உள்ளூர் செய்திகள்

ஓணம் ஸ்பெஷல்!

நேந்திரன் பழ பிரதமன்! தேவையானவை: நன்கு கனிந்த நேந்திரன் பழம் - இரண்டு, வெல்லத்துாள் - 100 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், ஏலக்காய்த்துாள் - கால் தேக்கரண்டி, முந்திரி, திராட்சை - தலா 10, பல்பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - நான்கு தேக்கரண்டி, நெய் - மூன்று தேக்கரண்டி. செய்முறை: நேந்திரன் பழத்தை தோலுடன் இரண்டாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆறியதும் தோலை உரித்து, இரண்டாக நறுக்கி, நடுவே உள்ள விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். அதனுடன், சிறிதளவு தண்ணீர் விட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத் தெடுக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, தேங்காய்த் துண்டுகளை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில், அரைத்த பழ விழுதை சேர்த்து கிளறி, வெல்லக்கரைசல், ஏலக்காய்த்துாள் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த்துண்டுகளை மேலாக அலங்கரித்து பரிமாறவும். எரிசேரி! தேவையானவை: தோல், விதை நீக்கி நறுக்கிய பறங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - கால் கப், கடுகு, மஞ்சள் துாள் - தலா கால் தேக்கரண்டி, மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாதியளவு தேங்காயை விழுதாக அரைத்தெடுக்கவும். பறங்கி துண்டுகளுடன் மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். அதனுடன் தேங்காய் விழுது, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய், மீதமுள்ள தேங்காய்த்துருவல் சேர்த்து தாளித்து, எரிசேரியுடன் கலந்து பரிமாறலாம். ஓலன்! தேவையானவை: சிவப்பு காராமணி - 50 கிராம், தோல், விதை நீக்கி நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - மூன்று, தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி, குக்கரில் வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பூசணி துண்டுகளுடன், பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். அதனுடன், வேகவைத்த காராமணி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஓலனுடன் கலந்து பரிமாறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !