விசேஷம் இது வித்தியாசம்: மருத்து வரை, கடவுள் என்பது ஏன்?
நவ.,7 - தன்வந்திரி ஜெயந்தி ஆபத்தான நிலையில் உள்ள எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றுபவர்கள், மருத்துவர்கள். இதனால் தான், நோயாளி பிழைத்தவுடன், 'கடவுள் மாதிரி, என் பிள்ளையை, கணவரை, தாயை காப்பாத்துனீங்க...' என்று கைகூப்பி, அவர்களை, கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்துவர் மக்கள். பாரத தேசத்தில், புராண காலம் தொட்டே மருத்துவர்கள் இருந்துள்ளனர். மருத்துவத்துறையில், நம் தேசம் இன்று முன்னணியில் இருக்க காரணம், அன்றைக்கு அவர்கள் இட்ட அடித்தளம் தான். அந்த வகையில், நம் முதல் மருத்துவராக, மகாவிஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்தார். அவரது பெயர் தான், தன்வந்திரி. தன்வந்திரி என்ற சொல்லுக்கு, வானில் உலா வருபவர் என்றும், அறுவை சிகிச்சையில் நிபுணர் என்றும் பொருள். வானில் உலா வரும், சூரிய நாராயணரின் அம்சம், தன்வந்திரி எனவும் சொல்லப்படுவதுண்டு. புராணக் கதைகளின்படி, பாற்கடலைக் கடைந்த போது, விஷ்ணுவுக்குரிய சங்கு, சக்கரம் ஏந்தி பிறந்தார், தன்வந்திரி. விஷ்ணுவிடம், 'பாற்கடலில் இருந்து பிறந்த எனக்கு, பூலோகத்தில் இடம் வேண்டும்...' என்றும் கேட்டார், தன்வந்திரி. 'காசியில், தன்வா என்ற மன்னர் குழந்தைப் பேறு வேண்டி, ஆட்சி செய்கிறார். நீ, அவரது பிள்ளையாகப் பிறப்பாய். அவர், ஆயுர்வேதம் மற்றும் அறுவை சிகிச்சையில் நிபுணர். அவரிடம் மருத்துவம் பயின்று, ஆயுர்வேத மருத்துவத்தில் புகழ் பெற்று திகழ்வாய். கையில் அமிர்த கலசம், சங்கு, சக்கரம் மற்றும் அட்டைப்பூச்சி ஆகியவற்றுடன் பிறந்த நீ, அமிர்தம் கொண்டு, ஆயுள்விருத்தி கொடு. சங்கொலி, பல நோய்களுக்கு மருந்தாகும். சக்கரம் கொண்டு நோய்களை அறவே வேரறு. அட்டைப்பூச்சி, நம் உடலிலிருக்கும் கெட்ட ரத்தத்தை உறிஞ்சி, நோய்களைக் குணமாக்கும்...' என்றார், மகாவிஷ்ணு. அதன்படி, காசியில் பிறந்த, தன்வந்திரி, ஆயுர்வேதத்தில் புகழ் பெற்று விளங்கினார். 4448 வகை நோய்களை அவர் குணமாக்கினார் என்று சொல்வர். அவர், விஷ்ணுவின் அவதாரம் என்பதைத் தெரிந்து கொண்ட மக்கள், அவரைத் தெய்வமாக கொண்டாடத் துவங்கினர். அவரது பிறந்த நாள், தன்தேராஸ் என, பெயர் பெற்றது. 'தன்' என்றால், தனம் அல்லது செல்வம். தேராஸ் என்றால், தேய்பிறை பதிமூன்றாம் திதியான திரயோதசி. தீபாவளிக்கு முன்னதாக இந்த விழா கொண்டாடப்படும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். மருத்துவச் செலவு இல்லாமல் இருந்தாலே போதும். செல்வம் தானாக சேர்ந்து விடும் என்பதால் தான், தன்வந்திரி ஜெயந்தி, இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. பிற்காலத்தில், தன்வந்திரிக்கு கோவில்கள் தோன்றின. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில், தன்வந்திரிக்கு தனி கோவில் உள்ளது; இங்குள்ள சிலை ஏழு அடி உயரம் கொண்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள, தன்வந்திரி புகழ்மிக்கவர். கேரளாவில் திருச்சூர நெல்லுவாய், எர்ணாகுளம் தொட்டுவா, ஆலப்புழா மருதோர்வட்டம் ஆகிய இடங்களிலும் தன்வந்திரிக்கு கோவில் உள்ளது. தன்வந்திரி ஜெயந்தி நன்னாளில், நோயற்ற வாழ்வு வாழ பிரார்த்திப்போம். — தி. செல்லப்பா