உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

முதியோர் இல்லங்கள் குறைய...என் மகளின் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பல முதியவர்களை, முதியோர் காப்பகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர்.'நாங்கள் பட்ட கஷ்டம், பிள்ளைகள் படக்கூடாது. அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று, நகை, வீடு மற்றும் சேமிப்பு என, அனைத்தையும் இழந்து, அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தோம். நல்ல நிலைக்கு வந்தவுடன், எங்களை எட்டி உதைத்து விட்டனர்.'நீங்கள் அனைவரும் மனது வைத்தால், எங்களை போன்று ஆதரவற்ற முதியோர்கள் உருவாகாமல் தடுக்க முடியும். எவ்வளவு பெரிய இடத்தை அடைந்தாலும் பெற்றோர்களை கைவிடக் கூடாது...' என்று, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசினர்.இதைக்கேட்டு, அங்கு இருந்த பல பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வழிவதை பார்க்க முடிந்தது.'நாங்க பெரியவங்களானாலும், எங்க அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்கிறோம். அதே சமயம், இப்போ எங்க அப்பாவும், அம்மாவும், தாத்தா - பாட்டியை நல்லா பார்த்துக்கறாங்களான்னு கண்காணிக்கிறோம்...' என, மேடை ஏறி பேசி, அசத்தியது, ஒரு சுட்டி.பள்ளி விழாக்களில் பிரபலமானவர்களை அழைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். அதைவிடுத்து, இவர்களை போன்ற ஆட்களை அழைத்து, மாணவ - மாணவியருக்கும், பெற்றோருக்கும் அறிவுரை கூற செய்தால், எதிர்காலத்தில் ஆதரவற்றோர் இல்லங்கள் பெருகாமல் தடுக்க முடியும்.— ஸ்ரீஹர்சினி, சென்னை.வீட்டில் சும்மா இருப்பதை விட...வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், தோழியின் கணவர். வீட்டில் சும்மா இருக்காமல், ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் தோட்டம் பராமரித்தல் என, எப்போதும், 'பிசி'யாக இருப்பார், தோழி.'கணவர் தான் நன்றாக சம்பாதித்து, பணம் அனுப்புகிறாரே... நீங்களும் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்?' எனக் கேட்டேன்.அதற்கு, 'கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், நான் வேலை வெட்டி செய்யாமல் சும்மா இருந்து விட்டால், சுகர், பிரஷர் போன்ற ஏதாவது நோய் வந்துவிடும்.'மேலும், கணவர் பார்ப்பது நிரந்தர வேலை அல்ல. திடீரென வேலை போய்விட்டால், நான் இங்கு செய்யும் தொழிலில் அவரும் ஈடுபட்டு, விரிவு படுத்தலாம். எப்போதும் வருமானத்திற்கு குறைவிருக்காது. உறவினர்களின் பொறாமையில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்...' என்றாள், தோழி.தோழி கூறுவதில் உள்ள நியாயத்தை புரிந்து, அவளை பாராட்டிவிட்டு வந்தேன்.- காளீஸ்வரி காளிதாசன், நீர்விளங்குளம்.போட்டோகிராபரின் மனிதாபிமானம்!சமீபத்தில், உறவினர் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். நான்கைந்து பேர், பம்பரம் போல சுழன்று, திருமண நிகழ்வை, வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.அடிக்கடி, தன் சீனியரிடம் சென்று, சில சந்தேகங்களையும், ஆலோசனைகளைக் கேட்டு, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான், இள வயது போட்டோகிராபர்; அந்த சீனியரும், அவனுக்கு, ஒத்துழைப்பு வழங்கினார்.சீனியர் போட்டோகிராபரை அணுகி, 'உங்கள் தொழில் நுணுக்கங்களை பொறுப்பாக சொல்லித் தருகிறீர்களே... அவன், உங்கள் உறவினரா?' என்றேன்.'அந்த தம்பி, உறவினர் இல்லீங்க. இந்த ஊர் அரசுப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறான். அப்பா, அம்மா இல்லாததால், பூக்கடை வைத்துள்ள வயதான பாட்டியின் பாதுகாப்பில் இருக்கிறான்.'பள்ளி முடிந்து வந்தபின், கவுரவம் பார்க்காமல், பேப்பர் பொறுக்கும் வேலை பார்த்து, வரும் வருமானத்தை பாட்டிக்கு தருவான். ஒருநாள், சாலையில் பேப்பர் பொறுக்குவதை பார்த்ததும், அவனின் படிப்புக்கு, என்னால் முடிந்த உதவிகளை செய்வதாக சொன்னேன்.'அவனும், தன் படிப்பு கெடாமல் செய்யும் கைத்தொழில் ஒன்றை கற்க, ஏதாவது பகுதி நேர வேலையில் சேர்த்து விடுமாறு கேட்டான்.'என்னிடமே வேலைக்கு சேர்த்து, அவனுக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிறேன். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து போகாமல், அவன் படிப்புக்கு இடையூறு இன்றி, உள்ளூர் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ள வைத்து, சம்பளமும் தர்றேன்.'அவன் படிப்பு முடித்த பின், போட்டோ ஸ்டூடியோ வைக்க விரும்பினால், நானே முன்னிருந்து, வங்கி கடனுதவியை வாங்கித் தருவதாகவும் சொல்லி இருக்கேன்...' என்றார்.மனிதாபிமானம் நிறைந்த அந்த போட்டோகிராபரை, மனதார வாழ்த்தினேன்!-ஆதித்த நிமலன், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !