ரூபாய் இப்ப என்கிட்ட இருக்கு. அதை எடுத்துட்டுப் போய் மொதல்ல பேங்குல கட்டுங்க. எனக்கு துபாய், சிங்கப்பூர்லாம் நிறைய, 'கான்டாக்ட்' உண்டு; நண்பர்கள் ஏராளமா இருக்காங்க, சார். எல்லாத்துக்கும் மேல உங்க படத்தை எடுத்திட்டு இருக்கேன். பணம் எவ்வளவு கேட்டாலும் வந்துகிட்டே இருக்கு...' என, நம்பிக்கையாக கூறினார், மொய்தீன். காஜா மொய்தீனின் துணையோடு, நட்சத்திர இரவுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துரிதமடைந்தன. மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில், 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான முழு உரிமையையும், 'சன் டிவி' எடுத்து கொண்டது. அதற்காக அந்நிறுவனம் வழங்கிய மிகப்பெரிய தொகை உற்சாகத்தை ஏற்படுத்தியது. வி ஜயகாந்த்-பிரேமலதா திருமணத்துக்கு பின், நண்பர், ராவுத்தருடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது. படத்தயாரிப்பு மட்டுமல்லாமல், விஜயகாந்தின் குடும்ப நிர்வாகமும், ராவுத்தர் பொறுப்பில் இருந்து மாறியது. சம்சார பந்தத்தில், விஜயகாந்த் முழு மூச்சுடன் மூழ்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டார் நண்பர், ராவுத்தர். மெல்ல மெல்ல அவர் தன் எல்லைக்குள் நின்று வாழப் பழகத் துவங்கினார். தோழமைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாமல் ஒரே நேரத்தில், விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும், ராவுத்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி, ராவுத்தரின் வெகு நாளைய கனவுக்கு முழு வடிவம் கொடுத்தார், விஜயகாந்த். விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்பதில், எப்போதும், ராவுத்தருக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அரசியல் என்ற சொல் அரும்பும்போதே அங்கே அவரது குடும்பத்தின் கருத்துக்கும் அவர் செவிசாய்க்க வேண்டியிருந்தது. அவர்கள் கருத்தை, விஜயகாந்தும் மனமார வரவேற்று மேடைகளில் பேசினார். இரட்டை இலை போல் ஒன்றாக இருந்த, ராவுத்தரையும் - விஜயகாந்தையும், இரட்டை இலையே தனித்தனியாக பிரித்து மேய்ந்தது. இப்ராஹிம் ராவுத்தர் அ.தி.மு.க.,வில் இணைந்தார் என்ற செய்தி எல்லாருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ்காரராக அதுவரையில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர், ராவுத்தர். கருப்பையா மூப்பனார் இல்லாமல், புதுப்பட பூஜைகளில் கற்பூர ஆரத்தி கூட காட்டமாட்டார். ஆனால், அம்மாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, விஜயகாந்துக்கு அந்நியன் ஆனார், ராவுத்தர். விஜயகாந்தின் மூச்சுக்காற்று படாமல், ராவுத்தரால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. கடந்த, 2015ல், தன், 63வது வயதில் தன் மூச்சுக்காற்றை நிறுத்தி கொண்டார். வி ஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில், ரசிகர் மன்றங்கள் ரகளையாகவே இயங்கின. தன் புதிய படத்துக்கு, ராஜ்ஜியம் என, பெயர் வைத்து, மேலும் உசுப்பேற்றினார். தன் ராஜ்ஜியத்தில் எடுத்த எடுப்பில், இயக்க கொடியை மங்கலகரமாக காட்டி மேலும் மகிழ்ச்சியில் மிதக்க விட்டார், விஜயகாந்த். அப்படிப்பட்டதோர் அமுதமான வேளையில் வெளியானது, ரமணா படம். அரசோ அல்லது தனியாரோ, நீங்கள் எந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாலும் உங்களுக்கு, ரமணா படத்தின் நினைவு வராமலிருக்காது. அதற்கு முழு காரணம், விஜயகாந்தின் அற்புதமான பாத்திர பங்களிப்பு! தொன்று தொட்டு தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் பகல் கொள்ளை, மோசடிகளை, பளிச்சென்று படம் பிடித்தது, ரமணா திரைப்படம். தமிழ் திரைக்கு ஏன், இந்திய சினிமாவுக்கே கூட, முற்றிலும் புதிய அனுபவம் தான். அடிமட்ட மற்றும் நடுத்தர மக்களின் ஆழ்மனத்துயரை, அப்பட்டமாக எடுத்துக் காட்டியது, ரமணா திரைப்படம். எந்த மாதிரியும் இல்லாத, புதுமையான ஒரு வேடத்தை, விஜயகாந்துக்காக சிருஷ்டித்தார் இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ். அதுவரை தமிழ்த்திரை காணாத, ஒரு புத்தம் புது திரைக்கதையை பின்னினார். முதல் புள்ளியிலேயே வித்தியாசமான, விஜயகாந்த் படமாக அது இருக்கும் என்று தோன்றியது. கல்லுாரி பேராசிரியராக, விஜயகாந்த் அதுவரையில் அவர் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. வெள்ளித்திரையில் கால் மணிக்கொரு முறை, விரோதிகளை சுளுக்கெடுக்கிறவர், விஜயகாந்த். கேப்டன் வகுப்பெடுப்பதாக காட்டினால் எடுபடாது. கேலிக்கு இடமாகி விடும். இளைய தலைமுறையின் துணையோடு, சமூக அவலங்களை ஒழிக்கும் பேராசானாக அவரைக் காட்டினால், வசூல் அள்ளும் என்று புரிந்தது. * நாயகன் குழந்தைகளின் தகப்பனாக இருக்க கூடாது. * புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது. * மிக முக்கியமாக, கிளைமாக்ஸில் மரணம் அடையவே கூடாது ஆகிய நிபந்தனைகள், விஜயகாந்துக்கு கதை சொல்லப் போகிறவர்களுக்கு விதிக்கப்பட்டன. முருகதாசுக்கு அதுவே பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. காரணம் அவரது கதையில், விஜயகாந்த் வாலிபத்தைக் கடந்த, மனைவியை பறிகொடுத்த பேராசிரியராக, வலம் வர வேண்டும். நாயகனுக்கு, குழந்தைகள் உண்டு. கிளைமாக்ஸில் மறக்காமல் செத்து மடிய வேண்டும். இதற்கு சம்மதிக்க வைக்க என்ன செய்தார், இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ். - அடுத்த வாரம் பார்ப்போம்! - பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073