உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

செவிலித்தாயின் புதிய பணி!உறவினப் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்திருந்ததை அறிந்து, பார்ப்பதற்காக, மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்த போது, வயதான பெண்மணி ஒருவர், அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்து, நம்பிக்கையும் தைரியமும் தரும் வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்தார்.அருகில் இருந்தவர்களிடம், அவரை பற்றி விசாரித்தபோது, 'இவர் யாரென்று எங்களுக்கும் தெரியாது; நீங்கள் வருவதற்கு முன்பே ஒவ்வொருவரிடமும் சென்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்...' என்றனர்.அந்த பெண்மணியிடமே கேட்டேன்...'நான் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவள். வீட்டில் சும்மா இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மருத்துவமனைக்கு தினமும் வருகிறேன். நோயாளிகளிடமும், அவர்களது உறவினர்களிடமும் சிறிது நேரம் பேசுவேன்; அவர்களுடைய பயத்தையும், கவலையையும் குறைக்க, அவர்களுடன் ஆறுதலா பேசி, தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருக்கச் சொல்வேன்.'அப்படி நான் ஆறுதலாக பேசியவர்களில் சிலர், எனக்கு போன் செய்து, 'அம்மா... அன்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் தான் எங்களுக்கு தைரியம் கொடுத்தது...' என்பர். அந்த ஒரு வார்த்தையே எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருகிறது...' என்றார்.மருத்துவமனையில் மருந்து கொடுக்க பலர் இருக்கின்றனர். ஆனால், மனம் தளர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை மருந்தாகக் கொடுப்பவர்கள் எத்தனை பேர்? அந்த செவிலித் தாயைப் பார்த்தபோது, ஓய்வு என்பது வேலையிலிருந்து தான்; வாழ்க்கையிலிருந்து அல்ல என்பது புரிந்தது.கே.புனிதா, கோவை.துாங்குபவர்களை தடுக்க...ச மீபத்தில், நுாலகம் ஒன்றை நடத்தி வரும் நண்பரை பார்க்க ஊருக்கு சென்றிருந்தேன். அவர் நடத்தும், நுால் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் மேஜையில், புத்தகம் படிக்க வருபவர்கள், தங்கள் பெயர், ஊர், தொழில் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யும் குறிப்பேடும் வைக்கப்பட்டிருந்தது.நுாலக வாசலில் வைக்கப்பட்டிருந்த கரும்பலகையில், 'இந்த வாரம் சிறந்த வாசகர்கள்!' என்ற தலைப்பின் கீழ், சிலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதற்கு கீழே, 'நுால் நிலையத்தில் துாங்கியவர்கள்!' என்று, இரண்டு பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.இது வித்தியாசமாக இருந்ததால், நண்பரிடம் அதைப்பற்றி கேட்டேன்...'இந்த நுால் நிலையத்தை ஆரம்பித்த புதிதில், பலர் புத்தகம் படிக்க வராமல், மதிய நேரத்தில் துாங்குவதற்காக மட்டும் வந்தனர். இதனால், அங்கு புத்தகம் வாசித்து கொண்டிருந்தவர்கள் சிரமப்பட்டனர்.'ஒருவர் சொன்ன யோசனைப்படி, நுால் நிலையத்தில் துாங்குபவர்களை, கேமராவில் கண்காணித்து, அவர்களது பெயர்களை கரும்பலகையில் எழுத ஆரம்பித்தோம். முதலில் பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்தன. இப்போது, இரண்டு மட்டும் இருக்கின்றன. இவர்களும் விரைவில் புத்தகம் படிப்பர். மேலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்க, பரிசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளோம். அதில் வாரம் ஒருமுறை, அவரவர் வாசித்த புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் கேட்கிறோம். சரியாகப் பதிலளிப்பவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். பரிசு பெற்றவர்களது பெயர்களையும் கரும்பலகையில் எழுதுகிறோம். அதனால், புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...' என்றார், நண்பர்.நுால் நிலையங்களில் துாங்குபவர்களால் புத்தகம் வாசிக்க வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுவது பல இடங்களில் தொடரும் பிரச்னையாகவே இருக்கிறது. அதற்கு யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில், வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில், நண்பர் கையாளும் வித்தியாசமான முயற்சியை, மனதார பாராட்டினேன்.அ.துரைமணி, நாகர்கோவில்.பாராட்டுக்குரிய கடைக்காரர்!அ ண்மையில், வெளியூரில் உள்ள நண்பரின் புதுமனை புகுவிழா நிகழ்வுக்கு, மனைவியோடு சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்த கடைத்தெருவுக்கு சென்றோம்.அப்போது, கடைக்காரர் ஒருவரிடம் யாசகம் கேட்டார், முதியவர் ஒருவர்.அவரை அழைத்த கடை உரிமையாளர், 'பிச்சையெடுக்காம, என் கடையில இருக்கிற வயர் கூடை, கட்டைப்பை மற்றும் கைப்பைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வாருங்கள்; உங்களுக்கு கமிஷன் தந்துடுறேன்...' என்றார்.மலர்ந்த முகத்தோடு, 'சரிங்கய்யா...' என்ற முதியவர், கடைக்காரர் தந்த கூடைகள் மற்றும் பைகளை எடுத்துக் கொண்டு, உற்சாகமாக விற்க சென்றார்.அதைப்பார்த்து மகிழ்ந்த நாங்கள், பிச்சை கேட்டு வந்தவரை, வியாபாரியாக்கிய கடைக்காரரை பாராட்டினோம்.வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
செப் 28, 2026 20:12

அசாத்திய. நம்பிக்கை. அந்தக். கடைக்காரருக்கு கொடுத்த. பொருள்களுடனோ. விற்ற. பணத்துடனோ. அந்தப். பிச்சைக்காரர். மறைந்துவிட்டால். அவரை. எங்கு. தேடிப்பிடிப்பார்?


பெரிதினும் பெரிது கேள்
செப் 28, 2026 09:00

2 and 3 looks like story ... 1 okay okay ... Seri seri Nambuvomagaaa


Natarajan Ramanathan
செப் 27, 2026 10:29

அமெரிக்காவில் நூல்நிலையங்கள் மிகவும் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் அதிக நூலகங்கள் இருக்கும். குடும்பம் குடும்பமாக வருவார்கள். விடுமுறை தினங்களில் நல்ல கூட்டமாக இருக்கும். வைபை வசதி இலவச பிரின்ட்டிங் மற்றும் ஜெராக்ஸ் வசதியும் உண்டு. சுமார் நூறு கார்கள் பார்க்கிங் வசதி இருக்கும்.


Govi
செப் 27, 2026 09:09

கடைசி கருத்து அருமை