உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உறவினரின் மனிதநேய சிந்தனை!சமீபத்தில், என் வீட்டிற்கு வந்த உறவினர், அவரது, இரண்டாம் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அதில், 'பிறந்தநாள் விழாவில் குழந்தைக்கு பரிசு கொடுக்க விரும்புவோர் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக, அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களை வழங்குமாறு வேண்டி கொள்கிறேன்...' என்று வித்தியாசமான வேண்டுகோள், விடுத்திருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'பொதுவாக விழாக்களில் பரிசாக வழங்கும் கார் போன்ற விளையாட்டு பொருட்கள் ஏற்கனவே நம் வீட்டில் இருப்பவைகளாகவே இருக்கும். அவற்றில் சில பொருட்கள், பயன்படுத்தப்படாமலும் போய்விடும். 'அதனால், இந்த முறை விழாவின் பரிசாக தரும் மளிகைப் பொருட்களுடன், மேலும் தேவைப்படும் சில மளிகைப் பொருட்களை கூடுதலாக வாங்கி, ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு வழங்கி, அவர்களை குழந்தையை ஆசீர்வதிக்க சொல்ல திட்டமிட்டுள்ளோம்...' என்றார். அவரது இந்த மனிதநேய சிந்தனை, என்னை கவர்ந்தது. உறவினர்களையும், நண்பர்களையும் இந்த நற்செயலில் பங்கெடுக்க வைக்கும் வகையில், குடும்ப விழாவை, சமூக நலனுக் கு உதவும் நிகழ்வாக மாற்றியதை மனதார பாராட்டினேன்! -வடிவேல் முருகன், நெல்லை.புதுமையான விளம்பரம்!மேளதாள, நாதஸ்வர இசையுடன் அண்டை வீட்டுக்காரரின் குடும்பத்தினரை ஜவுளிக்கடைக்காரர்கள், ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதைப் பார்க்க ஏராளமான தெருவாசிகள் கூடிவிட்டனர். என்னவென்று விசாரித்தபோது, தீபாவளிக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், அவர்கள் கடையில் துணி வாங்கினால், கடையில் ஆரம்பித்து, அவர்கள் வசிக்கும் வீடு வரைக்கும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மரியாதை செய்வதாக ஜவுளிக்கடை விளம்பரப்படுத்தியிருந்தது தெரியவந்தது. இது, தீபாவளி விற்பனையை அதிகரிக்க அவர்கள் செய்த நுாதனமான திட்டம் என்பதை அறிந்து, வியப்படைந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சம்பவத்தை பார்த்த அடுத்த நாளே, என் பெண்டாட்டியும், அந்த ஜவுளிக்கடைக்கு, தன்னை அழைத்து செல்லும்படி என்னை நச்சரித்தாள். இதைப் பார்த்து இன்னும் எத்தனை வீடுகளில் இப்படி நடந்ததோ தெரியவில்லை! பண்டிகை காலங்களில், தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய, புதிதுபுதிதாக யோசிக்கின்றனர். தீபாவளிக்கு துணி வாங்க செல்பவர்கள் இதையெல்லாம் பார்த்து மயங்கி, கடன் வாங்கி, பணத்தை செலவழித்துவிட்டு, பிறகு கடன் பிரச்னையில் மாட்டிக்கொள்ளாதீர். உஷாராக இருங்கள்! கே.எம்.இளங்கோ, சென்னை.பிரசவத்துக்கு வரும் பெண்களிடம், அன்பாக பேசுங்கள்!என் உறவினரின் மகளுக்கு, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 39 வயதில் தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக, அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். பெண் டாக்டர், பரிசோதித்து, 'ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...' என்று கூறிவிட்டார். மேலும், 'ஏன் காலாகாலத்தில் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதுதானே, ஒருத்தன் கூடவா கிடைக்கல... இந்த வயசுலயா குழந்தை பெத்துப்பாங்க?' என்று, 'கடுகடு'ப்பான குரலில் கூறி, 'அட்வைஸ்' மழையும் பொழிந்தார். உடனே, என் உறவினர், 'நாங்க ரொம்ப வசதி இல்லாதவங்க. இவளுக்கு கல்யாணம் ஆனதே பெரிய விஷயம்...' என்றார். அதற்கு அந்த பெண் டாக்டர், 'வசதி இல்லேன்னா என்ன, 25 வயசிலேயே எவனையாவது காதலிச்சு கல்யாணத்தை செய்து, குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டியது தானே. இப்ப எங்க உயிரை எடுக்குறீங்களே...' என்றார், கோபமாக. மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல், வாயடைத்து நின்றோம். பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணின் மனதை, இந்த பேச்சு எவ்வளவு பாதிக்கும் என்பதை, அவர் புரிந்துகொள்ளாததை நினைத்தபோது, வருத்தமாக இருந்தது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இதுபோன்ற பெண் டாக்டர்கள், தங்களிடம் பிரசவம் பார்க்க வரும் பெண்களிடம் கருணையுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொண்டால் நன்றாக இருக்கும். -  பவித்ரா சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
நவ 01, 2026 21:00

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர்க்கு ஒசியில் சிசேரிய்ன் ஆபரேரைஷன் செய்யணுமே என்ற எரிச்சல்., தன் சொந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்க சேர்த்திருந்தால் இதுபோன்ற வார்த்தைகளை பேசியிருக்க மாட்டார். சில லட்சம் ரூபாய் கிடைத்திருக்குமே என்ற நப்பாசை ..


D.Ambujavalli
நவ 01, 2026 19:59

சரி. இந்த. டாக்டர். 20. வயதில். திருமணமாகி. யும் 39. வயது. வரை. பிள்ளை. இல்லாமல். இருந்து. கருத்தரித்தவரை. எப்படிக். கேட்பார்? ‘ஏன். காலத்தில் , மணக்கவில்லை, ஏன் காதலித்து. ஓடிப்போகவில்லை. ‘. என்றெல்லாம். கேட்பது. கூட. மருத்துவத்தில். ஒரு. பகுதியா?


நிக்கோல்தாம்சன்
நவ 01, 2026 09:23

அந்த மருத்துவர் ஒரு மனநோயாளி ,