உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம் - இருக்கும் வரையில்!

அலுவலகம் ஒன்றில், மிகவும் நேர்மையானவர், தலைமை அதிகாரி. அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். மேஜை, நாற்காலி, குப்பைக் கூடை எல்லாம் அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பார். நாற்காலியில், ஒரு கால் உடைந்தாலும், அதை உடனே, பழுது பார்த்து சரி செய்து விடுவார். அதாவது, அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும், தன்னுடையதாக நினைத்து பாதுகாத்து வந்தார். திடீரென ஒருநாள், அந்த அதிகாரிக்கு பணி மாற்றல் உத்தரவு வந்தது. உடனே, தன் பெட்டி, படுக்கைகளுடன் புறப்பட்டார். அப்போது, அந்த அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலியை பற்றி கவலைப்படவில்லை, அவர். அந்த அலுவலகத்தில் இருந்தவரை, அங்கே இருந்த எல்லா பொருட்களுக்கும் அவரே பொறுப்பு. எல்லாவற்றையும் தன்னுடையதாக பாவித்து, அக்கறையாக கவனித்தார். இதை, 'மாரகம்' என்கின்றனர். அவரை வேறு ஊருக்கு மாற்றிய உடனே, இது எல்லாம் தன்னுடையதில்லை. சமுதாயத்தைச் சேர்ந்தது என்ற எண்ணம் வந்துவிட்டது. தான் வெறும், பொறுப்பாளி மட்டுமே என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். இதுவும், 'மாரகம்' தான். ஆனால், 'தாரகம்' என்பது வேறு. அதே அலுவலர் மாற்றலாகிப் போகும் போது, வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் லாரியில் ஏற்றினார். பழைய செருப்பு, துடைப்பம் எதையும் விட்டு வைக்கவில்லை. என்ன காரணம்? எல்லாம் என்னுடையது என்ற எண்ணம்; தாரகம். இந்த, தாரகம், மாரகம் இரண்டிற்கும் இடையில தான், மனித வாழ்க்கை ஊஞ்சலாடுகிறது என்பதே, பெரியவர்களின் கருத்து. எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கலாம். ஆனால், எதுவும் என்னுடையது இல்லை என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.இருக்கிறதெல்லாம் இயற்கை கொடுத்திருக்கும் பிரசாதம். ஒரு மனிதனுக்கு எது நிரந்தரம், எதுவரை இருக்கப் போகிறான் என்பது, யாருக்கும் தெரியாது. அதனால், வாழும் வரை கடமையாற்றிக் கொண்டே காலம் கழிக்க வேண்டும். எல்லாம் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்ற பாவனையோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !