உள்ளூர் செய்திகள்

விண்ணையும் தொடுவேன்! (12)

முன்கதைச் சுருக்கம்: மருத்துவமனையில் இருந்த கயல்விழிக்கு, நினைவு திரும்பியதை அறிந்து, புகழேந்தியும், அவன் நண்பனும், பத்திரிகை ஆசிரியருமான பிரபாகரும், அவளை சந்திக்க சென்றனர். கயல்விழியிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, ஆறுதலாக பேசினர். பிரபாகர் ஆசிரியராக இருக்கும், 'தென்னங்கீற்று' பத்திரிகையை படித்திருப்பதாகவும், அதில், புகழேந்தி எழுதும் கட்டுரைகளை தவறாமல் படித்திருப்பதையும் கூறினாள், கயல்விழி.கயல்விழி, தன் அம்மாவைப் பற்றி கேட்க, 'உடல் நிலை தேறியதும், நானே அழைத்துச் செல்கிறேன்...' என, சமாதானமாக பேசினார், எஸ்.பி., ஈஸ்வரி.கயல்விழியை சென்னைக்கு அழைத்து சென்று, மனநல மருத்துவரிடம், 'கவுன்சிலிங்' செய்ய சொல்ல வேண்டும் என, கூறுகிறான், பிரபாகர். கயல்விழி மீது அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருப்பது, அவன் பேச்சில் வெளிப்பட்டது.தன் உள்ளங்கையை திருப்பி பார்த்தான், புகழேந்தி. அன்று அது, புதிய கையாக தெரிந்தது. கயல்விழியின் கையைப் பற்றிய கையல்லவா இது. ஒரு பெண்ணின் கையிலிருந்தும், தன் கைக்கு மின்சாரம் பாய முடியும் என்பதை, முதல் முறையாக உணர்ந்தான். இதுவரை இதுபோன்றதொரு உணர்ச்சியை அவன் அடைந்ததில்லை. படுத்த படுக்கையாக கிடக்கும் நிலையிலும், அந்த பெண்ணின் பார்வையில் எப்பேர்ப்பட்ட கனிவு. அவனையும் மீறி, அவன் மனதில், வந்து நின்றாள், கயல்விழி.'எளிமையும், அன்பும், அடக்கமும் நிறைந்த பெண். சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்டவளாகத் தான் இருக்க வேண்டும். கண் திறந்ததும் அழுது புலம்பவில்லை. கத்தி அமர்க்களப்படுத்தவில்லை. ஊர் கூட்டவில்லை. சமூகத்தையோ, அரசையோ சாடவில்லை. தனி மனிதக் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பாக முடியும்?'ஆனாலும், இவையெல்லாம் நடக்காமல், மக்களைக் காக்க வேண்டியது, அரசின் பொறுப்பு தான். என் மாவட்டத்தில் நடந்ததால், நானே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்; பெற்றுத் தர வேண்டும்.'எப்படி செய்யப் போகிறேன் இதை? பொருளோ, பதவியோ, பணமோ போயிருந்தால், திருப்பி கொடுத்து விடலாம். ஆனால், அந்த பெண்ணிடமிருந்து பறிபோயிருப்பது வாழ்க்கை. அதை எப்படி திருப்பி தருவது? எவ்வாறு சீரமைப்பது?' என, நினைத்துக் கொண்டான்.''என்ன, புகழ்... யோசனை ரொம்ப பலமாக இருக்கு?'' என்றபடி வந்தான், பிரபாகர்.''வா, பிரபா. எங்க போயிட்ட இத்தனை நேரம்?''''காலாற நடந்து போனேன், புகழ். கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ரெண்டுங்கெட்டானான இந்த ஊர் நல்லாத்தான் இருக்கு.''''பிரார்த்தனை செய்வதிலும், உருகி, உருகி வேண்டுவதிலும் நம்பிக்கையே இல்லாத எனக்கு, இந்த ஊர்ல கலெக்டராக, 'போஸ்டிங்' போட்டிருக்காங்க. விண்ணை முட்டும் எட்டு கோபுரமும், நாலு வாசல் வழியாக சிவனைத் தரிசிக்கவும், பார்வதியிடம் வேண்டவும் தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் வருகின்றனர். எந்தெந்த ஊர்களில் இருந்தெல்லாமோ வருகின்றனர். ''பவுர்ணமி தினத்தன்று பார்க்கணும், பிரபா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைகளைச் சுற்றி கிரிவலம் வருவாங்க. இந்த ஊரில், 'போஸ்டிங்' கிடைக்காதான்னு எத்தனையோ பேர், மாவட்ட மந்திரியிடம் தவம் கிடக்க, என்னை இந்த மாவட்ட கலெக்டராக்கி இருக்காங்க. ஏன் இந்த முரண்பாடுன்னே தெரியல?''லேசாகப் புன்னகைத்தான், பிரபாகர். ''என்ன பிரபா, சிரிக்கிற?''''இதுல மட்டும் தானா முரண்? வாழ்க்கை முழுவதுமே முரண்பாடுகளால் ஆனது தானே...''''அது தான் பிரபா, ஏன்னு கேட்கிறேன்?''''படைச்சவனுக்கு பொழுது போக வேண்டாமா...''புன்னகைத்தான், புகழேந்தி. ''சரி, வீட்டுக்கு கிளம்பலாமா?'' என, பிரபாகர் கேட்ட போது திடுக்கிட்டான், புகழேந்தி.''வீட்டுக்கா?'' என்ற, புகழின் குரலில் எல்லையற்ற சோகம் வெளிப்பட்டது.''வேற எங்க போக முடியும், புகழ்?'' ''சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே?''''நமக்குள்ள ஏதுடா தப்பு, சரி எல்லாம்?''''சுபாங்கின்னாலே பயமா இருக்குடா,'' எனச் சொல்லி, வாய் விட்டு சிரித்தான், புகழேந்தி. ''இப்படி பயந்தா, எனக்கு எப்படிடா இருக்கும்?''''நீதான் எப்படியோ பேசி, டன் டன்னா ஐஸ் வச்சு சமாளிச்சுட்டியே!''''அது சரி, அந்த ஐஸ் எத்தனை நேரத்துக்கு தாங்கும். உருகி தண்ணியா ஓடி, வடிஞ்சிடாதா?''''அதுவும் சரி தான்!''''என்ன செய்ய முடியும், புகழ்? பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளியமரம் ஏறித்தானே ஆக வேண்டும். இது நீயாக தேடிக்கிட்ட சங்கடம் தானே?''''இல்ல, பிரபா. தானாகத் தேடி வந்தது.'' ''சரி, எப்படியானாலும் சமாளிச்சுத்தானே ஆகணும். வா போகலாம்.''இருவரும் வீட்டிற்குள் நுழைந்த போது, 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள், சுபாங்கி. இவர்களை கண்டதும், 'டிவி'யை நிறுத்திவிட்டு வந்தாள். ''தேவலையே... இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டாரே! ஒரு வேளை நீங்க வந்திருக்கிறதால இருக்குமோ.''மையமாக சிரித்தான், பிரபாகர். ''இன்னைக்கு எங்கெல்லாம் போனீங்க?''''எங்கேயும் போகல. காலைல கிளம்பி நேரா மருத்துவமனைக்கு போனதோடு சரி,'' சட்டென்று சொல்லி விட்டான், பிரபாகர். பொய் சொல்லிப் பழகாத நாக்கு, இயல்பாக உண்மையை வெளியிட்டு விட்டது.அதைக்கேட்டு சுறுசுறுவென்று காய்ந்தது, சுபாங்கியின் முகம். ''உங்களுக்கும் அந்த பொண்ணு பைத்தியம் புடிச்சிடுச்சா?'''ஐயோ, தவறு செய்து விட்டோமோ...' என, அவளறியாமல் கீழ் உதட்டை கடித்துக் கொண்டாலும், மெல்ல சமாளித்து, ''ஏங்க, இதைப்பத்தி கவர் ஸ்டோரி எழுதணும்ன்னு தானே இங்க வந்திருக்கேன். அந்த பொண்ணைப் பார்க்காமல், பேசாமல் எப்படி எழுத முடியும்?'' என்றான், பிரபாகர்.''அந்தப் பொண்ணுகிட்ட, பத்திரிகைகாரங்க போகவே கூடாதுன்னு, இவரு தான் கட்டளை போட்டு, கட்டிக்கிட்டவன் மாதிரி அவளைப் பாதுக்காக்கிறாரே! உங்களை மட்டும் எப்படி எழுத விட்டுடுவாரு?'' என, சலித்துக் கொண்டாள், சுபாங்கி. அதை காதில் வாங்காமல், இருவரும் சாப்பிட போயினர்.கயல்விழி தனியறைக்கு மாற்றப்பட்டதும், தினமும் பிரபாகருடன் சென்று, அவளை பார்த்து வந்தான், புகழேந்தி. அன்றும் இருவரும் மருத்துவமனைக்கு சென்று, வீடு திரும்பிய போது, வீட்டில் சுபாங்கி இல்லை. 'அப்பாடா...' என்றிருந்தது, புகழேந்திக்கு. பெரிய விடுதலையாக உணர்ந்தான். இருவரும் முகம் கழுவி, உடை மாற்றி வந்தனர். சமையற்கார பெரியவர், சூடாகப் பரிமாறிய புல்கா ரொட்டியையும், பன்னீர் பட்டர் மசாலாவையும் விரும்பி, ருசித்து சாப்பிட்டனர்.வீட்டில் கறந்த பசும்பாலில் ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் ஆற்றி, இரு டம்ளர்கள் எடுத்து வந்து கொடுத்தார், பெரியவர். அவரது அன்பிலும், ஆதங்கமுமான பணிவிடையிலும் பெரிதும் மகிழ்வடைந்தான், புகழேந்தி. ''என்ன பெரியவரே... இன்னைக்கு உங்களுக்கு விடுதலையா?'' என கேட்டான். அவர் பதிலளிக்க வாய் திறந்த போது, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.''அம்மா வந்துட்டாங்க,'' என்றவர், சட்டென்று அமைதியானார். முகத்திலிருந்து சிரிப்பு விலகியது. கையில் கிடைத்த பாத்திரங்களை எடுத்து, அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றார். வரவேற்பறையில் நுழைந்த, சுபாங்கியின் தோற்றத்தை கண்டு, புகழேந்தியின் முகம் சுருங்கியது.அதீதமான முக ஒப்பனையும், தலையலங்காரமும், உடல் முழுதும் வைர நகைகளும், சரிகையால் இழைக்கப்பட்ட பட்டுப் புடவையுடன் காட்சியளித்தாள்.''என்ன, சுபாங்கி கோலம் இது?''''கல்யாணத்துக்கு போயிட்டு வரேன்.''''யார் வீட்டு கல்யாணம், சுபா?''''நம்ம தோட்டக்கார முத்துவோட பொண்ணுக்கு கல்யாணம். வருந்தி வருந்தி கூப்பிட்டான். போயிட்டு வந்தேன்.''''எங்க நடந்துச்சு?''''அவன் வீட்ல தான். வாசல்ல ஷாமியானா போட்டு, மடக்கு நாற்காலியில் எல்லாரையும் உட்கார வச்சு நடந்தினான்.'' ''அதுக்கா இப்படி, அலங்காரம் பண்ணிக்கிட்டுப் போயிருந்த?''''ஏன், இதுல என்ன தப்பு? உங்க கூட எங்க வந்தாலும் சாதாரணமா வரச் சொல்றீங்க. கழுத்துல ஒரு நெக்லஸ் கூட, போட விட மாட்டேங்கறீங்க.''சரிகை போட்ட பட்டுப்புடவை கட்டுனா புடிக்க மாட்டேங்குது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுடர் பூசினா முகத்தைக் கழுவிக்கிட்டு வரச் சொல்றீங்க. சாதாரணமா இருந்திருந்து போர் அடிக்குது. இத்தனை நகைகளையும் அப்பா எதுக்கு வாங்கிக் குடுத்திருக்காரு?''தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது, புகழேந்திக்கு.'ஒரு ஏழை தோட்டக்காரர் வீட்டு திருமணத்தில் போக வேண்டிய விதமா இது? ஏழை மனது என்ன நினைக்கும்? இந்த யோசனையெல்லாம் வரவே வராதா? பணம், நகை, பொருள் தவிர வேறு எதுவும் தெரியவே தெரியாதா?'அவனது முகம் மாறியதை கவனித்த, பிரபா சட்டென்று நிலைமையை சமாளித்தான்.''மகாலஷ்மி மாதிரி எத்தனை நல்லா இருக்காங்க, புகழ். கல்யாணத்துக்கு இப்படிப் போகாமல் வேறு எப்படி போவாங்களாம்!''பிரபாவின் உதட்டில் ஓடிய புன்னகையின் குறிப்பறிந்து கொண்டான், புகழேந்தி.'ஒரு வேளை இந்த மாதிரி சாமர்த்தியங்கள் தான், இந்த உலகத்திற்கு தேவையாக இருக்கிறதோ! வள்ளுவர் சொன்ன, 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது, இது தானோ! இதெல்லாம் தெரியாத காரணத்தால் தான், நான் கஷ்டப்படுகிறேனோ...'''என்ன புகழ் பேசாமல் நின்னுட்டிருக்க?'' மையமாகப் புன்னகைத்த, புகழேந்தி, சுபாங்கியை ஏறிட்டு, ''நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சு. நீ போய் இதையெல்லாம் கழற்றிட்டு, வேற டிரஸ் மாத்திக்கிட்டு வந்து சாப்பிடு. பெரியவர் சூப்பரா, புல்கா சப்பாத்தி செய்திருக்காரு,'' என்றான்.''ஊஹும். நான் சாப்பிடப் போறதில்ல. எனக்கு பசிக்கல. ரொம்ப டயர்டா இருக்கு. குளிச்சுட்டு படுக்கப் போறேன். பேசி முடிச்சுட்டு நீங்க வந்து படுங்க.''விடுதலை உணர்வில் புன்னகைத்தான், புகழேந்தி.''வா, பிரபா. வாசல் லான்ல போய் உட்கார்ந்து பேசலாம்.''இருவரும் வந்து உட்கார்ந்து கொண்டனர். வானம் தெளிவாக இருந்தது. நட்சத்திரங்கள் மினுங்கின. தேய்பிறை நிலவு, கீற்றாக கிடந்தது. மரங்களும், செடிகளும் நிறைந்து வனாந்திரம் போல் ரம்மியமாக காணப்பட்டது. சிலுசிலுவென்று காற்று வீசியது. ''கோடி கொடுத்தாலும் சென்னையில் இது போன்றதொரு இடம் கிடைக்காது,'' என்றான், பிரபா. ''காலையில் பார்க்க வேண்டும். இந்த இடம் முழுவதும், பறவைகளின் சரணாலயமாக இருக்கும். ஒவ்வொரு மரத்திலிருந்தும் நுாற்றுக்கணக்கான கிளிகள் கத்தும், கோழிகளும், வாத்துக்களும், வான் கோழிகளுமாக கீழே நடமாடும்.''நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த இடத்தில் நான், 'ஜாகிங்' போவேன். மனசு அப்படி நிறைந்துப் போயிடும்,'' என்றான், புகழேந்தி. ''எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், இங்கு வந்து உட்கார்ந்தால் காணாமல் போகும் போலிருக்கே,'' என்றான், பிரபாகர்.''அது நிஜம் தான், பிரபா!''அதன்பின், பேச்சற்று இருவரும் மவுனமாக இருந்தனர். பிரபாகர் தான் கலைத்தான்.''என்ன புகழ் பேசாமல் இருக்க?''''இல்ல, அந்த பெண் நன்றாக தேறி, இயல்பு நிலைக்கு வர இன்னும் இரண்டு, மூன்று மாதங்களாகலாம். அதுவரை மருத்துவமனையில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதுதான் யோசிக்கிறேன்.''''நீ சொன்னால் கூடவா வைத்துக் கொள்ள மாட்டார்கள்?''''சொல்லலாம். ஆனால், அது சரியாக இருக்காது. அரசு மருத்துவமனைகள், சுகாதாரத்துறை அமைச்சரின் கீழ் வருபவை. அதற்கு அவரது அனுமதி வேண்டும்.''''நம் சுகாதாரத் துறை அமைச்சர் செயல்திறனும், எளியவர்களுக்கு இறங்கும் குணமும் கொண்டவர். அவரா வேண்டாமென்று சொல்லப் போகிறார்?''''இந்த சின்ன விஷத்திற்கெல்லாம் அவரை தொந்தரவு செய்யணுமா என்று தான் யோசிக்கிறேன்.''''நீ இப்படி யோசிக்க வேண்டிய தேவையே இல்லை. நான் கேட்டபோது, நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். பத்திரிகைகாரர்களும், எளிய எழுத்தாளர்களும் அவர் மூலமாகத்தான் மருத்துவ வசதி பெறுகின்றனர்.''கயல்விழியை இந்த மருத்துவமனையிலேயே தங்க வைக்க அவரிடம் கேட்கலாம் என்றால், நீ ஏன் தயங்குகிறாய், புகழ்?'' என்றான், பிரபாகர்.- தொடரும்இந்துமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !