உள்ளூர் செய்திகள்

விண்ணையும் தொடுவோம்! (17)

முன்கதைச் சுருக்கம்: கயல்விழியின் உடல்நிலை ஓரளவுக்கு சீரானதை தொடர்ந்து, தன் அம்மா பற்றி, புகழேந்தியிடம் விசாரித்தாள். உண்மையை கூறி, கயல்விழியை தேற்றி, ஆறுதல் கூறினான், புகழேந்தி.பிரபாகருக்கு, அவன் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து, இணையாசிரியர் சாலமன் போன் செய்து, முக்கியமான வீடியோ ஒன்றை, அவனது மொபைல் போனுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.அந்த வீடியோ காட்சி, நீர்வளூர் கிராமத்தில் நடந்த கலவரத்துக்கு முக்கிய காரணமாக, சுபாங்கியின் அப்பா இருந்திருப்பதை, ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்தான், பிரபாகர்.உடனடியாக சென்னைக்கு செல்ல உள்ளதாக கூறினான், பிரபாகர். தலைமைச் செயலர் மற்றும் முதல்வரை சந்திக்க வேண்டியிருப்பதால், தானும் உடன் வருவதாக கூறி, பிரபாகருடன் புறப்பட்டான், புகழேந்தி -''ஏற்கனவே நேரமாயிடுச்சு, புகழ். உனக்காக, தலைமை செயலரும், முதல்வரும் காத்திருக்க மாட்டாங்க.''''சரி வா போகலாம்,'' என, இருவரும் வெளியில் வந்தனர். டிரைவரை வேண்டாமென கூறி, தானே காரை ஓட்டினான், புகழேந்தி. வீட்டை விட்டு வெளியில் வந்ததும், ''சுபாங்கியோட பேச்சுக்கெல்லாம் நீ பதில் சொல்லிட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, புகழ்,'' என்றான், பிரபாகர். ''எப்போது பார்த்தாலும் குத்திக்கொண்டே இருந்தால், நான் என்ன செய்ய?''''அது, அவள் இயல்பு என, விட்டுவிட வேண்டியது தான்.''திடீரென்று வண்டியை இடது பக்க, விசாலமான ரோட்டில் திருப்பினான், புகழேந்தி. ''ஏன், இந்த பக்கம் போற... சென்னைக்கு நேர் ரோடு தானே!''''கயலைப் பார்த்து சொல்லிட்டுப் போக வேண்டாமா?''சிரித்தபடி, ''சுபாங்கி சொல்வதை போல தான் நடக்கிறது. இந்த விஷயத்தில் மட்டும் பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்,'' என்றான், பிரபாகர். மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்தி, இவர்கள் போன போது, கயல்விழியின் அறையில், பெரிய டாக்டர் இருந்தார்.''இவங்க குணமாயிட்டாங்க. 'டிஸ்சார்ஜ்' பண்ணி கூட்டிட்டுப் போகலாம், சார்,'' என்றார், புகழேந்தியிடம். ''அவசரமாக சென்னை போறேன், டாக்டர். நாளை வந்து விடுவேன்.''''நீங்க எது சொன்னாலும் சரி, சார். 'டிஸ்சார்ஜ் சம்மரி' தயார் பண்ணிடச் சொல்லிடறேன்.''''ஓ.கே., டாக்டர்!''''அப்ப நான் வரேன். நீங்க போயிட்டு வாங்க.''டாக்டர் அறையை விட்டு அகன்றதும், புகழேந்தியை ஏறிட்டாள், கயல்விழி. ''என்ன, கயல்?''''என்னை, 'டிஸ்சார்ஜ்' பண்ணினால், நான் எங்கு போவேன். எனக்கு வீடு வாசல் எதுவும் கிடையாதே.''''எனக்கு அரசு, அரண்மனை மாதிரி வீடு கொடுத்திருக்கு, கயல். அவ்வளவு பெரிய இடத்தில் உனக்குத்தானா இடமில்லாமல் போகும்?''''எப்போ திரும்பி வருவீங்க?'' என, கேட்டாள், கயல்விழி. ''நாளை வந்து விடுவேன். மறுநாள் வந்து உன்னை அழைத்து போகிறேன். சரியா, கயல்?''''சரி...'' எனக் கூறி, தலையாட்டினாள்.இருவரும் மீண்டும் வந்து காரில் ஏறினர். எல்லை தாண்டியதும் வண்டியை, ஓரமாக மரத்தடியில் நிறுத்தச் சொன்னான், பிரபாகர். ''என்ன, பிரபா?''''நிறுத்தேன், சொல்றேன்.''நிறுத்தினான், புகழேந்தி. முன்பக்க சட்டை பாக்கெட்டிலிருந்து, மொபைல் போனை எடுத்து, அந்த வீடியோவை போட்டு காட்டினான், பிரபாகர். முழுவதும் பார்த்து மிரண்டு போனான், புகழேந்தி. ஆத்திரம் பொங்கி வந்தது. நீர்வளூர் காட்சி முழுவதும் மனதில் நிழலாடியது. போர்க்களமாக காட்சியளித்த அந்த இடம். எரிக்கப்பட்ட வாகனங்கள், சூறையாடப்பட்ட வீடுகள், அநியாயமாக கொல்லப்பட்ட நான்கு உயிர்கள், கதறி ஓலமிட்ட பெண்கள்...இத்தனைக்கும் காரணம், தன் மாமனார் தான். அந்த ஊர், மேல் ஜாதி மக்களில்லை. பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து, அடியாட்களை ஏவி, இக்காரியத்தை செய்ய வைத்திருக்கிறார். நெஞ்சு கொதித்தது. இச்சிறுமை கண்டு மனசு பொங்கியது. தன்னை வீழ்த்த, ஒன்றும் அறியாத அந்த அப்பாவி மக்களை வீழ்த்தியிருக்கிறார்.''ஏன் பிரபா, சொந்தப் பிரச்னையை மனதில் கொண்டா, அரசு விஷயத்தில் பழி தீர்ப்பது? அதுவும் இப்படியா? இதை விட அதே அடியாட்களை வைத்து, என்னை கொன்று, ஒட்டுமொத்தமாக பழியை தீர்த்துக் கொண்டிருக்கலாமே! ''அரசுக்கு அல்லவா கெட்ட பெயர். டில்லி ஆணையத்திலிருந்து விசாரணை செய்ய ஆட்களை அனுப்பி வைக்கிற அளவுக்கு போய் விட்டதல்லவா?''''இந்த அளவுக்கு போகும் என, அவர் நினைத்திருக்க மாட்டார்.''''அது எப்படி பிரபா? அமைச்சர் பதவியில் இருப்பவருக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும்?''''வன்மமும், கோபமும் கண்களை மறைக்கும், புகழ்.''''இது எனக்கு மட்டுமா அவப்பெயர். தலைமைக்கும் சேர்த்தல்லவா அவப் பெயர். இப்படிப்பட்டவர்களை என்ன செய்ய முடியும்?''''ஒன்றும் செய்ய முடியாது, புகழ். இவரைப் போன்றவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அரசியல், ஆட்சி மற்றும் கட்சிக்கு இவர்களை போன்றவர்கள் தேவை. ''இவர்களெல்லாம் கட்சிக்கு போஸ்டர் ஒட்டிய காலத்திலிருந்து இருப்பவர்கள். இவர்கள் இல்லாவிட்டால், கட்சி நடத்த முடியாது; ஆட்சியை பிடிக்க முடியாது; பிடித்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது.''ஆதியிலிருந்து கட்சி வளர்க்கப் பாடுபட்டவர்களை விட்டுவிட முடியாது என்பது, தலைமைக்கு தெரியும். ஆட்சியோ, அரசியலோ சாதாரணமில்லை, புகழ். வெறும் நல்லவர்களை மட்டும் வைத்துக் கொண்டால், ஆஸ்ரமம் தான் அமைக்க முடியும்.''இப்போதெல்லாம் ஆஸ்ரமங்களில் கூட, நல்லவர்கள் இல்லை. சாமியார்கள் என சொல்லப்படுவோர் கூட, உள்ளுக்குள் தாதாவாக இருப்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். ஒரு ஆஸ்ரமம் நடத்தவே, இத்தனை சாணக்கியத்தனங்கள் தேவைப்படுகிறது என்ற போது, அரசியலுக்கு தேவைப்படாதா...'' என்றான், பிரபாகரன்.''சில நிஜங்கள், பொய்களை விட அதிகம் கஷ்டப்படுத்துகின்றன, பிரபா.''''உண்மை தான். நீ, ஒரு கட்சி ஆரம்பித்து, தலைமை ஏற்று, தேர்தலை சந்தித்து, அரியணையில் அமர்ந்து பார். அப்போது தான் கஷ்டம் தெரியவரும். அரியணை என்பது, ரோஜாப் பூக்களைக் கொண்ட படுக்கையல்ல. பஞ்சு மெத்தையல்ல. முட்களால் ஆனது என்பது தெரிய வரும்.'' ''ஐயோ வேணாம் சாமி. ஆளை விடு. மூச்சு முட்டுது எனக்கு.''''குடிமைப் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்று, எத்தனையோ பொறுப்பான பதவிகளில் இருந்து, இன்று மாவட்ட ஆட்சியராகியிருக்கும் உனக்கே மூச்சு முட்டினால், வெகுஜனமான எங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்,'' எனக் கூறி புன்னகைத்தான், பிரபாகர். சென்னைக்குள் நுழைந்து, தலைமைச் செயலகம் இருக்கும் சாலையைத் தொட்ட போது, ''நீயும் தலைமைச் செயலரை சந்திக்க, என்னோடு வாயேன், பிரபா,'' என்றான், புகழேந்தி.''வேணாம், புகழ். நீ, அலுவல் நிமித்தமாய் அவரை சந்திக்கப் போகிறாய். அதுவும், அவரது அழைப்பின்படி செல்கிறாய். நான் உடன் வருவது சரியாக இருக்காது.''''நீ சொல்வதும் சரி தான், பிரபா.''''அவர் பதவி ஏற்றதிலிருந்து, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் ஆசை, எனக்கும் இருந்தது,'' என்றான், பிரபாகர்.''பின் ஏன் சந்திக்காமல் விட்டாய்?''''நான் சந்திப்பதா முக்கியம். பெரிய பதவி. பொறுப்புகளும் அதிகம் இருக்கும். முதல்வரோடு நேரடி தொடர்பில் இருக்கக் கூடியவர். எத்தனை வேலைச் சுமை இருக்கும். அதில் குறுக்கிட்டு, நேர நெருக்கடியை ஏற்படுத்த, நான் விரும்பவில்லை,'' என்ற நண்பனை திரும்பிப் பார்த்து பெருமையாக புன்னகைத்தான், புகழேந்தி.''இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம், புகழ்?''''என் பிரபா, எதையும், காரணத்தோடு செய்பவன் என, அர்த்தம்!''''அது சரி, புகழ், நீ பாட்டுக்கு கயல்விழியிடம், 'டிஸ்சார்ஜ்' செய்து, வீட்டுக்கு அழைத்துப் போவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறாயே. அதற்கு, சுபாங்கி ஒப்புக் கொள்வாள் என, நினைக்கிறாயா? ஏற்கனவே அவள் மீது, செம கடுப்பில் இருக்கிறாள்.''''வழி வகை இல்லாமலா சொல்லிவிட்டு வந்திருப்பேன், பிரபா?''''எந்த வழி, என்ன வகை? பேச்சுக்கு பேச்சு, கயல்விழியை பற்றி கரித்துக் கொட்டுகிறாளே தவிர, பெயர் தெரியாது. நேரிலும் பார்த்ததில்லை. புகைப்படங்களிலும் கண்டதில்லை. நான் தான், 'மீடியா' ஆட்களையும், பத்திரிகைகாரர்களையும் அவளை நெருங்க விடவே இல்லையே. அந்த தைரியத்தில் தான், கயலை வீட்டுக்கு கூட்டிப் போகப் போகிறேன்.''''பின்னால் தெரிய வந்தால்...'' ''கயல் நிரந்தரமாக, அந்த வீட்டில் தங்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களுக்கு தானே. 'டிஸ்சார்ஜ்' ஆனாலும் அடுத்தடுத்து, 'செக் -அப்'பிற்கு கூப்பிடுவர். அதன் பிறகு, சென்னை தான். அவள் விட்ட படிப்பைத் தொடரணும். ஐ.ஏ.எஸ்., ஆகணும். அவள் அப்பாவின் ஆசையை, கனவை நிறைவேற்றணும்,'' என, வரிசையாக அடுக்கினான், புகழ். பிரமித்துப் போனான், பிரபாகர். ''நீ வெறும் கோடு தான் போட்டிருப்பதாக நினைத்தேன். இப்போது தான் தெரிகிறது. நீ ரோடே போட்டு விட்டாய்!''புகழேந்தி ஏதோ சொல்ல ஆரம்பித்த போது, தலைமைச் செயலகத்தை நெருங்கி விட்டதை கவனித்து, ''ஒரு ஓரமாக வண்டியை நிறுத்து, புகழ். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். வேலை முடிந்ததும் நீ கிளம்பி விடு. அப்புறம் போன் செய்கிறேன்,'' எனக் கூறி, காரிலிருந்து இறங்கி சென்றான், பிரபாகர். தலைமைச் செயலகத்தினுள் நுழைந்து, ஓரமாக வண்டியை நிறுத்தினான், புகழேந்தி.மின் துாக்கியில் சென்ற போது, 'தலைமைச் செயலருக்கு ஏதும் பரிசுப் பொருள் வாங்கி வந்திருக்கலாமோ...' என, தோன்றியது. உடனே, 'நல்ல காலம். வாங்கி வரவில்லை...' எனவும் நினைத்து கொண்டான். யாரிடமிருந்தும், எந்த பரிசுப் பொருளும் வாங்காதவர் அவர் என்பது, நினைவுக்கு வந்தது.இவன் போன போது, தலைமைச் செயலர், 'மீட்டிங்'கில் இருப்பதால், சற்று உட்காருமாறு கூறினர்.அவ்வளவு துாரம் உட்கார்ந்து காரோட்டி வந்தது, முதுகெலும்பெல்லாம் வலித்தது. ஓர் ஓரமாக ஒதுங்கி சுவரில் சாய்ந்து நின்று, தலைமைச் செயலருக்காக காத்திருக்க துவங்கினான், புகழேந்தி.தான் பதவி ஏற்ற பின், தலைமைச் செயலரை, மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற்ற போது பார்த்தது தான். பார்ப்பதற்கு இளமையாக, கல்லுாரி மாணவரைப் போல் தெரிந்தார். 'எண்ணங்கள் பழுதுபடாமல் துாய்மையாக இருக்குமானால், முகத்திலும், உருவத்திலும் அழகும், இளமையும் தானாக வந்து குடிகொள்ளுமோ...' என, நினைத்தான். அதன்பின், அவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம், அவனுக்கு கிடைக்கவே இல்லை. இன்று வாய்த்ததில் சந்தோஷப்பட்டான். கூடவே, முதல்வரையும் சந்திக்க போவது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.கூட்டத்தை முடித்துவிட்டு, தலைமைச் செயலர், தன் அறைக்கு சென்ற போது, அங்கு நின்றிருந்த புகழேந்தியை பார்த்து விட்டார். சினேகமான புன்னகையோடு, ''வாங்க,'' என்றவரின் பின்னாலேயே, அவரது அறைக்குள் நுழைந்தான், புகழேந்தி.அறை சுத்தமாக இருந்தது. மேஜை மீது குவிந்து கிடக்கும் கோப்புகள் இன்றி, துடைத்து வைத்த மாதிரி காணப்பட்டது. கோப்புகளை தேங்க விடாமல், அவ்வப்போதே படித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி விடுவார் போலிருக்கிறது. இந்த திறமையும், ஒழுங்கு முறைகளும் தான், இவரை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ''உட்காருங்க,'' என்றவாறு அமர்ந்தார், அவர். ஆசிரியருக்கு கீழ்படியும் மாணவனைப் போல், சட்டென்று உட்கார்ந்து கொண்டான், புகழேந்தி.''நீங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். மேலும், கொஞ்சம் பொறுப்புணர்வோடும் செயல்பட்டிருந்தால், இதை தவிர்த்திருக்கலாம்,'' என, தலைமைச் செயலர் நேரடியாக விஷயத்தை தொட்டதும், பிரபாகர் காட்டிய வீடியோ நினைவுக்கு வந்து, சுறுசுறுவென்று வார்த்தைகள் வாய் வரை வந்துவிட்டன.— தொடரும்இந்துமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !