இது உங்கள் இடம்!
'ஆன்-லைனில்' பொருட்கள் வாங்குகிறீர்களா?எங்களுடைய பக்கத்து வீட்டுக்கு, 'அமேசான், ப்ளிப்கார்ட், சொமாட்டோ, ஸ்விக்கி' போன்ற நிறுவனங்களில் இருந்து, தினமும் ஏதாவது ஒரு பொருள், 'கொரியரில்' வந்துகொண்டே இருக்கும்.'என்ன இது... தினமும் என்ன பொருட்கள் வாங்குவர்?' என்று நினைத்துக் கொள்வேன்.ஒருநாள் அந்த வீட்டில் கணவன்-மனைவியிடையே பெருத்த வாக்குவாதம் நடந்த சத்தம் கேட்டது. பிறகு, மெதுவாக அந்த கணவரிடம், 'என்ன விஷயம். எதற்கு கோபப்பட்டீர்கள்?' என்று விசாரித்தேன்...'நீங்க வேற சார். நான் காலையிலேயே ஆபீஸ் போயிருவேன். வீட்டில் மனைவி மட்டும் தான். பொழுது போகாம, 'ஆன்-லைன்ல ஷாப்பிங்' பண்ண ஆரம்பிச்சிருக்கா. முதல்லே, 'டிரஸ்' அது இதுன்னு வாங்கினவ, அப்புறம், 'எலக்ட்ரானிக்' பொருட்கள், மொபைல்போன்னு வாங்க ஆரம்பிச்சு, 'புட் ஐட்டமும்' வாங்க ஆரம்பிச்சிட்டா.'இப்ப அவளுக்கு, 'ஆன்-லைன் ஷாப்பிங்' ஒரு போதையாயிருச்சு. அவ 'பேங்க் பேலன்ஸ்' காலியாயிருச்சு. வீடு நிறைய தேவையில்லாத பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. புதுசா ஒரு பொருள் வந்திருக்குன்னு, 'ஆர்டர்' செஞ்சிருக்கா... அவ, 'அக்கவுன்ட்ல' பணமில்லேன்னு என் 'அக்கவுன்ட்ல ஆர்டர்' போட, நம்பர் கேட்டா. எனக்கு கோபம் வந்துவிட்டது. சின்ன வாக்குவாதம்.'கடைக்கு போனா, எவ்வளவு பணம் கைவசம் இருக்கிறதோ, அதுக்கு தகுந்த மாதிரி வாங்குவோம். 'ஆன்-லைன்'ல பரிவர்த்தனை பண்றப்போ, அது தெரிவதில்லை! இஷ்டத்துக்கு வாங்கி குவிக்கிறோம்; பணமும் செலவாகி விடுகிறது. இந்த பழக்கத்திலிருந்து அவளை எப்படி, மீட்கப் போறேன்னு தெரியலை...' என்று அலுத்துக் கொண்டார்.'ஆன்லைன்' வர்த்தகம் நம்மை அளவுக்கு மீறி சுரண்டிவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உஷாராக இருங்க நண்பர்களே!- எஸ்.சுரேஷ்பாபு, பொன்னேரி, திருவள்ளுர்.நெகிழச் செய்த உறவினர்!இருபது ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரியும் உறவினர் ஒருவர், சில மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து, சிறப்பு விருந்துக்கு அழைப்பு விடுத்தார்.குறிப்பிட்ட நாளில் வருகை தந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, உணவு பரிமாறும் பணியிலும், 'கேட்டரிங்' ஊழியர்களுடன் இணைந்து, பரிமாறினார்.விருந்து முடிந்த பின், உறவினர்களுடன் பேசிய அவர், 'வெளிநாடு சென்ற பின், உறவுகளும், நண்பர்களும் இல்லாத தனிமை, என்னை மிகவும் வாட்டியது. இழந்த அந்த மகிழ்ச்சியை மீண்டும் உணரவும், புத்துணர்ச்சி பெறவுமே, இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன்...' என்றார்.அதன் பின், அவர் வெளிநாட்டில் இருந்த காலத்தில், ஊரில் சுப நிகழ்வுகள் நடத்தியவர்களுக்கு, அன்பளிப்புகள் வழங்கி கவுரவித்தார்.மேலும், தேவையுள்ள சிலருக்கு, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கினார்.உறவினர்களின் அருமையையும், மனிதநேயத்தின் மதிப்பையும், செயலால் உணர்த்திய உறவினரது முயற்சி, அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது.- கே.வினோத்குமார், விழுப்புரம்.'லீஸ்' அடிப்படையில் வீடு பார்க்க போகிறீர்களா?உறவினர் ஒருவர், 'லீஸ்' அடிப்படையில் வீடு பார்த்தார். ஒரு வீடு அமைய, பெரும் தொகை கொடுத்து, அந்த வீட்டிற்கு குடி போனார். சில மாதங்களுக்கு பின், ஒரு தனியார் நிதி நிறுவனம் ஒன்று நண்பரின் வீட்டிற்கு வந்து, 'இந்த வீட்டை எங்களிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறார், வீட்டின் உரிமையாளர். கடனை கட்டாததால் சட்டப்படி இந்த வீட்டை, 'ஜப்தி' செய்கிறோம்...' என்று சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார், நண்பர்.இப்போது, நண்பர் அந்த வீட்டின் உரிமையாளரிடம் பணம் கேட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.பெரிய தொகைக்கு, 'லீஸ்' அடிப்படையில் குடி போக நினைப்பவர்கள், அந்த வீடு கடனில் இருக்கிறதா, வேறு ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா என்று சரி பாருங்கள்; வீட்டு பத்திரத்தை வாங்கி ஆய்வு செய்யுங்கள். இல்லாவிட்டால் உறவினரின் கதிதான் உங்களுக்கும்.- ஜெ.கண்ணன், சென்னை.