ஞானானந்தம் - குரு பக்தி இருந்தால்....
காட்டில், ஒரு சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் தங்கள் நட்பிற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தன. 'நீ தான், என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்...' என்றது, சிங்கம். 'உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்...' என சத்தியம் செய்தது, மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது, ஒரு சிறிய மான் குட்டி. இந்நிலையில், நான்கு நாட்களாக சிங்கத்தை காணாமல், பல இடங்களில் தேடி வந்தது, மான். சிஷ்யனான குட்டி மான் ஓடிவந்து, 'உங்கள் நண்பர், ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால், அந்த வலையை அறுக்க முடியவில்லை. உடனே வாருங்கள்...' என அழைக்க, ஒப்பந்தப்படி சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது, மான்.பலவீனமான குரலில், 'ஒரு வேடன் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்டு, நான்கு நாட்களாக தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான்; அதற்குள் என்னை காப்பாற்று...' என்றது, சிங்கம். தன் வாயால், வலையை மெதுவாக கடித்து அறுக்க ஆரம்பித்தது, மான். 'இந்த வலையை நீங்கள் வேகமாக ஓர் இழு இழுத்தால் போதும்; ஆனால், மெதுவாக கடிக்கிறீர்களே... வேகமாக இழுங்கள்...' என்றது, குட்டி மான். சிரிப்பையே பதிலாக தந்து, மீண்டும் மெதுவாக வலையை கடித்தது, பெரிய மான். 'சீக்கிரமாக காப்பாற்று...' என கெஞ்சியது, சிங்கம். 'இப்படி மெதுவாக வலையை கடிக்கிறீர்களே... இது, நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா... நான், உங்களை போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து, சிங்கத்தை காப்பாற்றி இருப்பேன்...' என்றது, குட்டி மான். இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது, பெரிய மான்.சற்று துாரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஓர் இழு இழுத்தது, மான். வலை அறுந்து, சிங்கம் ஒருபுறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின.'வேடனை பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்தீர்களே... அதை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன்; ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்?' என கோபப்பட்டது, குட்டி மான். 'குழந்தாய்... வேகமாக ஒரே தடவை இழுத்து, என்னால் வலையை அறுத்திருக்க முடியும். ஆனால், உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாக பட்டினி. 'என்னை மட்டும் சாப்பிட மாட்டேன்...' என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல.'வெளியே வந்த வேகத்தில் உன்னை சாப்பிட்டிருக்கும். அதனால் தான், வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்...' எனக் கூறி புன்னகைத்தது, குருவான பெரிய மான்.நாம் அனைவருமே அந்த குட்டி மானைப் போல தான், அவசரமாக முடிவெடுக்கிறோம்; நிதானிப்பதில்லை. தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம். இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது, குருவானவரே நம்மை காப்பாற்றும் வல்லவர். குரு பக்தியே திருவருளை நமக்கு கூட்டித் தரும். இதனால் தான், சிவபெருமானையே குரு என்று குறிப்பிடுகிறார், திருமூலர்! - பி.என்.பி.,