உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: இறை நாமம் மட்டுமே காப்பாற்றும்!

சாதகர் என்பவர், இறைவனை அறிந்துணர விரும்பினார். அவர், ஒரு சாதுவிடம் சென்று, 'இறைவனை அறிந்துணர நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு சாது, 'இறைவனை எப்பொழுதும் நினைத்து, அவர் நாமத்தை தொடர்ந்து சொல்ல வேண்டும்...' என்றார். இந்த எளிய போதனை, அந்த இளம் சாதகருக்குப் பிடிக்கவில்லை. இறைவனது நாமத்தின் சக்தியை அற்பமாக நினைத்தார். 'சமஸ்கிருதம் படித்து அதனுடன் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தால் தான் இறைவனை அறிந்துணர முடியும்...' என, எண்ணினார். எனவே, சாதுவிடம் விடை பெற்று அங்கிருந்து புறப்பட்டார், அந்த சாதகர். வேத, சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த மற்றொரு குருவிடம் சென்றார். சமஸ்கிருதத்தில் புலமைப் பெற, அவரிடம் அதைக் கற்றுத்தர வேண்டினார். குருவும் ஏற்றுக்கொண்டார். ஆனால், 'கல்வியுடன் கூடவே இங்கு ஏதாவது சேவையும் செய்ய வேண்டும்...' என்று கூறினார், குரு. ஆசிரமத்தில் இருந்த பசுக்களை பராமரிக்கும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆசிரம பசுக்களுக்கு சேவை செய்ய துவங்கினார், இளம் சாதகர். பின், குருவிடம் சென்று வேத சமஸ்கிருதப் பாடங்களைப் பயின்றார். இப்படியாக, 12 ஆண்டுகள் கடந்தன. அவர் சமஸ்கிருதப் பேரறிஞர் ஆனார். வேத சாஸ்திரங்களில் நல்ல புலமைப் பெற்றார். ஆனால், அவர் இறைவனை அறிந்துணரவில்லை. 'வேதங்களையும், மற்ற சாஸ்திரங்களையும் நன்கு கற்றும் தான் ஏன் இறைவனை அடையவில்லை?' என்று, குருவிடம் கேட்டார், அந்த சாதகர். 'வெறும் புலமையும், கல்வியும் மட்டும் இறைவனை அறிந்துணர உதவாது. இறைவனை அறிந்துணர விரும்புபவர் அவரைத் தீவிரமாக நேசிக்க வேண்டும். அவரது நாமத்தை சொல்வதன் மூலம் அவரை இடையறாமல் நினைக்க வேண்டும்...' என்றார், குரு. முதலில் சந்தித்த சாது சொன்னது சாதகருக்கு நினைவுக்கு வர... 'இறைவனை எப்பொழுதும் நினைத்து, அவர் நாமத்தை தொடர்ந்து சொல்ல வேண்டும்...' என்பதை ஏற்காதது தன் தவறு, என்று உணர்ந்தார், அந்த இளம் சாதகர். 'இறைவனின் நாமத்தை சொல்லாமல், அவர் மேல் அன்பையும், பக்தியையும் வளர்த்து கொள்ளாமல், வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் படித்து, பல ஆண்டுகளை வீணாக்கி விட்டோமே...' என்று வருந்தினார், சாதகர். கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பை சுவைத்தவரை தவிர மற்றவரால் அதனை உணர முடிவதில்லை. 'இறைநாமத்தின் சிறப்பை நாமருசி' என்று குறிப்பிடுவர். இதை, ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தம் உள்ளதாகும். அபிஷேகங்களும், ஆராதனைகளும், அலங்காரமும் மட்டுமே இறைவனை திருப்தி செய்வதில்லை. பாவ காரியங்கள் எதும் செய்யாமல், மனதார அவரை நினைத்து இறைவனின் நாமத்தை நாம் அனுதினமும் உச்சரித்தாலே போதும், இறைவனின் அருட்பார்வை நமக்கு கிடைத்து விடும். இறைவனை விட இறைவனின் நாமத்திற்கு சிறப்பு அதிகம். மந்திரங்கள், யாகங்கள் செய்வதற்கு பதிலாக, அவர் நாமத்தை சொல்வதே கலியுகத்தில் இறைவனை அடைவதற்கான மிக எளிய வழி.  அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !